Thursday, July 23, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8

ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.

சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)

ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.

வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.

"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்

" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.

தொடரும்

Monday, July 20, 2009

அராகிஸ் ஹைப்பொகியா

"லீட்ஸ் போகும் ட்ரெயின் போய்விட்டதா...?"

"இன்னும் இல்லை ஆனால் நீ போய் பிடிப்பதற்க்குள் கிளம்பினாலும் கிளம்பிவிடும், அன்டர்வேரில பாம் கட்டி தொங்கவிட்ட மாதிரி நீ ஓடினால் ஒழிய ட்ரெயினை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஒருவேளை பிடித்துவிட்டாயானால் லீட்ஸில் இறங்கும் போது உனக்கு ஒரு கோப்பை குடுக்க செய்தி அனுப்புகிறேன்"

"உன் எடை அனேகமாக தொன்னூற்றி இரண்டு கிலோ இருக்குமே..."

"...?"

"இல்லை உனக்கு இருக்கும் கொழுப்பை வைத்து உன் எடையை ஒரு அனுமானம் செய்தேன்..." சொல்லிவிட்டு அந்த ரயில்வே சிப்பந்தியை திரும்பிப் பார்க்காமலேயே பாம் வைத்தது மாதிரி ஓடியதில் ட்ரெயினை பிடித்தேவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி உட்கார்ந்திருந்த இருபத்தி சொற்ப எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் நின்று கூட்டத்தை ஏற்றிப் போனால் ரயில்வே நஷ்டத்தை குறைக்கலாம் என்று தோன்றியது.

கிடைத்த ஒரே ஒரு ஜன்னலோர இருக்கைக்கு எதிரே பை மட்டும் இருந்தது ஆளை காணோம். ரொம்ப தள்ளி இரண்டு இந்தியப் பெண்மணிகள் எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை மாதிரி நீங்களும் மூளையை ரொம்பவே கசக்கி யோசித்திர்களானால் கண்டுபிடித்துவிடுவீர்கள். பிரபுதேவா படங்களில் அவர் நடனமமைத்த பாட்டுகளில் கதாநாயகனுக்கு இடமும் வலமுமாக இரண்டு பெண்கள் இடுப்பில் வட்டமாக கொட்டு வைத்துக்கொண்டு குலுக்கல் குத்தாட்டம் போடுவார்கள். ஒருவர் கொஞ்சம் வஞ்சனையில்லாமல் திடகாத்திரமாக இருப்பார்...இன்னொரு பெண்மணி ஒடிசலாய் மாடலிங் கச்சிதமாய் இருப்பார். பத்துக்கு ஆறு படங்களில் விஜய் இவர்களுக்கு நடுவில் கழுத்தில் கர்சீப் சகிதம் நட்பைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ நீயும் நானும் என்று உங்களைப் பார்த்து தத்துவ வரிகள் பாடிக்கொண்டிருப்பார். இவர்களும் சளைக்காமல் சுத்தி சுத்தி ஆடுவார்கள். அவர்கள் இருவரும் டேன்ஸ் பெண்மணிகள் மாதிரியே இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் நம் கதைக்கு உப்புப் பெறமாட்டார்கள். நீங்கள் அந்தப் பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த கொண்டிருந்த போது என் எதிரே வந்து உட்கார்ந்த காக்கேசிய (வெள்ளைக்கார) பதுமையை தவறவிட்டுவிட்டீர்கள். கண்கள் நாலாப் பக்கமும் இருக்கனும்..இல்லாட்டா இந்தக் காலத்துல தூக்கி சாப்பிடுவாங்க. நம் பதுமை மிக அழகாய் இருந்தாள். கருப்புக்கும் பிரவுனுக்கு நடுக் கலரில் இருந்த தலை முடி அவளை பளிச்சென்று காட்டியது. கல்யாணமாகாத என்னை மாதிரி இருபத்தைந்து வயது இளைஞர்களை சோதிப்பதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த மாதிரி இருந்தது. பெத்தாய்ங்களா செய்ஞ்சாங்களான்னு டவுட்டே வரவில்லை ...கண்டிப்பாக செய்திருப்பார்கள்.

"ஹலோ..எப்படி இருக்கிறீர்கள்" கூச்சமே இல்லாமல் அராகிஸ் ஹைப்பொகியா சாகுபடியை ஆரம்பித்தேன்(அதாங்க கடலை). இந்த ஒரு விஷயத்திற்காகவே வெள்ளைக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

"நான் நலம் நீங்கள்..?" கண்டிப்பாய் திரும்ப கேட்பாள் என்று தெரியும்.


"உங்களை பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தேன்..." "..." அவள் மணிரத்னம் படம் பார்த்ததே இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

"நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்"

"நன்றி.." நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் என்று அவள் திரும்பச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்பு. கீதையில் கிச்சு சொன்னதை நியாபகப் படுத்திக்கொண்டேன்.

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு..." யோசிக்க கூட இல்லாமல் அவள் உதட்டில் கசிந்த புன்னகை ஆயிரம் நக்கல் செய்தது. சே அழகாய் இருக்கிறாள் என்று சொன்னதற்கு முன்பு சொல்லி இருக்கவேண்டும். எனக்கு ஏன் அழகான பெண்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று தெரியவில்லை. வெள்ளை தோலுக்கு அம்சமான கலரில் உடையணிந்திருந்தாள். சீசனுக்கு பூக்கும் பூக்களுக்கு ஏத்த மாதிரி உடையை தேர்ந்தெடுப்பாள் போலும். உறுத்தாத கலரில் மேட்ச்சிங்காய் நெயில் பாலீஷ்.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா...?"

"..மங்கேயெ....???" அவள் இதழ் பெயரை எசகுபிசகாய் இழுத்த போதே தெரிந்து விட்டது கண்டிப்பாக படித்திருக்க மாட்டாள்.

"இல்லை...டெய்லி பன்னீரில் ரோஜா பூவைப் போட்டு ரெண்டு மணி நேரம் அழுக்கு துணியை ஊறவைப்பது போல கையை ஊற வைத்தால் கைகள் இந்த மாதிரி பட்டு போல இருக்கும் என்று எங்க ஊர் மங்கையர் மலரில் கீரனூர் பாக்யலட்சுமி டிப்ஸ் குடுத்திருந்தார்..ஒருவேளை படித்துவிட்டு ட்ரை செய்திருப்பீர்களோ என்று கேட்டேன்..." இந்த முறை அவளின் பலமான புன்னகை நான் ஜொள்ளு விடுவதாக அனர்த்தம் செய்து கொண்டதை பறை சாற்றியது. தலைக்கு மேலே போன பின் ஜானென்ன பீட்டரென்ன என்று நானும் முக்காடை தூக்கிவிட்டேன்.

வெள்ளைக்கார பெண்மணிகளின் வயதை கண்டுபிடிப்பது மட்டும் மிக கடினமான விஷயம். நிறைய முப்பத்தி சொச்சத்தை எல்லாம் இருபத்தி சொச்சம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கேன். பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். இவளுக்கு அனேகமாய் என்னை விட இரண்டு வயது கூட இருக்கலாம் ஆனால் இருபது மாதிரி தான் தெரிந்தாள். டெண்டுல்கரை ரோல் மாடலாய் தத்து எடுத்துக் கொண்டு சாகுபடியை தொடர்ந்தேன்.

"உங்களுக்கு லீட்ஸா..."

"இல்லை நியூகாஸில்..லீட்ஸில் ட்ரெயின் மாறவேண்டும் "

"லண்டனுக்கு அடிக்கடி வருவீர்களா....?"

"ஆம் வேலை விஷயமாக வருவேன்..நீங்கள்..?"

"எனக்கு லண்டன்...வேலை விஷயமாய் எடின்பரோ போகிறேன்..." எண்பது பெர்சண்ட் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு புடவை உடுத்திக் கொள்ளச் சொல்லிக்குடுக்கவேண்டும்...புடவையில் கொள்ளையழகாக இருப்பாள்.

"உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா...?"

"எக்ஸ்க்யூஸ்மீ...??" அவள் பார்வையில் அத்தனை சினேகமும் பட்டென வடிந்திருந்தது. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கேட்டிருக்க கூடாது. சுபஸ்ய சீக்கிரம்ன்னு ஓவராய் எக்சைட்டட் ஆகிவிட்டேன். இன்னும் மூனு மணி நேர பிரயாணம் இருக்கிறது ஒரு வேளை அவள் எடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாய் இருந்தாலும் கூட ஒரு மணி நேரம் இருக்கிறது. கடலையை பதமாய் வறுத்திருக்கவேண்டும்

அதற்கப்புறம் அவள் ஒரு புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். நானும் லேப்டாபை திறந்து ஆபிஸ் வேலை பர்ப்பது மாதிரி கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் கதையில் ஒன்றிப் போயிருந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் "ஆர் யூ சிங்கிள் ...." என்று அவள் கேட்ட போது எனக்கு பல்லெல்லாம் வாயாயிருந்தது.இவளுக்கு முதலில் மணமாய் வத்தகுழம்பு வைக்க சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்புறம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி.

அப்புறம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். அவளும் எக்சைட் ஆகி சளைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். என் ஆபீஸைப் பற்றி கேட்டாள் டிப்பார்ட்மென்ட் ஹெட் பற்றிக் கேட்டாள்...சில பேரோடு இமெயில் கேட்டாள் பல பேரோடு எக்ஸ்டென்ஷன் நம்பரெல்லாம் கேட்டாள்..வயசுப் பையனிடம் பேசும் போது ஏதோ பேச்சை வளர்கனுமே என்று இந்த டாப்பிக் தான் என்று இல்லாமல் இன்னமும் என் கம்பெனி பற்றி ஏதேதோ கேட்டாள். ஆனால் நான் ரொம்ப உஷாராக தேவை இல்லாதையெல்லாம் கேட்காமல் அவள் எங்கே நெயில் பாலீஷ் வாங்கினாள், டேவிட் பெக்காம் பெண்டாட்டி விக்டோரியா பெக்காம் பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவளே அறியாமல் அவளைப் பற்றிய விஷயங்களை கறந்துகொண்டிருந்தேன். அவளும் பெக்க பெக்கவென்று விஷயங்களை உளறிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன், பான்ட்ரீ காரிலிருந்து ஹாட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள். கண்டிப்பாய் இவளுக்கு வசந்த பவனில் பில்டர் காப்பி வாங்கிக்கொடுக்கவேண்டும். சொக்கிப் போய்விடுவாள். அப்புறமும் லீட்ஸ் வரை ஏகத்துக்கு பேசிக்கொண்டே வந்தோம். இறங்குவதற்க்கு முன் அவளோட போன் நம்பர் கேட்டேன். என்னை ரொம்ப பிடித்ததால் அவளுடைய பிஸினஸ் கார்டு குடுத்தாள்.

லீட்ஸில் அவள் இறங்கியபின் யோசித்ததில் அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறேன் என்று நியாபகம் வந்துவிட்டது. அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்...என்னைப் பார்த்ததில் கொஞ்சம் ஓவர் எக்சைட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான். கண்கள் நாலுபக்கமும் இருக்கவேண்டாமா..இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் தூக்கி சாப்பிட்டுவிட மாட்டார்களா...இருந்தாலும் அந்த நெயில் பாலிஷ் அவளுக்கு ஏகத்துக்கு எடுப்பாய் இருந்தது. மல்லிகைப்பூ வைத்து பின்னிக் கொள்ளச் சொல்லிக் குடுக்கவேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் அவளிடத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த காக்கேசியப் பெண்மணி அவளை விட அழகாக இருந்தாள். எனக்கு இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா"

Tuesday, July 14, 2009

அவன்

சிகரெட் வாடை மூக்கைத் தாக்கிய போது தான் அவன் பஸ் ஸ்டாப்பில் என் பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவன் எப்போது வந்தான், திரும்பி லேசாக அவனைப் பார்த்த போது எனக்கு கலவரமாகியது. நல்ல பரட்டையாய் தலை, நாலு நாள் சவரம் செய்யாத தாடி, ஒழுங்கு படுத்தாமல் கொஞ்சம் தாறுமாறாக வளர்ந்த மீசை. லுங்கி அணிந்திருந்தான். சட்டையில் மேல் பட்டன் போடாமல் முழுக் கையை மடக்கிவிட்டிருந்தான். தலை முடி அழுந்த வார முயற்சித்து தோற்றுப் போயிருந்தது தெரிந்தது.

பேங்கிலிருந்து லட்ச ரூபாயை இப்படி ஹாட் கேஷாக எடுத்துப் போக தனியாளாக வந்திருக்க கூடாது. சேகரையாவது துணைக்கு கூட்டி வந்திருக்க வேண்டும். இப்படி சினிமாவில் வருவது மாதிரி வானம் தீடீரென்று இருட்டி இந்த ஒதுக்குப் புற பஸ்ஸடாப்பில் தனியாக நிற்பேன் என்று சத்தியமாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்படியா ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேங்கை திறப்பார்கள். "ஆட்டோல மட்டும் ஏறிடாத...இந்த மாதிரி நிறைய கேஷ் எடுக்கும் போது உள்ளையே ஒருத்தன் நோட்டம் பார்த்து தகவல் குடுத்திருப்பான்...இவன் சும்மா ஆட்டோல வர்ற மாதிரி வந்து ..தெரு முக்குல இன்னொருத்தன் முன்னாடி ஏறிப்பான்...அப்புறம் சவுக்குத் தோப்புல உன்னை கட்டிப் போட்டுட்டு பெட்டியோட அவங்க கம்பி நீட்டிடுவாங்க" - அவசரமாய் பணம் எடுக்க போகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரார்கள் குடுத்த இலவச அட்வைஸில், வந்த ஒரு ஆட்டோவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்படி அம்போவென்று பஸ்ஸுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.

சிகரெட்டை பீடி மாதிரி பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது எனக்கு முதுகில் ஊறியது. அவன் முகம் எங்கேயோ பார்த்தது மாதிரி வேறு இருந்தது. போன வார தினமலரில் எச்சரிக்கை விளம்பரத்தில் எதிலாவது பார்த்தேனா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை அன்று ஆபீஸுக்கு பக்கத்தில் நடந்த சண்டையில் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தானே அவனா...-ம்கூம்...வேறு எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"டைம் என்னா சார்" - அவன் கேட்ட போது எனக்கு உதறல் கூட ஆரம்பித்தது. பாழாய் போன பஸ் வந்து தொலைய மாடேங்கிறதே என்றிருந்தது.

அவனும் என்னுடன் வந்து நிற்க ஆரம்பித்த போது எனக்கு டென்ஷன் அதிகமாக ஆரம்பித்தது. சைட் வாக்கில் பஸ்ஸை நோட்டம் விடுவது போல் பார்த்தில் மூளையில் மின்னல் மாதிரி வெட்டியது. எங்கே பார்த்தேன் என்று நியாபகம் வந்து விட்டது.

திரும்பவும் பார்த்ததில் அவனுடைய சைட் போஸ் ஊர்ஜிதப்படுத்தியது. அடப்பாவி அவனா இவன்..சந்தேகமேயில்லை அவனே தான். யாரு என்று தெரிந்ததற்கப்புறம் கேட்டுவிட எனக்கு நாக்கு பரபரத்தது.

"எக்ஸ்யூஸ்மீ... நீங்க இப்போ சமீபத்துல வந்த "ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்" படத்துல நடிச்ச ஹீரோ தானே?"

அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் தீனமாய் மறுத்தான்.

"இல்லீங்க அது நான் இல்லை"

"ஓ..சாரி படப் பெயரைக் குழப்பிட்டேன்...நீங்க "நேத்து வைச்ச கஞ்சி" அந்த ஹீரோ தானே உங்கள சைட் போஸில பார்த்த அப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு "

"இல்லீங்க...நீங்க வேறங்க...நான் அந்த படத்துக்கு ஹீரோவா செலெக்ட் ஆகி இருப்பேன்...நீங்க சொன்ன அதே சைட் போஸில நான் கொஞ்சம் படிச்சவன் கணக்கா டீசென்டா இருக்கேனாம்..அதுனால வேண்டாம்ன்னுட்டாங்க..இப்போ மூக்கின்னு ஒரு படத்துக்கு அனேகமா செலெக்ட் ஆகிடுவேன்னு நினைக்கிறேன் ஸ்க்ரீன் டெஸ்டெல்லாம் நேத்து தான் முடிஞ்சிது...உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கனும்"