Tuesday, February 05, 2013

மினி ஸ்கர்ட்

"சே அவள் பக்கத்தில் உட்கார்ந்திருக்க மாட்டேனா" -  நான் என்னையே சபித்துக் கொண்டிருந்தேன். வேலைக்குப் போக அப்படி ஒன்றும் அவசரமில்லை. அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அந்த பாதாள ரயில் கிளம்புவதற்கு நிறைய நேரம் இருந்தது. எப்போதும் விண்டோ சீட் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வருவேன், இன்றும் அப்படித் தான். ஒவ்வொரு சீட்டாய் பார்த்துக் கொண்டே வரும் போது - ஒரு சீட்டில் அவள் மட்டும் இருந்தாள். மிக அழகாய் இருந்தாள். அதவிட மிக அழகாய் ஒரு மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்தாள். கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதவிசாய் அமர்ந்திருந்தாள். ஸ்கர்ட்டின் நடுவில் இருந்த பிளவு அவள் தொடையை பளீரென்று டாலடித்துக் கொண்டிருந்தது. யானை தந்தத்தின் நிறம் அவள் மேனி. அவ்வளவு தான் பார்த்தேன். இத்தனையும் மீறி அனிச்சையாய் அவளுக்கு முந்தின சீட்டில் போய் உட்கார்ந்துவிட்டேன். சே...அவளுக்குப் பக்கத்து சீட் காலியாய் தான் இருந்தது. படெக்கென்று அங்கு உட்கார்ந்திருக்க மாட்டேனா. சொன்னேனே எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அவளுக்கும் என்னைப் போல விண்டோ சீட் பிடிக்கும் போல.

"மே ஐ ஹாவ் யுவர் டிக்கெட் ப்ளீஸ்" என்று டிக்கெட் பரிசோதகர் கேட்ட போது நான் அவளைப் பற்றிய நினைவுகளிலிருந்தேன். சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது. அவர் அவளிடம் டிக்கெட் சரிபார்த்துக் கொண்டிருந்த போது "ட்ரெயின் எத்தனை மணிக்கு ரெட்டிங் போய்ச் சேரும்?" என்று கேட்பது மாதிரி அவளைப் பார்க்க திரும்பினேன். பிரம்மஹத்தி அவளை முக்காலேவாசி மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எனக்கு என்று வந்து சேர்வார்களே. திரும்பி விட்டேன். ஆனாலும் கிடைத்த நூலிழை நேரத்தில் பார்த்ததை மனதில் ஃபோட்டோ எடுத்து விட்டேன். தொடையில்  வைத்திருந்த கையும், செதுக்கினாற் போன்ற காலும் மட்டுமே தெரிந்தது. டார்க் மெருன் கலர் ஸ்கர்ட் அவள் நிறத்தை தூக்கலாக காட்டியது. பாந்தமாய் நெயில் பாலீஷ் போட்டிருந்தாள். அதில் இலை போல் ஏர் பிர்ஷ் டிசைன். அவள் பக்கத்திலிருந்த சீட் காலியாய் தான் இருந்தது. அதில் ஸ்கர்டுக்கு மேட்சிங்காய் ஹாரட்ஸ் ஹாண்ட்பேக் வைத்திருந்தாள்.

மோகன சிலை என்பார்களே அது மாதிரி இருந்தாள். ஆள் பாதி ஆடை பாதி. இன்னும் முகத்தை மட்டும் சரியாய் பார்க்க முடியவில்லை. பேசாமல் இடம் மாறி அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று தோன்றியது. ரொம்ப கூட்டமில்லாமல் ஏகப்பட்ட சீட் காலியாய் இருக்கும் போது அவள் பக்கத்தில் உட்கார்ந்தால் ஏதாவது தப்பாய் நினைத்துக் கொள்வாளோ? எழுந்து யாரையோ எதிர்பார்த்து பார்ப்பது மாதிரி பின்னால் பார்த்தேன். தலையை திருப்பும் போது மீண்டும் அவளைப் பார்த்தேன். முகம் ரொம்பவே அழகாய் இருந்தது. நேர்த்தியாய் ஐபிரோஸை செதுக்கியிருந்தாள். மாசு மருவில்லாத பளீரென்ற முகம். அழகான உதட்டில் உறுத்தாத கலரில் லிப்ஸ்டிக். தோள் வரை பாப் கட்டில் முடி. ஏதோ ஒரு சினிமா நடிகையை நினைவு படுத்தினாள். ரொம்ப ரொம்ப ரொம்பவே அழகாய் இருந்தாள். அவள் ஸ்கர்ட்டும் அந்த பளீரும் எனக்கு கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.

கண்ணை மூடிக்கொண்டு திரும்பவும் அவளை நினைத்துப் பார்த்தேன். திடீரென்று யாரோ சன்னமாய் தொடுவது போலிருந்தது. திரும்பினால் உதட்டில் ஒரு சங்கடமான புன்னகையுடன் அவள் தான். " சாரி தூங்கும் போது எழுப்பிவிட்டேனா... மேலே..." என்று விரலைக் காட்டினாள். என் சீட்டுக்கு மேலே யாரோ வைத்திருந்த ஹோல்டால் பையில் பால்புட்டியிலிருந்து லேசாக பால் ஒழுகிக் கொண்டிருந்தது. பால் ஒழுகி தரையில் தான் சொட்டிக் கொண்டிருந்தது. கவனமாய் இல்லாவிட்டால் என் மேல் விழுந்திருக்கும். அதை சுட்டிக்காட்டத் தான் கூப்பிட்டிருக்கிறாள்.

"ரொம்ப தேங்கஸ்" - கொஞ்சம் கூடுதல் நட்புடன் சொன்னேன். இதை விட்டால் சான்ஸ் கிடைக்காது இதான் சாக்கு என்று படக்கென்று எழுந்து கொண்டேன். என் பையையும் எடுத்துக் கொண்டு நின்று கொண்டே வேறு சீட் தேடுவது மாதிரி பார்வையை விட்டு அவளிடம் வந்து நிறுத்தினேன்.

"இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் இங்க உங்க கிட்ட உட்காரலாமா"

"ஓ யெஸ், நோ இஷ்யூஸ் அட் ஆல்" அவளும் மிக எளிதாய் ஒத்துக் கொண்டாள்.

எனக்குப் படபடப்பாய் இருந்தது. உட்காரும் போது எங்கள் தோள்கள் லேசாய் உரசிக் கொண்டன. அவள் அணிந்திருந்த பெர்ஃப்யூம் மயக்கியது. அவள் கண்களில் சினேகமான ஒரு புன்னகை இருந்தது.

அவளே அறிமுகப்படுத்திக் கொண்டாள் "என் பெயர் நேத்ரா. அட்வர்டைசிங் எக்ஸிக்யூட்டிவாய் இருக்கிறேன்..தற்போது வேலை விஷயமாய் போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்க..?." -

அவளின் தன்மையான பேச்சு எனக்கு ஆறுதலாய் இருந்தது. "என் பெயர் ஸ்வப்னா...நான் சாஃப்ட்வேரில் இருக்கிறேன். ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க ஸ்கர்ட்டும் ஆக்சசரீஸும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க வாங்கினீங்க...? எப்படி கேக்கிறதுன்னு தெரியாம இவ்வளவு நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன்...."