Tuesday, September 01, 2009

கல்யாணம் - Prequel

ஏன்டி சுஜா சித்த பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிண்டு சின்ன மாமாவ கூட்டிண்டு நாலு தெருவுக்கு பத்திரிக்கை குடுத்து நேர்ல அழைச்சிட்டு வந்துடேன்..இந்த் பேப்பர்ல பெயர் அட்ரெஸ் இருக்கு, அத்தோட யார் யார எதுக்கு கூப்பிடனும்ன்னு டீடெயில்ஸும் இருக்கு. பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன..

என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....

ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...

யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...

அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...

ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...

ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...

நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...

ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்

இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...

ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...

டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற

இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...

ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா

....ம்ம்ம்

..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??

ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....

உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....

...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...

டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா

ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...

அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?

அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...

சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...

ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...

என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...

ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்

ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...

சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி

ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா

ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...

இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...

என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??

பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...

வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...

ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ

மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...

ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...

ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...

ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...

ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு

கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..

இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))