Monday, December 30, 2013

கடுங்கண் ஐந்து

நான் Nintendo Wii கேம் விளையாடுவது குறைவு. அபூர்வமாய் ஒரு நாள் தோள்கள் தினவெடுத்து மகள்களுடனும் தங்கமணியுடனும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவேன். முதலில் அவர்கள் பிஸ்த்து காட்டும் விளையாட்டுகளில்லாம் சொல்லிச் சொல்லி என்னை தோற்கடித்து கழுவி ஊத்திவிடுவார்கள். அந்த மாதிரி நொந்து நூடூல்ஸாகும் தருணத்திற்கென்றே பிரம்மாஸ்திரமாய் டென்னிஸ் வைத்திருப்பேன். ஒவ்வொருத்தரா...ஒவ்வொருத்தரா வாங்கன்னு சொடக்கு போட்டு தோற்க வைக்க முனையும் போது தங்கமணி முதல் கேமில் தோத்த கடுப்பில் அடுக்களையில் குக்கரை வைத்து விட்டு, மூனு விசில் வந்தவுடன் கேஸை அமர்த்தச் சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுவார். "டேய் அதைப் போய் ஏன்டா குக்கர் விசில் அடிக்குதுங்கிறீங்க? எந்த குக்கர் மண்டயன்டா விசில உஸ்ஸ்ன்னு அடிக்கிறான்"ன்னு சுவத்தைப் பார்த்து கவுண்டமணி டயலாக் ஒன்னு விட்டுவிட்டு, "நீ போ ராஜாத்தி நான் பார்த்துக்கறேன்"-ன்னு சொச்சமிருக்கும் மானத்தை மகளிடமிருந்து செட் பாயிண்ட்டாக எடுக்க வியர்வை சிந்த ஆரம்ப்பிப்பேன். அடுத்த அம்பதாவது நொடியில் "கரெக்ட்டா ஆஃப் பண்ணிடுங்கன்னு..."ன்னு  அசரீரியாய் எச்சரிக்கை வரும். "அதெல்லாம் காலேஜ் காலத்திலேர்ந்தே எவ்ளோ விசில் அடிச்சிட்டிருக்கோம் எங்களுக்குத் தெரியாத விசிலா...அதெல்லாம் லெப்ட் ஹேண்டால அசால்ட்டா பண்ணுவோம்"ன்னு  சொல்லிவிட்டு ரெண்டாவது கேம் ஆடிக்கொண்டிருக்கும் போது குக்கர் ரொம்பக் கேவலமாய் உஸ்ஸூன்னு சத்தம் போடும். அப்ப மதுரை பாண்டிய மன்னனுக்கு வந்த மாதிரி வரும் பாருங்க ஒரு டவுட்டு... "இது எத்தனாவது விசில் சத்தம்....???"  தமிழ்சங்கம் தீர்த்துவைக்க முடியாத அந்த சந்தேகத்தை மகள்கள் கொடுக்கும் ஆளுக்கொரு ஆன்சரில் ஆவரேஜ் போட்டு குத்துமதிப்பாய் இன்னொரு சத்தம் போடவிட்டு அமர்த்தி, ஐந்து நிமிடம் கழித்துத் திறந்தால் ஒன்னு டைனோசர் வாந்தியெடுத்த மாதிரி குழைந்திருக்கும், இல்லை கஞ்சி போட்டு அயர்ன் பண்ணின மாதிரி வேகாத அரிசி விறைப்பாய் நின்று கொண்டிருக்கும். "ச்ச்சே நான் சொல்லல எல்லாம் கலிகாலம், சிகரெட் பிடிக்காதீங்கடான்னு தலை தலையா முகேஷ் அடிச்சிக்கிறார், கேட்டாத் தானே, மண்ணோடு மண்ணாப் போய் இப்போ பாரு அரிசி எப்படி வந்திருக்குன்னு" என்ற விளக்கமெல்லாம் எடுபடாது. அதற்கப்புறம் சங்கத்தில் இதற்கு தீர்ப்பு எப்படிச் சொல்லுவார்கள் என்பது இந்த பதிவுக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.

அடுத்த கடுங்கண் எனக்குத் தெரிந்து யுனிவேர்ஸலாய் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது. காய்கறி வாங்கும் கடையாகட்டும். சூப்பர் மார்க்கெட்டாகட்டும், தியேட்டர் இண்டர்வல் கூட்டத்தில் டாய்லெட்டாகட்டும், நாம் அவசரமாகப் போகவேண்டுமென்றால் அப்போது தான் நமக்கு முன்னால் பத்து க்யூ நிற்கும். பத்திலும் அனேகமாய் சமஅளவில் ஆட்கள் ரொம்பி வழிவார்கள். "வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம், டவுசர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அப்படியே ஓட்டமாய் ஓட வேண்டும் இல்லாவிட்டால் உட்காரத் தான் வேண்டும்" போன்ற தத்துவங்களெல்லாம் அப்போது தான் நியாபகத்துக்கு வரும். அதற்கேற்றபடியே இந்த தத்துவங்களையெல்லாம் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, க்யூ முன்பை விட தற்போது இரண்டடி வளர்ந்திருக்கும். முதலில் எல்லாம் கவுண்டரில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பேன் (டாய்லட் தவிர்தலாய்). பெண்கள் இருந்தால் கட் அண்ட் ரைட்டாக வேலை மளமளவென்று செய்வார்கள், க்யூவும் வேகமாய் கரையும். கவுண்டரில் ஆம்பிளைக் கபோதிகள் இருந்தால் முன்னாடி இருக்கும் க்யூவைப் பற்றிக் கவலைப் படாமல் "இங்கதான் சார் இருந்துது நேத்திக்குப் பார்த்தேன் இப்ப காணோம்ன்னு கீபோர்டில் க்யூவைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சார் அங்க தான் சார் அப்படியே ஸ்ட்ரெயிட்டா போய் கீழ கீழ என்று பக்கத்திலிருப்பவர் வழி சொல்லிக்கொண்டிருப்பார். அதே போல் க்யூவில் நமக்கு முன்னால் வயதானவர்கள் இருந்தால் "அந்த ஃபாரம் இல்லை தாத்தா இதைப் பூர்த்தி செய்யுங்க" என்று தாமதமாகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உண்டு. இப்படி எல்லாம் ஸ்ட்ராஜிக்கலாய் யோசித்து ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துப் போனால் நம்மளோட அதிர்ஷ்டம் மட்டும் பக்கத்து க்யூவிற்கு போய் நின்று கொண்டுவிடும். நமக்கப்புறம் பதினைந்து நிமிடம் கழித்து வந்த ஒருவர் அடுத்த க்யூவில் நமக்குப் பின்னால் நாலடி தள்ளி நிற்பார். நம்மிடம் "சார் ஒரு நிமிஷம் பேனா குடுக்கறீங்களா.." என்று உரிமையோடு கடன் வாங்குவார், திடீரென்று இரண்டு நிமிடம் கழித்துப் பார்த்தால் நம்மைவிட இரண்டடி முன்னால் நின்று கொண்டிருப்பார். நமக்கு ஸ்டாக் மார்கெட் சரிவது மாதிரி வயிற்றில் கரைச்சல் கரைக்கும். அதை விடக் கொடுமை அந்த க்யூவிலும் நம்மை மாதிரி ஒருவர் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு பாஸ்டா போகிறதா என்று நம்ம க்யுவை நோட்டம் விடுவார். நம்மைப் பார்த்தவுடன் அவருக்கு உதட்டில் ஒரு புன்முறுவல் வரும் பாருங்க - அவுங்க க்யூ பாஸ்டா போகிறதாம்...துடப்பக் கட்டை. டாய்லெட்டில் கூட முன்னால் இருப்பவர் கூட போனோமா வந்தோமான்னு இல்லாம நிதானமாக பேரல் பேரலாய் இறக்கிக் கொண்டிருப்பார். ஆச்சா ஆச்சான்னு நாம் துடிப்பது கேட்கவே கேட்காது. நமக்கு அப்படியே முட்டிக் கொண்டும் வரும்...நம்ம யோகம் அப்படி.

அடுத்தது - ஒரு நாள் ஆபிஸிலிருந்து வந்து வந்து கொண்டிருக்கும் போதோ, இல்லை குடும்பத்துடனோ, நல்ல சாப்பாடு சாப்பிடலாமே என்று ஹோட்டலுக்குப் போவீர்க்ள். வயிறு கப கபன்னு பசிக்கும். என்ன சாப்பிடுறீங்கன்னு வாஞ்சையாய் கேட்கும் சர்வரையே முழுங்கிவிடலாமா என்றளவிற்கு பசி காதைடைக்கும் கண்ணை மறைக்கும். தந்த மெனு கார்டில் ஆசை ஆசையாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் சர்வர் "சாரி சார் அது சனி ஞாயிறு மட்டும் தான் இன்னிக்கு இல்லை" என்பார். உங்களுக்கு மெனுகார்டில் வேறு எதுவுமே செட்டாகாது. ரொம்ப மெனெக்கெட்டு இதக் கொண்டுவாப்பான்னு எதையோ ஒன்னை ஆர்டர் செய்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பினால் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு சாபிட எதுவாய் அவருடைய ஆர்டர் டெலிவரியாகியிருக்கும். அடாடா பார்ப்பதற்கே அவ்வளவு பிரமாதமாய் இருக்கும். அவரும் சப்புக் கொட்டிக் கொண்டு புகுந்து விளையாடுவார். சே அத ஆர்டர் பண்ணியிருக்கலாமே என்று தோன்றும். சர்வரைக் கூப்பிட்டு ஆர்டரை மாத்த சொன்னால் சாரி சார் ஆர்டர் போட்டுட்டாங்க இப்ப இப்ப வந்திடும்னு கொண்டு வைப்பார். சனியன் வாயில் வைக்க விளங்காது வீட்டு சாப்பாடே எவ்வளவோ தேவலாம் என்றாகிவிடும். இப்பல்லாம் என்ன வேணும்ன்னு கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பக்கத்து சீட் ஆர்டரை அப்படியே ப்ளஸ் ஒன் போட்டு டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிடறேன்.

நல்ல புத்தகம் படிப்பது என்பது தியானத்தைத் தாண்டிய நிஷ்டையில் ஈடுபடுவது மாதிரின்னு பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. (எந்த விஞ்ஞானின்னு கோட்டு கோபிமாதிரி கேட்டீர்களேயானால் -  வில்லேஜ் விஞ்ஞானிங்க) இந்த மாதிரி நிஷ்டையில் ஈடுபடுவது எப்பவாவது நடக்கும். அன்றைக்கு தங்கமணிக்கு கடைத்தெருவிற்குப் போக வேண்டியிருக்கும், கொஞ்சம் ட்ராப் செய்யக் கூடாதா என்று கேட்பார். "நானே ப் எங்கே போடனும் ஸ்பேஸ் எங்கே விடனும்னு தெரியாம இருக்கேன்..."ன்னு சலித்துக் கொண்டு தட்டிக் கழிப்போம். "அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்து மெல்லிடைப் பற்றி மெதுவாக தன்னருகில் அமரச்செய்தான்"னு இலக்கியத்திற்குள் தீவிரமாய் போய்க் கொண்டிருக்கும் போது, "மழை வர்ற மாதிரி இருக்கு, கார்டன்ல துணி உணர்த்தியிருக்கு, ஒரு கண்ணு வைச்சிக்கோங்க" என்று தங்கமணி சொல்வது காதில் விழும் ஆனா விழாது. இங்கே யவனகுமாரன் கடசலில் வேலை பார்பது மாதிரி தேவியோடு இழை இழைன்னு இழைத்துக் கொண்டிருப்பான், கரெட்க்டா இளையதேவி தன்னை மறந்து கண்ணைச் சொருகி அவன் கரம் பற்றி..அடுத்த லெவலுக்கு யத்தனிக்கும் போது....... இழவெடுத்த வேங்கைமாறன் எங்கேர்ந்தோ வாளோடு வந்து கைது செய்து, நமக்கு சமூக பிரஞ்கை வரும் போது "நான் சொன்னதும் மழை வந்துச்சான்"னு மழை காட்டு காட்டுவென்று காட்டிக் கொண்டிருக்கும். அடடான்னு பதறிப் போய் சீரியல் நாயகி மாதிரி பிழியப் பிழியப் பிழிந்து கொண்டிருக்கும் போது வேங்கைமாறன் மாதிரி தங்கமணியும் வந்துவிடுவார். அப்புறமென்ன திரும்பவும் மழை ஆரம்பிக்கும் - இந்த முறை இடியுடன்.

எங்கவூர் சாந்தி உயர் தர சைவாள் கபேயில் சோம்பல் படாமல் டெய்லி தோசைக்கரைப்பார்கள். கிச்சனில் அவ்வளவு தோதுப் படாது என்று ஹோட்டலுக்கு சைட் ரோடில் வைத்துத் தான் அரிசி மாவையும் உளுந்து மாவையும் மாஸ்டர் கலப்பார். ஒரு பெரிய அண்டாவில் முதலில் பாதி அரிசி மாவை கொட்டி பிறகு உளுந்து மாவு, அப்புறம் திரும்பவும் அரிசிமாவு. அதற்கப்புறம் அவருடைய கஷ்கம் வரை அண்டாவில் கையை விட்டு சும்மா கல கல கலவென்று கலப்பார் பாருங்கள். உப்பு கரெக்டாய் இருக்கும். நிற்க. சிறுது காலம் முன்னே பேஷன் என்ற பெயரில் லேடிஸ் ஒரு கிரடிட் கார்டை மட்டுமே வைக்க முடியமளவிற்கு கையகல பர்ஸை நீளமான வாரில் குறுக்காலே தொங்கவிட்டுக் கொண்டு ஹேண்ட்பேக் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இதுவே கொஞ்சம் நாள் கழித்து Gucci,  Prada போன்ற ப்ராண்டுகள் புண்ணியத்தில் ஒரு மாத மளிகை சாமான் மொத்தமும் வாங்கி வருவது போன்ற சைஸில் வர ஆரம்பித்தது. நிதமும் இந்த மளிகை சாமான் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் எனக்கு முன்னால் ஒரு பெண்மணியாவது ஏறுகிறார். இங்கே ட்ரைவர் தான் கண்டெக்டடுரும் என்பதால் பஸ் கார்டைத் தேய்த்து பச்சை லைட்டு வந்த பிறகு தான் பேருந்தின் உள்ளே போக முடியும். இந்த மளிகை சாமான் பெண்மணிகள் ஏறும் போதே பஸ் பாஸ்கார்டை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டாமோ, ஏறிய பின் கையை அந்த ஹேண்ட் பேக்கில் விட்டுத் துளாவுவார்கள் பாருங்கள், எங்கூர் சாந்தி கபே தோசைமாவு மாஸ்டர் தான் நியாபகத்துக்கு வருவார். ஹூம் ரெண்டு பக்கா தோசை மாவை சல்லிசாய் கலந்து வைத்துவிடலாம் ஆனால் அந்த பஸ் கார்டு மட்டும் இவர்களுக்கு மாட்டவே மாட்டாது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 11, 2013

பதிற்றுப் பத்து

பதின்ம வயது(டீன் ஏஜ்) போய் the so called யூத்தாகிக் கொண்டிருக்கிறேனோ என்பதற்கு ஏகப்பட்ட அறிகுறிகள் தென்படுகின்றன கவலையாய் இருக்கிறது.
a. பேஸ்புக் மற்றும் சாட்டில் ஹார்ட் படம் போட்டு நடுவில் அம்புக்குறி துளைத்த படம் எப்படிப் போடுவது என்பது இன்னும் பிடிபடவே இல்லை. அதே போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி லைக் போடும் படமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. கொடுமை என்னவென்றால் கண்ணடிக்கும் ஸ்மைலி தவிர எந்த ஸ்மைலி பட ஷார்ட்கட்டும் மனதில் நிற்பதே இல்லை.
b. எப்பேற்பட்ட அரதப் படத்தையும் கடைசி கிரெடிட்ஸ் போடுவது வரை பார்த்த காலம் போய், இப்போதெல்லாம் மொக்கைப் படம் போட்ட பத்து நிமிஷத்திலேயே தூக்கம் வந்துவிடுகிறது
c. ROFLMAXXXX என்பதையாவது ஊகிக்க முடிகிறது. மற்ற சேட் சிலாங்ஸ்லாம் முழி பிதுங்கிறது. LOL, கொல்-ன்னு சிம்பிளாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
d. பொண்டாட்டி கூட ஷாப்பிங் போனா அடிக்கடி உச்சா வந்துவிடுகிறது.
e. எல்லாவற்றையும் சுருக்கி எழுதுகிறேன் பேர்வழின்னு come என்பதை cum என்று எழுதினால் கூப்பிட்டு காதைத் திருகத் தோன்றுகிறது
f. நல்ல முருகலா வார்த்துப் போடு என்று வக்கணையாய் நாக்கு கேட்கிறது. இன்னிக்கு என்ன சமைக்க என்ற தங்கமணித் தருணங்களில் டாண் டாணென்று விதவிதமாய் விவரிக்க முடிகிறது.
g. அட இன்னும் ஒரு முடி கூட நரைக்கலையே காத்ரேஜ் டையான்னு கேட்டால் கோபம் வருகிறது. நான் ஒன்லி shampoo basedன்னு கத்தத் தோன்றுகிறது
h. இப்போவெல்லாம் அடிக்கடி வீக்கெண்டுகளில் குளிக்கத் தோன்றுகிறது. டிபன் சாப்பிட்டால் டீக்கு மனம் ஆலாய் பறக்கிறது. Self-reliance-ஐ முன்னிருத்தி அட்டகாசமான டீ போடும் கலை கைவசமாகிக் கொண்டிருக்கிறது. ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குடிக்கிறேளா, சூப்பராய் போடுவேன் குடிக்காம போகக் கூடாது என்று உபசரிக்கும் டிகாக்க்ஷன் மாமாக்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
i. ஜிம்முக்கு போகவேண்டிய நாட்களில் எப்படியாவது சுண்டுவிரலில் சுளுக்கு வந்து தொலைத்துவிடுகிறது. கொடுமை என்னவென்றால் தங்கமணி அதை நம்ப மறுக்கிறார். ஜிம்மில பெருசு பெருசா டிவி வைச்சிருக்கீங்களேடா இப்படி ஐயோ ராமான்னு கத்தற இங்கிலீஷ் பாட்டப் போடாம, நல்ல படமும், கால நீட்டி உட்கார்ந்து பார்க்கிறதுக்கு ஒரு பென்ச்சும் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க, காசு வாங்குறீங்களே தவிர கஸ்டமர் சர்வீஸ் இல்லையேப்பான்னு கம்ப்ளைண்ட் பண்ணத் தோன்றுகிறது.
j. பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்போது மூத்த பெண்ணும் ட்ரெஸ் செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார், டைட்டன் வாட்ச் டாடி ஏனோ நினைவுக்கு வருகிறார். ஹூம்ம் இனிமேல் தான் ஸூடுலில் உட்கார்ந்து கொண்டு பியானா வாசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்
ஆனால் அதே சமயம் curious case of Benjamin Button மாதிரி இளமை திரும்பிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளும் நிறையவே தெரிகின்றன.
1. பிடிக்கவே பிடிக்காத இங்கிலீஸ் பாப் இசை ரகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கிறது. வீடியோவில் ஷகிரா யாரு ரியானா யாரு பியான்ஸே யாருன்னு டக்கு டக்குன்னு சொல்லி விடுகிறேன்.
2. யாராவது ஊஞ்சலில் ஆடுவதைப் பார்தாலே தலை சுற்றுவது போய் இதெல்லாம் ஜுஜுபி லெஃப்ட் ஹேண்டால அசால்டா சுத்துவேன்ன்னு இப்போதெல்லாம் தீம் பார்க் ரைடுகளில் தெகிரியமாய் ஏறி மனம் குதூகலிக்கிறது.
3. சாயம் போன ஜீன்ஸெல்லாம் போடப் பிடிக்கிறது. அதுவும் நன்றாக இருப்பதாக நிறைய பேர்கள் (அதாவது பெண்கள்) கூறுகிறார்கள்.
4. ராக்கோழி மாதிரி எத்தனை மணி வரை வேண்டுமானாலும் முழிக்க முடிகிறது ஆனால் இந்த மிட்நைட் காலை ஆறரை மணிக்கு எழுந்திரிப்பதற்குத் தான்...ம்ஹூம்.. இன்னும் ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ், அப்பவே எழுந்தாச்சுமா இன்னிக்கு என்னல்லாம் வேலைன்னு அப்படியே ப்ளான் பண்றேன்... சனியன் பிடிச்ச கடிகாரம், காலையில் மட்டும் ஒரு பத்து நிமிஷம் லேட்டா ஓடினாத் தான் என்ன.
9. சமந்தா போய் இப்போதெல்லாம் நஸ்ரியாவைப் பிடிக்கிறது. ஆனா நஸ்ரியாக்கு உங்களப் பிடிக்கனுமே என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால் நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்கணும்ன்னு எம்ஜியார் சொல்லியிருக்கிறார்.
10. ஆபிஸ் பார்ட்டியில் "ஹே..." என்று செளஜன்யமாய் தோளை தட்டிக் கூப்பிட்டு பெண்கள் கடலை போடுகிறார்கள்.
(இதையெல்லாம் முதல் பத்தியில் சேர்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மேலே சொன்ன ஐந்து ஆறு ஏழு- காரணங்கள் தெரியாமல் போகக் கடவது. சிரிப்பவர்களுக்கு காரணம் நம்பர் எட்டும் கூடுதலாய் காணாமல் போகக் கடவது)