Saturday, April 26, 2008

அப்பிடி இப்பிடி

நலம். உங்கள் பக்கமும் விரும்புவதும் அதுவே.

வேலை வேலை ஓயாத வேலை. வூட்டில சின்னப் புள்ளையா மூக்கை ஒழுகிக் கொண்டு ஒன்னும் செய்யாதிருந்த காலத்தில் எப்படா ஷூ சாக்ஸ்லாம் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போவோம் என்றிருந்தது. அப்புறம் காலேஜ் எப்போ போவோம்ன்னு இருந்தது. காலேஜ் போகும் போது எப்படா வேலைக்கு போய் செட்டிலாகப் போறோம் என்று இருந்தது. இப்ப எப்படாப்பா ரிட்டயர் ஆகி திரும்ப ஒன்னுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கப் போகிறோம் என்று இருக்கிறது.

யாரடி நீ மோகினி எதிர் பார்த்த அளவு அவ்வளவு சூப்பராக இல்லை. படத்தில் நயன் தாரா நான் நீந்திப் புரண்டு குளித்த அம்பாசமுத்திர ஆற்றங்கரையில் காலை நனைக்கிறார். ஆற்றங்கரையைப் படத்தில் பார்த்தது ஜில்லென்று இருந்தது. படத்தில் அவரை விட அவர் தங்கையாக வரும் நடிகை துறு துறுவென்று இருக்கிறார். வெரி க்யூட் என்று (ரெண்டு மூனு தடவை) சொன்னதை ஜொள்ளு என்று தங்கமணி தப்பிதமாக அர்த்தம் கொண்டு அவரைப் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்து வாயெல்லாம் பல்லாக "இப்படி க்யூட்டா இருக்கும் போதே நினைத்தேன் அவ பெயர் அதா தான் இருக்கனும்ன்னு" என்று சொன்ன போது பதினைந்து வருடமாகியும் இன்னுமா இந்தப் பெயர் கொண்டவர்களிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறேன் என்று தோன்றியது.

சுத்தமாய் எதிர்பார்ப்பே இல்லாமல் எடுத்த விதத்தில் பிடித்திருந்த படம் கண்ணும் கண்ணும். படத்தில் பிரசன்னாவின் அலட்டலில்லாத நடிப்பும் திரைக்கதையும் அழகாக அமைந்திருக்கின்றன. படத்தில் பிரசன்னாவும் நான் ஜொள்ளு விட்ட அதே குற்றாலம் பராசக்தி கல்லுரியில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது எப்படி சிக்கலில் முடிகிறது என்பது தான் கதை. வித்தியாசமான கோணத்தில் அனுகியிருக்கிறார்கள். முடிவில் எனக்கு சுத்தமாக ஒப்புதல் இல்லை என்றாலும் பார்க்காதவர்களுக்காக இங்கே அதை விவரிக்காமல் விட்டு விடுகிறேன்.

லண்டன் இந்திய ஹை கமிஷன் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறது. என்ன இப்போது டோக்கன் நம்பர் படி கூப்பிடுகிறார்கள், ஆனால் இன்னமும் பழைய படி டீ குடிக்க அடிக்கடி போய்விடுகிறார்கள். இங்கே தனி நபரை சொல்லவில்லை...ஒருவர் போகும் போது இன்னொருவரை அங்கே அமர வைக்க வக்கில்லாமலா இருக்கிறது? ஹை கமிஷனர் சென்னை மாம்பலம் ஸ்டேஷனில் டிக்கட் ரிசர்வேஷன் ஆபிசில் ட்ரெயினிங் எடுக்கச் சொல்லலாம் போல இருக்கிறது. ஒன்பதரை மணிக்குப் போய் இரண்டு மணி வரை தேவுடு காத்துவிட்டு வந்தேன். நடுவில் ஒரு நடுத்தர வயது அம்மணி நான் சின்ன வயதில் இருந்த போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தேன் அப்புறம் இந்த நாட்டில் குடியுரிமை வாங்கிவிட்டேன் ஆனால் எனது பழைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. அதோடு நம்பர் கூட எதோ ஏ என்று ஆரம்பிக்கும். இப்போ ஓ.சி.ஐ. வாங்குவதற்க்கு அதைக் கேட்கிறார்கள் எனக்கு ஒரு லெட்டர் தர முடியுமா என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாளில் புது பாஸ்போர்ட் தந்துவிடுற சுறுசுறுப்பை கொஞ்சம் ப்ரெண்ட் ஆபிஸில் ஒழுங்கில் காட்டினால் இந்தியாவைப் பற்றி அங்கு வருகிறவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு ஏற்படலாம். எந்த எம்பஸியிலும் நடக்காத "வாட் த ஹெக் இஸ் ஹாப்பனிங் ஹியர்" என்று வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் வாய் விட்டுக் கேட்டு மண்டையிலடித்துக் கொள்ளும் அவலம் இருக்காது.

கவுன்சில் சர்வீஸ் பற்றி சர்வே எடுக்க வீட்டுக் கதவைத் தட்டிய புண்யவான் பத்தாவது கேள்வியாக "நீங்கள் பாலிவுட் படத்தில் எதாவது நடித்திருக்கிறீர்களா உங்களைப் பார்த்தால் பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கிறது" என்று கேட்டபோது சரி சரி...அதான் சர்வே பதிலெல்லாம் ஒழுங்கா சொல்றேனே அப்புறம் எதுக்கு இந்த அல்வா..? இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்குன்னு சொன்னாலும் விடாமல் பிடிவாதம் பிடித்தார். ஒன் நிமிட் என் செகரெட்டரியைக் கூப்பிடுகிறேன் திரும்பவும் கேளுங்கள் என்று தங்கமணியைக் கூப்பிட்டு அவர் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டேன். தங்கமணி இது நான் செஞ்ச செட்டப் தான் என்று நம்பினாலும் அப்பிடியே அந்த ஆளைத் துரத்தி இருக்கவேண்டும். எல்லா கேள்வியையும் கேட்டு விட்டு அந்த ஆள் மும்பை இந்தியால எங்க இருக்கு தெக்கையா வடக்கையான்னு நாயகன் கமலோட பேரன் மாதிரி கேட்டுவிட்டுப் போய்விட்டான். இப்போ தலை வாருவதற்க்கு கண்ணாடியைப் பார்த்தால் கூட "காந்த்...விருச்சிக காந்த்...நீங்க வில்லானா இருந்துட்டு ஹீரோவா அறிமுகம் ஆகுறீங்களா இல்லை ...எடுத்த எடுப்பிலேயே ஹீரோவா அறிமுகமா" என்று ஓட்டு ஓட்டுவென ஓட்டுகிறார். இனிமேல் கவுன்சில் சர்வேக்கு கண்டிப்பாய் ஆதரவு அளிப்பதாக இல்லை.

Tuesday, April 01, 2008

Life is Beautiful



1999ல் வெளியான இத்தாலிய திரைப்படமான இந்தப் படத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். கசின் வீட்டில் ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு சன் டீ.வியில் காம்பியரிங் செய்யும் பெண்கள் மட்டும் ஏன் கொஞ்சம் பூசின உடம்பாக குண்டாக இருக்கிறார்கள்...இங்க வந்ததுக்கப்புறம் தான் இப்படி ஆகிவிட்டார்களா இல்லை இப்படி இருந்தால் தான் காம்பியரிங்குக்கே எடுப்பார்களா என்று வருஷத்துக்கு சன் டிவிக்கு தண்டம் அழுவதைப் பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது, Vita è bella, La (Life is Beautiful)ன் அருமை பெருமைகளை சொல்லி இந்த படம் கண்டிப்பாக பாருங்கள் அற்புதமான படம் என்று சைனாவிலிருந்து வாங்கிவந்த 7 இன் 1 (ஒரே டிஸ்கில் ஏழுபடம் ) ஓசி டி.விடி குடுத்து பஸ் செலவுக்கும் கைக்காசு குடுத்து அனுப்பினார்கள். படம் மிக அழுத்தமான படம் ஆனால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.

ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் எடுக்கும் மேற்படி படங்களில் எனக்கு அதீத ஈடுபாடு பெரிதாக கிடையாது. இருந்தாலும் இவ்வளவு சொல்கிறார்களே என்று ஒரு பின்னிரவில் டி.வி.டியைப் போட்டு மெனுவில் இந்தப் படத்தை ஓட்டினால் "ஓ.சி டிவி.டிக்கு உனக்கு Life is Beautiful ஒரு கேடான்னு வேறு ஏதோ ஒரு அரதப் படத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது" அந்த படத்தில் வேறு பத்து காட்சிகளுக்கு ஒன்றரை சீன் . என்னாடா நம்மாளு அழுத்தமான படம்ன்னு சொன்னாரே இதைத் தான் சொன்னாரான்னு எனக்கு சந்தேகம். சரி சீனெல்லாம் வேஸ்டாகவேண்டாமே என்று அந்த அரதப் படத்தையும் முழுசாகப் பார்த்து தொலைத்தேன்.

சமீபத்தில் மீண்டும் ஓசிக்கு இந்தப் படத்தின் ஒரிஜினல் டி.வி.டி ஆபிஸ் நண்பர் மூலமாக கிடைத்தது.(நல்ல படமெல்லாம் ஓசியில் பார்த்தால் தான் எனக்கு செமிக்கும்). இத்தாலி படம் இங்கிலீஸ் சப்டைட்டில்ஸோடு பார்த்தோம். இதற்கு மேல் கதைக் களம் பற்றிய ஸ்பாயிலர்ஸ் இருப்பதால் ரொம்ப மெனெக்கடுபவர்கள் அடுத்த வரியோடு நிப்பாட்டிக்கொள்ளலாம். சில படங்களுக்கு ஸ்பாயிலார்ஸே கிடையாது, முழுக் கதையைச் சொன்னாலும் பார்க்கும் அனுபவத்துக்கு சிறிதும் பங்கம் வராது, இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது. படத்தின் டைரக்டர் ராபர்ட்டோ தான் கதாநாயகனும் கூட. இந்த விஷயம் எனக்கு படம் பார்த்து முடித்த பிறகு தான் தெரிந்தது. பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் டைரக்டரின் "இது ஒரு எளிமையான கதை ஆனால் சொல்வதற்க்கு மிகவும் கஷ்டமான கதை" என்று சொல்வார். முற்றிலும் உண்மை.

நாயகன் ஒரு யூதர். மிகவும் வேடிக்கையான பேர்வழி. தனது நகைச்சுவை திறமையால் கதாநாயகியை கவர்ந்து கல்யாணம் செய்துகொண்டு ஒரு பையனை பெற்றுக்கொள்கிறார். இரண்டாம் உலகப் போரின் பிண்ணனியில் ஜெர்மனியர்களால் கைது செய்யப்பட்டு யூதர்களின் கேம்பில் குடும்பத்தோடு மாட்டிக் கொள்கிறார்கள். பையனுக்கு அந்த கேம்பின் விளைவுகளோ கொடுமையோ தெரியாமல் இருக்க திரும்பவும் தனது நகைச்சுவை திறனை கொண்டு அது ஒரு விளையாட்டு என்று நம்ப வைக்கிறார்.

படம் ஆரம்பிக்கும் வேகத்திலேயே டைரக்டர் மிகவும் கைதேர்ந்தவர் என்று புரிந்துவிடுகிறது. அவரே நாயகனாக புகுந்து விளையாடியிருக்கிறார். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் எழுத முடியாது படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். சப் டைட்டில்ஸ் உதவியோடு இவ்வளவு ரசிக்க முடிகிறதே இத்தாலிய மொழி தெரிந்திருந்தால் முழுதாக ரசித்திருக்கலாமே என்று தான் எனக்குத் தோன்றியது.

ராபர்டோ ஸ்க்ரீன் ப்ளேயை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார். படத்தில் போர்க் காட்சிகள் கிடையாது, அருவருக்க வைக்கும் துன்புறுத்தும் காட்சிகளோ, பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகளோ எதுவும் கிடையாது. ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே நம்மை உறைந்து போக வைக்கிறார். இந்தப் படம் போரைப் பற்றியோ அல்லது யூத ஹோலோகாஸ்டைப் பற்றியதோ அல்ல. ஒரு குடும்பத்தின் இணக்கம் பற்றியது. ஒரு தந்தையின் உணர்வைப்பற்றியது. ஆனால் யூத ஹோலோகாஸ்டின் பிண்ணனியில் பின்னப் பட்டிருக்கும் இந்தக் கதை, படம் பார்த்த ஒரு வாரத்துக்காவது பார்ப்பவர்களைப் பாதிக்கும். படமெடுப்பவர்களுக்கு இந்தப் படத்தில் ஓவ்வொரு சீனிலும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் அருமையான படம்.