Friday, May 23, 2008

சென்னையில் சந்திக்கலாமா?

இன்னும் ஒரு பத்து மணி நேரத்தில் இந்தியா கிளம்புகிறேன். இரண்டு மூன்று வாரங்கள் அங்கு இருப்பேன். உங்களுக்கு நேரமும் சௌகரியமும் இருந்தால் சென்னையில் சந்திக்கலாமா? சுமார் ஜூன் 5 அல்லது 6 அல்லது 7ம் தேதி வாக்கில் ராதாகிருஷ்ணன் சாலை வுட்லண்ட்ஸில் சந்திக்கலாம் என்று தோராயமாக திட்டம். முடியும் என்றால் r_ramn@yahoo.com - க்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்களேன். நேரமும் தேதியும் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

Tuesday, May 13, 2008

என்ன எழவுடா இது

சரியான எழவுங்க இந்த இழவு. எதச் சொல்றேன்னு தெரிஞ்சுதா...? அதாங்க இந்த இழவப் பத்தி தான். சின்ன வயசாக இருக்கும் போது பாட்டி இறந்த போது தெருவில் ஒரு பையனோட வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்கிளி பிடித்துக்கொண்டிருந்தேன். யாரோ வந்து மேட்டர் என்னான்னு சொல்லாம கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வீட்டுக்கு போய் பார்த்தால் வீட்டில் எல்லாருமாய் பாட்டியை சுத்தி உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஹை இது சினிமாவில் வருவது மாதிரியே இருக்குதேன்னு அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. சிரிப்பு கீற்றாய் உதட்டில் வந்து "கெக்கெ பிக்கே" என்று ஆவதற்க்குள் "டொம்"ன்னு எங்கிருந்தோ ஒரு அடி முதுகில் விழுந்து பிடித்து அமுக்கி உட்கார்த்திவிட்டார்கள். அடி விழுந்த வேகத்தில் கண்ணில் தாரதாரையாக நீர் வந்தது. சும்மனாச்சுக்கும் கூட்டு ஒப்பாரிக்கு ஆதரவு குடுக்க வந்திருந்த தெரு மாமி "இதுக்கு பாட்டின்னா உசிரு...பாட்டியவே சுத்தி சுத்தி வந்திண்டு இருந்தது, பாவம் துக்கம் தாளமாட்டமல் எப்படி அழறது பாரு"ன்னு கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டிருந்த இன்னொரு மாமியிடம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். ஆஹா பத்தாம் நாள் குடுக்கப் போற அதிரசத்துக்கு இப்பவே ஆட்டையப் போடுகிறாரே என்று அப்போது தெரியாமல் போய்விட்டது.

அதற்கப்புறம் தாத்தா சாவு தான். உண்மையிலேயே எங்க தாத்தா எனக்கு ரொம்ப உசிரு எனபதால வருத்தமாக இருந்தது. அந்த வாரம் இருந்த மாதாந்திர பரீட்சைக்கு முதல் நாள் ஆரம்பித்த வருத்தம் பரீட்சை முடியும் வரை நீடித்து என்னால் ஸ்கூலுக்கே போக முடியவில்லை. அப்புறம் புண் பட்ட நெஞ்சை பூந்தி தின்று ஆற்றிக்கொண்டேன். வளர்ந்த கால கட்டத்தில் ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் வீட்டிலிருந்தே போய் வருவார்கள் என்பதால் அதையெல்லாம் பற்றி ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன். ஆனாலும் அரும்பு மீசை முளைத்த பருவத்தில் பக்கத்து ஊரிலிருந்த நண்பன் ஒருவன் வீட்டில் துக்கம் ஆகிப்போய்விட்டது. எல்லா நண்பர்களும் அடுத்த நாள் பாடியை எடுக்கும் வரை கூட இருந்து ஹெல்ப் செய்ய்வேண்டும் என்று முடிவு செய்தார்கள். "டேய் எனக்கு அழ வராதுடா எசகு பிசகாய் சிரித்து வைத்துவிடுவேண்டா" என்ற எனது கவலையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு நண்பன் மட்டும் பச்சாதாபப் பட்டு "டேய் இந்த குத்தால துண்டை கழுத்தை சுத்தி போட்டுக்கோ சிரிப்பு வர மாதிரி இருந்தா வாயில துண்டை வைத்து கடிச்சி கண்ணைத் துடைச்சிக்கோ ஒருத்தரும் வித்தியாசமாய் நினைக்கமாட்டார்கள் என்று டிப்ஸ் குடுத்தான். அதிகாலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு துண்டைக் கடித்து ப்ராக்டீஸ் பண்ணிப் கொண்டிருந்தது மாமா கண்ணில் பட்டுவிட்டது. "நான் எலி தான் இத்தன நாளா துண்டை கடிச்சு நாசம் பண்றதுன்னு நினைச்சுண்டு இருந்தேன் நீதானா...ஏண்டா அதயேன்டா கடிக்கிற ஆறுமுகா டெக்ஸ்டைல்ஸ்ல காலணா குறைக்க மாட்டேன்னுட்டான்.துண்டு விக்கிற விலைக்கு கடிச்சு நாசம் பண்ணிண்டு...நல்ல வயித்துக்கு நிறைவா சப்பிடறது தானே"என்று மாமா புலம்பலில் எலிப் பழியையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக குத்தால துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு ராஜ் கிரண் மாரிலும் மூஞ்சியிலும் சாம்பலை அடித்துக் கொண்டு அழும் காட்சிகளை எல்லாம் ரிவைஸ் செய்து கொண்டு போனால் அங்கு எல்லாரும் குஜால்சாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். "டேய் இதென்ன இழவு வீடா இல்ல கல்யாண வீடா எல்லாரும் சிரிசிக்கிட்டு டீ குடிச்சிக்கிட்டு இருக்கீங்க"ன்னு நண்பனிடம் கேட்க..."டேய் தாத்தாக்கு தொன்னூறு வயசுடா ..கல்யாண சாவு..அதுக்கெல்லாம் இப்படி தான்ன்னு விளக்கினான். சே குத்தால துண்டை வைத்தே ராஜ்கிரன் அளவுக்கு சீன் போடலாம்ன்னு நினைச்சது வீணாப் போச்சேன்னு எனக்கு ஆதங்கமாகிவிட்டது. அதற்க்கு மேலும் நான் மட்டும் அழுது புரண்டால் அவங்க தாத்தா மேல் எல்லாருக்கும் சந்தேகமாகிவிடும் என்பதால் குத்தால துண்டு ஐடியா குடுத்த மூதேவியின் மண்டையில் நங்கென்று குட்டிவிட்டு குடுத்த டீயும் போண்டாவும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

ஊரில்லெல்லாம் தெருவில் யார் வீட்டிலாவது துக்கமாகிவிட்டால் பத்தாம் நாள் தெருவில் எல்லார் வீட்டுக்கும் பெரிய முறுக்கு அல்லது தேன்குழலுடன் ஒரு ஸ்வீட்டும் பட்சணம் குடுப்பார்கள். அதனாலேயே சேதி தெரிநத நாளிலிருந்தே கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிடும். தெரிந்த பையன் வீட்டில் துக்கம் என்றால் "யுவர் க்ராண்ட் டாட் வாஸ் அ கிரேட் மேன்" போன்ற ஆங்கிலப் பட வசனங்கள் பேசாமலே முறுக்கு ஒரு விள்ளலும், உதிர்ந்த பூந்தி ஒரு கைப்பிடியும் கூடுதலாக கிடைக்கும். இந்த மாதிரி துக்கத்துக்கு போடும் லட்டுவில் மட்டும் முந்திரி பருப்பு போடமாட்டார்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரத்தை பேசிக் கொண்டே துக்கத்தை ஆற்றிக் கொள்வோம்.

இதே மாதிரி வயதான பெரிசுங்க போயிருந்தால் கல்யாண சாவு என்று பதிமூன்றாம் நாள் புது ட்ரெஸ் வேறு உண்டு. எங்க தாத்தா இறந்த போது அவர் நியாபகார்த்தமாக பாக்கி பாண்ட் தைத்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் பெரிய குடும்பம், பேரன் பேத்திகள் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதால் பெரியவர்களே திருநெல்வேலிக்குப் போய் எல்லாரும்க்கும் சேர்த்து ஒரு துணி பண்டிலை வாங்கி வந்து விட்டார்கள். நாங்களெல்லாம் டி.வி.எஸ். பாக்டரியில் வேலை பார்பது மாதிரி யூனிபார்மாக ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு இரண்டு நாள் உலாத்தினோம். அந்த தரம் பாக்கி பாண்ட் குடுப்பினை இல்லை.

இங்கே இங்கிலாந்து வந்ததுக்கப்புறம் யாராவது தெரிந்த வெள்ளைக்காரன் மண்டையப் போட்டுட்டான்னா என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கக் கூடாது என்று விபரங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். யாராவது பூட்டுக்கிட்டாங்கன்னா இங்கே இன்ன தேதியில் இந்த நேரத்தில் துக்கம் அனுசரிக்கிறோம்ன்னு இன்விடேஷன் வருமாம். அன்னிக்கு கருப்பு கலரில் கோட் சூட் போட்டுக் கொண்டு போய் "யுவர் க்ராண்ட் டாட் வாஸ் எ க்ரேட் மேன்"ன்னு சொல்லவேண்டும். (டிக்கெட் வாங்கிய பார்ட்டி க்ராண்ட் டாடாக இல்லாமல் வேறையாக இருந்தால் அவரை க்ராண்ட் டாட்டுக்குப் பதிலாக போட்டுக்கொள்ளவேண்டும்). காபி டிபன் எல்லாம் ஏற்பாடு செய்திருப்பார்கள் அதை சாப்பிட்டு விட்டு சொல்லிக்காமல் கொள்ளிக்காமல் வந்துவிடவேண்டும். இந்த விபரங்களைச் சொன்ன வெள்ளைக்காரார் உங்க ஊரில் எப்படி என்று கேட்டார். எங்க ஊரில் நீங்கள் சொன்ன இத்தனையும் நாங்கள் கல்யாணங்களில் செய்வோம் என்று சொல்லிவைத்தேன்.