Wednesday, June 27, 2007

டைப்பு டைப்பு

"கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா" என்று பிரின்ஸிப்பால் கேள்வி கேட்ட போது எங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். ப்யூன் முருகன் சம்பந்தமே இல்லாமல் ஒரு பத்து பேரை பெயர் வாசித்து பிடித்துக் கொண்டு நிப்பாடியிருந்தார். இதில் இரண்டு பெண்கள் வேறு அடக்கம். தனியாக கூப்பிட்டிருந்தால் பெல்லி டான்ஸர் மாதிரி நடுங்கிக் கொண்டிருந்திருப்பேன். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்ததால் "யாருடா இங்க பிரின்ஸிப்பால்" தெலுங்கு பட ஹீரோ மாதிரி பராக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல பிரின்ஸிப்பால் இரண்டு நிமிடம் சொற்பொழிவாற்றிய பிறகு தான் விஷயம் புரிந்தது. நாங்கள் எல்லோரும் ஸ்கூல் சார்பாக டைப்ரைட்டிங்கில் லோயர் பரீட்சை எழுதவேண்டும்.

எங்கள் ஸ்கூல் சுற்றுவட்டாரத்திலயே கொஞ்சம் பெரிய ஸ்கூல் ஆகையால் நிறைய எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் இருக்கும். அதில் ஒன்று டைப்ரைட்டிங் க்ளாஸ். எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த விமலா டீச்சர் தான் வந்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு "விதி" திரைப்பட மனோரமா மாதிரி தான் இருப்பார். பேச்சும் மேனரிஸமும் அதே மாதிரி தான். கொஞ்சம் படபடவென்று பேசுவார் ஆங்கிலத்தில் பேசினால் ஆஃப் ஆகிவிடுவார்.. "ஏ பாய் கோ பாய் தேர், ஏ கேர்ல் கோ கேர்ல் தேர்" என்பதை மட்டும் அதிகாரத்தோடு ஆணையிடுவார். அதற்கு மேல் "எஸ் நோ" மட்டும் தான் பதிலாக வரும். அதனால் பள்ளியில் தமிழில் பேசக்கூடாது என்றிருந்த சட்டம் டைப்ரைட்டிங் க்ளாசில் மட்டும் வாய்தா வாங்கும்.

விமலா டீச்சருக்கு ஆங்கிலம் பற்றிய ஆதங்கம் நிறைய உண்டு. டீச்சருக்கு "மேம்" என்று கூப்பிட்டால் பெருமை எருமையில் ஏறிவிடும். கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு "யெஸ்ஸ்ஸ்" என்று ஸ்டைலாக உடனே வந்து சொல்லிக்கொடுப்பார். விமலா மேம் மட்டும் பரீட்சைக்கு சூப்பர்விஷன் போட்டால் பசங்கள் ஆங்கிலத்திலேயே அவரிடம் பேசுவது மாதிரி மற்றவர்களிடம் விடை கேட்பார்கள். விடை தெரிந்தவர்களும் அதே மாதிரி அவரிடம் பேசுவது போல் பதில் சொல்லுவார்கள். அப்புறம் மேம்க்கு சந்தேகம் வந்து "ஏ பாய் கோ பாய் தேர்" என்று உட்காரச் சொல்லிவிடுவார்.

ஒன்பதாவது வகுப்பில் மட்டும் தான் இந்தக் க்ளாஸ். அதனால் பசங்களுக்கு டைப் மெஷினை பார்த்தவுடன் கையும் காலும் பரபரக்கும். அனேகமா க்ளாஸில் எல்லோருமே ஒரு விரல் கிருஷ்ணாராவ் தான். ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு லொட்டு லொட்டு என்று அடி பின்னி எடுத்துவிடுவார்கள். "மேம் க்யூ எங்க மேம் இருக்கு, எம் எங்க மேம் இருக்கு" என்பது ரீதியான டவுட்டுகள் தான் பசஙக்ள் விமலா மேமிடம் கேட்பார்கள். அதில் பெரும்பான்மை ஹாஸ்டல் பையன்கள் - வீட்டிற்கு எழுதும் லெட்டருக்கு லொட்டி லொட்டி அட்ரஸ் அடிப்பார்கள்.

எனக்கு பிற்காலத்தில் நான் பெரிய ஆபிஸராக ஆகிவிடுவேன் என்று தெரியுமாகையால் என்னுடைய பியானோ, மற்றும் ட்ரம்ஸ் ஆசையை எல்லாம் டைப் மெஷினில் தான் தீர்த்துக் கொள்வேன். பேசிட், ரெமிங்டன் என்று இரண்டு விதமான மெஷின்கள் இருந்தன. பேசிட் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் ஓடாது. ஆனால் ரெமிங்டன் பூப்போல நழுவும். ஒழுங்காக அமுக்காவிட்டாலும் ஓடிவிடும். ஆனால் "ராஜா ராஜாதி ராஜா" பாட்டுக்கு ரெமிங்க்டன் மிஷினில் தான் கரெக்டாக டைப் தாளம் போட முடியும். பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும். அதனால் அந்த பாட்டுக்கு மட்டும் பேசிட்டுக்கு மாறிக்கொள்வேன்.


டீச்சர் அடப்பாவிகளா இப்படியெல்லாம் அடித்தால் ட்ரம் போய்விடும் என்று கண்ணீர்விடுவார். கேட்டால் தானே. ஆனாலும் மெஷின்கள் ஸ்கூல் மெஷின்கள் என்பதால் சத்தம் போடுவதோடு நிப்பாட்டிக் கொள்வார். ரொம்ப அதிகமானால் "ஏ பாய் ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று மிரட்டுவார். எங்கள் பிரின்ஸ்பாலுக்கு ஸ்கூல் மேல் அதிக பாசம். நாங்கள் டைப்ரைட்டிங்கில் பிரித்து மேய்கிறோம் என்று டீச்சரை கூப்பிட்டு டைப்ரைட்டிங் லோயர் பப்ளிக் எக்ஸாம் எழுத பத்து பெயரை தயார் செய்யச் சொல்லிவிட்டார். டீச்சர் பிள்ளையார் சுழி போட்டு "யாரெல்லாம் எழுதப் போறிங்கன்னு" கேட்க லிஸ்ட் பிள்ளையார் சுழியுடன் நின்றி விட்டது. என்னாங்கடா விளையாடறீங்கன்னு மானாவாரியா பெயர் எழுத ஆரம்பித்துவிட்டார். "மேம் எனக்கு விரல்ல ப்ளட் கேன்சர்" என்று நான் எவ்வளவோ மன்றாடியும் டீச்சர் கேட்கவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக "ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று பிரின்ஸிபாலிடமும் போட்டுக்கொடுத்துவிட்டார். எப்பொழுதும் பீட்டர் மட்டுமே விடும் பிரின்ஸியும் அன்று கரும்புக்கென்ன கூலி எறும்புக்கென்ன வேலின்னு பழமொழியெல்லாம் சொல்லி "ஐ வாண்ட் சென்ட் பர்சன்ட் ரிசல்ட். சென்ட் பெர்சன்ட் ரிசல்ட் வாங்காட்டா அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, என்பேச்சை நானே கேக்க மாட்டேன்" என்று தமிழ் பட ஹீரோ மாதிரி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்கு வந்து மாமாவிடம் போட்டுப் பார்த்த "எக்ஸாம் ஃபீஸ் முப்பது ரூபாய்" ட்ரம்ப் கார்டும் வொர்க் அவுட் ஆகவில்லை. பிற்காலத்தில் டைபிஸ்ட் ஆவதற்காவது உபயோகமாக இருக்கும் என்று வழக்கம் போல "நல்ல கவனமா படி, கவனம் சிதறக்கூடாது" நேயர் விருபம் ஓட ஆரம்பித்துவிட்டது. கவனமா படிக்கலாம் ஆனால் "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டெல்லாம் லோயர் பரிட்சை சிலபஸில் இல்லை மாமாவிடம் விளக்கியதில் அடுத்த தெருவில் இருக்கும் டீச்சர் வீட்டுக்கு அடிஷனல் க்ளாஸ் போகச் சொல்லிவிட்டார்.

நானும் இன்னொரு நண்பனும் டீச்சர் வீட்டுக்கு ட்யூஷன் போக ஆரம்பித்தோம். டீச்சர் வீட்டில் சொந்த மிஷின் என்பதால் ரொம்ப ஸ்ட்ரிக்ட். போதாதற்கு டீச்சர் வீட்டுக்காரர் வேறு இருப்பார். அவர் தான் அங்கு மெஷினுக்கெல்லாம் ஆல் இன் ஆல் அழகுராஜா. முதல் நாளே "மாசி மாசம்"க்கு தடா போட்டுவிட்டார்.ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்பதால் காலை ஆறு மணிக்கு க்ளாஸ். தூக்கக் கலக்கத்துடன் போய் கதவைத் தட்டினால் டீச்சர் வீட்டுக்காரர் தான் பல்தேய்க்காமல் வந்து கதவைத் திறப்பார். அதே ஊசல் வாய் நாற்றத்துடன் வந்து மெஷின் கவரை எடுத்து பேப்பர் போட்டுக் கொடுக்கும் போது வீட்டில் குடுத்த காப்பி குமட்டிக் கொண்டு வரும். டீச்சர் அவருக்கு நேர்மாதிரி. கொல்லைப் புறத்தில் அவர் பல் தேய்க்கும் போது "ஊவ்வ்வ்வ்ழ்ழ்....ழ்ழ்ழ்ழ்ழ்" என்று போடும் சத்தத்தைக் கேட்டால் நாக்கை கழற்றி வைத்துவிட்டு சிறுகுடல் வரைக்கும் பல் தேய்க்கிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வரும்.

ஒருவழியாக ஏ. எஸ்.டி. எஃப்.ஜி.எஃப் ஸ்பேஸ்பார் செமிகோலன் எல்.கே.ஜே.ஹெச்.ஜே சொல்லிக் கொடுப்பதற்க்குள் டீச்சருக்கு தாவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் படிப் படியாக முன்னேறி ஒரு பாசேஜ் குடுத்து பார்த்து அடிக்கச் சொன்னார். முடித்து திருத்தும் போது பேப்பர் ரத்தக் களறியாக இருக்கும். "எப்பா இப்படியெல்லாம் அடிச்சா தேறாதுப்பா" என்று சின்சியராக சொல்லுவார். ஞாயிற்றுக் கிழமையும் போக ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்ச நாள் கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்துக்கெல்லாம் களாஸ் நேரத்தை மாற்றிக் கொண்டு கிரவுண்டில் போய் டைப்படித்தேன்.

முடிவாக எங்கள் பள்ளியிலிருந்து லகான் மாதிரி பத்து பேரும் போய் லோயர் டைப் பரீட்சை எழுதினோம். ஊரிலிருந்த ஒரு பெரிய அரசுப் பள்ளியில் பரீட்சை. டைப் பரீட்சைக்கும் யூனிபார்ம் அணிந்து கொண்டு போக வேண்டும் என்று எங்க ப்ரின்சிப்பால் இட்ட கட்டளையினால் நல்ல பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் என்று கொஞ்சம் மரியாதை கிடைத்தது. பாஸாகி வேலைக்கு போக வேண்டும் என்று லட்சிய வெறியோடு வந்திருந்த கூட்டத்திற்கு நடுவில் கூச்சமாகத் தான் இருந்தது. மொத்தம் பத்தோ பதினைந்தோ நிமிஷம் தான். ஒரு பத்தி குடுத்திருப்பார்கள். அதை அடிக்க வேண்டும். சுப்பர்வைசர் விசில் ஊதியவுடன் தட தடவென்று எல்லோரும் அடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று நிமிடம் கழித்துத் தான் பார்த்தேன். பேப்பர் நேராக லோட் செய்யவில்லை. டைப்ரைட்டரையும் குடுத்திருந்த பாசேஜையும் மட்டுமே பார்த்து அடித்ததில் பேப்பர் கீழே விழுந்தது கூட தெரியவில்லை. "நீயெல்லாம் பாஸ் பண்ணின மாதிரி தான் " என்று சுப்பர்வைசர் வந்து நக்கலாக எடுத்துக் கொடுத்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து ரிசல்ட் வந்தது. மிக ஆறுதலாக பிரின்சிபால் கேட்ட மாதிரி பரீட்சை எழுதிய பத்து பேரும் செண்ட் பர்சண்ட் ரிசல்ட் வாங்கியிருந்தோம். எல்லோருக்குமே ஊத்திக்கிச்சு. ஒருவேளை அவன் பாஸாகிடுவானோ இவன் பாஸாகிடுவானோ என்றிருந்த சந்தேகமும் ஒழிந்து மீண்டும் ஒரு கூட்டுப் பறவைகளாகி திரும்பவும் "மாசி மாசம் ஆளான பொண்ணு" ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அடுத்த பரீட்சை வருவதற்குள் பத்தாவது போய்விட்டதால் மாமாவுக்கு முப்பது ரூபாய் மிச்சமாயிற்று.

Friday, June 22, 2007

எட்டு விளையாட்டு

நம்ம கொத்ஸ் வழக்கம் போல என்னை மாட்டி விட்டிருந்தார். இது வரை வந்த செயின் விளையாட்டுகளிலே என்னை ரொம்பவும் மிரட்டின விளையாட்டு இதுவாகத் தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் போட்டிருக்கும் சாதனைகளையும் படிக்கும் போது ....கண்ணைக் கட்டிருச்சி...ஆத்தி நம்ளால முடியாதுப்பூ....

நான் எதுவும் எதையும் சாதித்ததாக நினைக்கவில்லை...(ஆனால் நம்பிக்கை இருக்கு பின்னாளில் சாதிப்பேன் என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறேன் ) அதனால ஐய்யா கொத்ஸ் நம்ம மன்னிச்சிருங்க...நம்ளால இந்த ஆட்டத்துல முடியாது...உத்தரவு வாங்கிக்கிறேன்.

Monday, June 18, 2007

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க

கல்யாணமான புதிதில் வெளிநாட்டில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கி, பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா கண்ணு"ன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்தோம் என்றால் போற இடத்துக்கு போய் சேருவோமோ இல்லியோ பெரும்பாலும் வழியிலயே வக்கீலைப் பார்த்து டைவேர்ஸ் அப்ளிகேஷன் குடுத்தாலும் குடுத்திருவோம். அதுவும் சந்தும் பொந்துமா புகுந்து போற ரூட்டுக்கு மேப்ப பார்த்து வழி சொல்லச் சொன்னா வள்ளலார் பொண்டாட்டி கூட விதிவிலக்கு கிடையாது. போற வழி ஃபுல்லா ஒரே லவுஸ்தான் போங்க.

நான் லைசன்ஸ் வாங்கின புதுசுல நடந்த அலம்பல் கொஞ்ச நஞ்சம் கிடையாது(இப்பவும் ஒன்னும் குறைச்சல் இல்லை). ரொம்ப நாள் வரைக்கும் ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை. எல்லைச்சாமி காவல் கிடக்கிற மாதிரி ஒரு எல்கைக்கு உள்பட்டே கார ஓட்டுவது என்று கொள்கை வைத்திருந்தேன். இதுல ரெண்டு தெரு தள்ளி இருக்கிற கடைக்குப் போகனும்னா கூட தங்கமணி முன்னாடி சீட்டில் உட்கார்ந்து கூடை பின்ன ஆரம்பித்து விடுவார். அடப்பாவி மக்கா இதெல்லாம் உனக்கே அடுக்குமா இந்த கார மெனுபாக்ஃசர் செஞ்சவன் பார்த்தா கண்ணீர் விடுவான்மான்னு சொல்லியும் கேக்கிற மாதிரி இல்ல. என் பெண்ணுக்கு வேறு நான் போகிற ரூட்டு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சரி கொளுகையை கொஞ்சம் தளர்த்தி நேர் கோட்டில் நூல் பிடிச்ச மாதிரி இருக்கிற அடுத்த ஊருக்கு போயிட்டு வருவோம்ன்னு ஒரு நாள் கிளம்பி போய் அதுவும் விபரீதமாகி தொலைந்து போய் அந்த இடத்துல இருக்கிற நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து வழிகாட்டி "இருந்தாலும் இந்த ரூட்டுல கூட தொலைஞ்சு போறதுக்கும் ஒரு திறமை வேணும்ன்னு" என்று வழிகாட்டியதோடு குடும்பத்தில் விளக்கேற்றியும்வைத்து விட்டுப் போய்விட்டார். விளக்கு பற்றி எரிந்து ஒரே லவ்ஸாகிவ்ட்டது.

அப்புறம் சமாதானமாகி ரவுண்டபவுட்டில் ஒரு பரிகாரத்தை பண்ணி விட்டு திரும்பவும் எங்க எல்லைக்கு உள்ளயே வலம் வர ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேறி எல்லா இடங்களுக்கும் சென்று வர ஆரம்பித்தோம். ஆனாலும் போகிற வழியில் ஏகப்பட்ட லவ்ஸ் கண்டிப்பாக இருக்கும். இண்டர்நெட்டில் போகவேண்டிய இடத்துக்கு ஸ்டெப் ஸ்டெப்பா வழி சொல்லும் தளங்களிலிருந்து வழியை எடுத்துக் கொண்டு போனாலும், ரெண்டு ஸ்டப்பை முழுங்கிவிட்டு முந்தின லெஃப்டிலேயே ரைட்டுக்கு வழி சொல்லும் போதும், இந்தப் பக்கம் திரும்பனும் என்று விரல் ஒரு திசையும் விரலுக்கிடுக்கில் இருக்கும் பேனா நேரெதிர் திசையிலும் வழி காட்டும் போதும், பாதி தூரம் வரைக்கும் ஸ்டான்ஸ்டட் ஏர்போர்ட் குறியீட்டைப் பார்த்து போகனும் என்று சொன்னால், எதுவரைக்கும் என்று தெரியாமல் ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்ட்டையே முழுவதும் பார்த்துக் கொண்டு போய் நேரே ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்டில் பார்க் செய்துவிட்டு, "நீ தானே சொன்ன?" என்று பழியை நைஸாக மாற்றிப் போடும் போதும், போட்டிருக்கும் ரூட்டுக்கும் போற ரூட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என்று வெளியாளிடம் வழி கேட்டால்...நல்லவேளை வழி கேட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் நேரா போய் பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்" என்ற எகதாளத்தை கேட்டுக்கும் போதும், "போதும்டா சாமி வழி சொல்லி சொல்லி...அடுத்த ஜென்மத்துல பஸ் ட்ரைவர் பொண்டாட்டியாவோ இல்லை காருக்கு தனியா செஃப்பார்(ட்ரைவர்) வெச்சிருக்கவன் பொண்டாட்டியாவோ தான் வாக்கப்படனும்...கார்ன்னு தான் பேரு, ஏறினோமா ஜாலியா பராக்கப் பார்த்தோமா..பாட்டு கேட்டோமான்னு இருக்கா...வீட்டில தான் போறாதுன்னா இங்கயும் இந்த இழவ கட்டி அழவேண்டியிருக்கு" என்ற அங்கால்ய்ப்பைக் கேட்கும் போதும் காரைச் சொல்லுகிறாளா இல்லை நம்மைத் தானா என்பது விளங்காவிட்டாலும் விவேகானந்தர் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்பது விளங்கியது.

இல்ல எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை...நாங்க இப்போ சேட்நேவ் வாங்கிட்டோம்ன்னு சொன்னீங்கன்னா அடுத்த பரீட்சை ஜோடிப் பொருத்தம் போட்டியில் தான். இங்கயும் டைவேர்ஸ் எக்ஸ்பிரெஸ் சர்வீஸ் தான். கல்யாணமான புதிதில் கசகசவென்று எப்பவும் வியர்த்து கொட்டுகிற சென்னையின் கொதிக்கிற வெய்யில் கூட ஏஸி போட்ட தேவலோகமாக தெரிந்த பெரியவர்கள் சொன்ன முப்பது நாள் கெடுவில் இருந்த காலத்தில், ஆபிஸில் ப்ளாகெல்லாம் இல்லாத நேரத்தில் நாங்களெல்லாம் உழைத்து ஏதோ லாபம் பார்த்துவிட்டார்கள் என்று ஒரு நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகியிருந்தது. கொண்டாட்டம்ன்னா பாட்டு பாடினோமா ஆட்டம் ஆடினோமா, கண்டபடி தின்னோமா கக்கூசுக்குப் போனோமான்னு இல்லாம போட்டி வைக்கிறேன்னு ஜொடி பொருத்தம் வேற வைச்சுட்டாங்க.

நான் ஆபிஸில் வழக்கமாக கடலை போடும் பெண்களெல்லாம் இதை விட்டா சான்ஸ் கிடைக்காது என்று எங்கள் பெயரை கொடுத்து மொத்தமாக பழிவாங்கிவிட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஆபிஸில் காதலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். காதலிக்கும் வேகமென்ன கல்யாணமான சோகம் என்ன..இரண்டும் போட்டி போடமுடியுமா? போட்டி நடத்தினவர்கள் முதல் ரவுண்டில் டெஸ்ட் எழுதச் சொல்லிவிட்டார்கள். கேள்விகளை பார்த்த உடனேயே நம்ம லட்சணம் தெரிந்துவிட்டது. பெண்டாட்டியின் பிறந்தநாளை கேட்டாலே பாத்ரூமில் தாள்பாழ் போட்டுக்கொண்டு பத்து நிமிஷம் யோசிக்கனும் இந்த லட்சணத்தில் மாமியாரின் பிறந்தநாளைக் கேட்டிருந்தார்கள். என்னம்மோ தெரிந்து மறந்த மாதிரி ரொம்ப யோசித்ததில் பத்தாவது பரீட்சையில் நியாபகத்துக்கு வராத இந்திய நேஷனல் காங்கிரஸ் ஆரம்பித்த தேதி முதற்கொண்டு புலப்பட்டதே தவிர இதற்கெல்லாம் வழியே தெரியவில்லை. அடுத்து மாமனார் மாமியாரின் கல்யாண நாள் கேட்டிருந்தார்கள். சரிதான்..இதெல்லாம் ஒரு மார்க்கமாய் போகிறது..நமக்கு ஆவுறதுக்கில்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. சரி வழக்கம் போல நம்ம திறமைய காட்ட வேண்டியதுதான்னு பக்கத்துல உட்கார்ந்திருந்தவனப் பார்த்து பிட் அடித்துவிட்டேன்.

காதல் பண்ணிக்கொண்டிருந்த ஜோடியைத் தவிர என்னை மாதிரி கல்யாணமான கபோதிகள் எல்லாரும் திரு திரு தான். போட்டி நடத்துபவர்கள் இந்த சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் "டைம் அவுட்" சொல்ல, அதான் கல்யாணமான அன்னிக்கே தெரியுமேன்னு பேப்பரை கொடுத்துவிட்டேன்.போட்டி நடத்தினவர்கள் ஏதோ பொழச்சு போகட்டும்ன்னு விடாமல் எல்லார் விடைகளையும் மைக்கில் கப்பலேத்த ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளை தங்கமணியும் என்னை மாதிரி சுதந்திர தின தேதிகளை போட்டிருந்ததால் தப்பித்தேன். ஆனால் அடுத்த ரவுண்டில் தங்கமணிக்கு பிடித்த கலரென்ன...தங்கமணியிடம் எத்தனை ஜோடி செருப்பு இருக்குன்னுலாம் ரொம்ப டெக்னிக்கலாய்ப் போய்விட்டார்கள். செருப்பு ஜோடி பிரச்ச்னையில் மேடையிலேயே "அடி செருப்பால" ரெண்டு மூனு ஜோடி தகராறு ஆரம்பித்துவிட்டது. அடேய் எங்கப்பா!! இந்த மாதிரி போட்டியில முக்கியமான இடத்துல தப்பு விட்டோம்ன்னா பெண்டாட்டிகள் அப்பிடியே சிரித்துக்கொண்டு கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.

இங்கே லண்டனிலும் போன பொங்கல் பார்ட்டியில் இந்த மாதிரி ஒரு போட்டியை தோழி உமா அண்ட் தீபா நடத்தினார்கள். ஜாலியாக இருந்தது(உஷாராக அவர்கள் இரண்டு பேரும் கல்ந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). முதல் இரண்டு ரவுண்டுகள் சேர்ந்து பலூன் ஊதுவது, பொட்டு வைப்பது என்று ஈஸியாக இருந்தது. அதெல்லாம் இடது கையாலயே அசால்ட்டா செய்வோம்ல. டாப் ஐந்தில் தேறி ஒரு வேளை நமக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கிறதோ என்று எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. அடுத்த ரவுண்டில் மனைவி கணவனுக்கு டையும், கணவன் மனைவிக்கு புடவையும் கட்டி விட வேண்டிய சேலஞ்சிங்கான ரவுண்ட். (புடவை - ஏற்கனவே அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தான்யா). புடவை கட்டத் தெரியுமென்றாலும் அனுபவம் ப்ளீட் வைப்பது வரை தான் என்பதால் புட்டுக்கிச்சு. நல்ல வேளை தப்பித்தோம் அடுத்த ரவுண்டில் உங்கள் மனைவியை நீங்கள் முதன் முதலாக சந்தித்த போது என்ன கலர் நெயில் பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார் போன்ற ஆப்பு வைக்கும் கேள்விகள் கேட்டு பெண்ட் நிமிர்த்திவிட்டார்கள். ஏற்கனவே இன்னமும் வீட்டில் அதெப்படி "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா புடவை கலர் மட்டும் நியாபகம் இருக்கும்? ஆனா நீங்க வாங்கிக் கொடுத்த தலை தீபாவளி புடவைக் கலர் மட்டும் மறந்து போகும்?"ன்னு ட்ரில் வாங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் விட்டுலயே டெய்லி ஜோடிப் பொருத்தம் டெஸ்ட் தான்.

பி.கு - வருத்தப்படாத வாலிபர் சங்கம், கவலைப் படாத காரிகையர் சங்கம், பயமறியா பாவையர் சங்கம்ன்னு எல்லோருக்கும் சங்கம் இருக்கு. ஹூம் நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?

Friday, June 15, 2007

Sivaji - The Boss

கதையைச் சொல்லவில்லை தாராளமாகப் படிக்கலாம்.
இந்தப் படமெல்லாம் இன்டர்நெட்டில் டவுண்லோட் செய்ய கிடைக்குமென்று சத்தியமாக நினைக்கவே இல்லை. கூகிளில் தலைகீழாக தேடிப்பார்த்தும் மாட்டவில்லை. இந்த ப்ளாக் நண்பர் மூலமாக டவுண்லோட் லிங்கை கிடைத்தவுடனேயே கை பரபரக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் படம் மற்றுமொரு ஃபார்முலா படமாக இருக்காது என்று நம்பினேன்.ஆனால் இந்தப் படம் மிகப் பெரிய ஏமாற்றம்.

ஆரம்பம் எதிர்பார்த்த மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது. எதிர்பார்த்து போல் தலைவர் தடாலடி என்ட்ரி குடுக்கிறார். பார்த்த சில சீனக்ளின் கெட்டப்பை பார்த்த போது சரி தல அலட்டலில்லாத நடிப்பில் கலக்கியிருப்பார் என்று நம்பினேன். முழுவதுமில்லாவிட்டாலும் பல இடங்களில் ஏமாற்றவில்லை. ஆரம்பப் பாடலே மயிலாட்டம் ஒயிலாட்டம், கரகாட்டம், குரங்காட்டம் என்று கூட்டம் கூட்டமாக ஜால்ரா பாட்டு பாடுகிறார்கள். பாடல் முடிந்தவுடன் நம்ம டவுண்லோட் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டது. அடப்பாவி மக்கா மூனு ஜி.பி ராத்திரி முழுவதும் டவுண்லோட் ஆகிசொதப்புகிறதே என்று பதறிப் போய் நோண்டி நொங்கெடுத்து ஒரு வழியாக படத்தை சரி பண்ணி விட்டேன்.

படத்தில் மிகப் பெரிய சொதப்பல் அழுகை தான். இந்த மாதிரி படங்களில் அழுகை சென்டிமென்டையெல்லாம் ஓரம் கட்டி எடுக்கவேண்டாமோ? இயக்குனரின் பிற படங்களைப் பார்த்து அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துப் பார்த்த படம் இது. ஆனால் சொதப்பலுக்கு காரணம் பட்ஜெட்டாக இருக்கலாம். தேவைக்கு செலவழிக்காத படமும் அதிகமா செல்வழிக்கற படமும் ஜெயிக்கவே ஜெயிக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க. தலைவர் படத்தில் வில்லன்கள் தலைவருக்கு இணையாக பட்டயக் கிளப்ப வேண்டாமா? சொதப்பலிலும் சொதப்பல். மிகப் பெரிய சோகம்.

தலைவர் நடிப்பையும் லக்ஷ்மி நடிப்பையும் தவிர மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம் தான். ஆர்.எஸ்.மனோகர் சும்மா பேண்டுக்கு மேல் பாவாடை கட்டிக் கொண்டு படிகளில் ஸ்டைலாக வருகிறாரே தவிர அவர் திறமையை மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் கதையை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் காமெடி செய்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியில் கோயில் கட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதுக்கப்புறம் அதைப் பற்றி மூச்சே விட வில்லை. சென்ற முறை இந்தியா சென்ற போது இந்தக் கோயிலை பார்த்ததிலிருந்து இதன் வரலாறு பற்றி வீடியோ பார்க்க ஆசையாய் இருக்கிறது. "ராஜ ராஜ சோழன்" - படம் அந்த ஆர்வத்தை எள்ளவும் பூர்த்தி செய்யவில்லை.நடிப்பில் Sivaji - The Boss ஒத்துக்கலாம். படத்தில் மத்ததெல்லாம் வேஸ்ட்.

ராஜராஜ சோழன் டவுண்லோட் லிங்க் கொடுத்த அனானி நண்பருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

பி.கு - சிவாஜி படம் ஃபர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு பாதி ராத்திரிக்கு டெக்ஸ் மெசேஜ் அலம்பலா பண்றீங்க...தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி :))

Thursday, June 07, 2007

அந்த மூன்று நாட்கள்

சின்ன வயதில் நிறைய சந்தேகம் வரும் எனக்கு. விளக்கில் ஏன் விளகெண்ணையை ஊற்றாமல் நல்லெண்ணையை ஊற்றுகிறார்கள், ஆரஞ்சுப் பழக் கொட்டையை முழுங்கி விட்டால் வயற்றிலிருந்து செடி வளருமா, பசுஞ் சாணியில் மின்னல் இறங்கினால் தங்கமாக மாறுமாமே எப்படி என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். இவற்றில் தலையாயதாக இந்தது 'மாதவிடாய்' என்றால் என்ன என்பது தான். வீட்டில் அக்காக்களுடன் பிறந்தவனாகையால் இந்த பெண்கள் சமாச்சாரம் நிறையவே அடிபடும். ஆனால் பரிபாஷையில் குசுகுசுவென்று பேசிக்கொள்ளப்படும் இந்த விஷயத்தை டீகோட் செய்வதற்கு நிறைய பிரயத்தனப் படவேண்டியிருக்கும். வீட்டுக்கு விலக்கு, தீட்டு என்று தமிழிலும், அவுட் ஆஃப் டோர், ப்ரீயட்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்திலும் சொல்லப்படும் அந்த மூன்று நாட்கள் எங்க ஏரியாவில் "தூரம்" என்று வழங்கப்பட்டு வந்தது. ஒரு தரம் ட்யூப் லைட்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுது? சாதா ப்ல்புக்கும் ட்யூப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம்"ன்னு எங்க தெரு டீச்சரிடம் கேட்க அவர்கள் அவர்களுக்கும் விடைதெரியாது என்பதை "வெரி குட் இப்படித் தான் தெரியலைன்னா பெரியவங்களிடம் கேள்வி கேட்டு புரிஞ்சிக்கனும்"ன்னு முதுகில் தட்டிக் சொல்லிக் கொடுத்த தெம்பில், நாலு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அப்பாவிடம் பொதுவில் "தூரம்ன்னா என்னாப்பா...எப்படி ஆவாங்க?"ன்னு எல்லார் முன்னாடியும் நம்ப சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் பையன் ஐன்ஸ்டீன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கிறானே என்று ரொம்ப பெருமைப் பட்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்ன்னு பார்த்தா கோபம் வந்து நான் என்னம்மோ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கின மாதிரி முதுகில் ரொம்ப பலமாக தட்டிக் கொடுத்து காதைத் திருகிவிட்டார்.

அக்காக்களிடம் கேட்டால் நைன்டி சிக்ஸ் டிவைட்டட் பை சிக்ஸ் என்னவென்று எதிர் கேள்வி கேட்டு இம்போசிஷன் எழுதச் சொல்லி கையை ஒடித்துவிடுவார்கள் என்பதால் மெதுவாக அம்மாவிடம் போய் கேட்டேன். எங்கம்மா நான் என்னம்மோ வயசுக்கு மீறின கேள்விகளை கேட்ட மாதிரி பதறிப் போய்விட்டார்கள். "யாருடா உனக்கு இந்தமாதிரி கேக்க சொல்லிக் குடுத்தாங்க?"ன்னு கேட்க..நான் ரொம்ப பெருமையா ட்யூப் லைட் மேட்டர சொல்லி...சரி போ நீ சொல்லாட்டா நான் அந்த டீச்சர் கிட்டயே போய் கேட்டுக்கிறேன்னு சொல்ல, ஈன்ற பொழுதில் பெரிதுவத்த என் தாய்..." அடப்பாவி இதையெல்லாம் எல்லார்கிட்டயும் கேட்காதடான்னு சொல்லி "அது வந்து கடவுள் ஒரு கல்லை மிதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கார் அதை தெரியாமல் மிதித்துவிட்டால் அது தான் தூரம் அப்புறம் மூன்று நாட்களுக்கு யாரையும் தொடக்கூடாது வீட்டில் தனியாக இருக்கவேண்டும் என்று உம்மாச்சி (சாமி) கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் இது தேவரகசியம்.. இதப் பத்தி யாருகிட்ட்யும் கேட்க்கவோ சொல்லவோ கூடாது ரகசியமா வெச்சிக்கோன்னு" என்று பதமாக சொல்ல. எனக்கு மேலும் கேள்விகள். அதெப்படி நம்ம வீட்டு பாத்ரூமில தான் கல்லே இல்லீயே அப்புறும் எப்படின்னு எதிர் கேள்வி கேட்க, எங்கம்மா மோர் கடையும் மத்தை திருப்பி பிடித்து தேவரகசியத்தின் பொறுமையின் எல்லை இதுதான்னு ரெண்டு காட்டு காட்ட...அப்புறம் தேவரகசிய சந்தேகங்களை கொஞ்ச நாள் ஒத்திப்போட்டுவிட்டேன்.

ஆனால் ஒருநாள் அவசரமாய் டாய்லெட்டுக்கு கடமையாற்ற சென்று கொண்டிருந்த போது ஓட்டிலிருந்த விழுந்திருந்த கல்லை மிதித்து விட்டேன். "ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட, எங்கம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையிலடித்துக் கொண்டு பெருமைப்பட, எங்கப்பா நான் என்னம்மோ அசின் கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார். சின்ன வயதில் எனக்கு கொஞ்சம் எந்த்தூ ரொம்பவே ஜாஸ்த்தி. வீட்டில் தேள் வந்தாலோ, இல்லை புது சட்டை போட்டாலோ சின்னத்தம்பி பைத்தியம் மாதிரி "எனக்கு கலியாணம் எனக்கு கலியாணம்"ன்னு தெருவில் சந்தோஷமாக அறைகூவல் விடுவேன். அன்றைக்கும், நான் தூரமான மேட்டரை தெருவெல்லாம் அறைகூவல் விட யத்தம் கட்ட, எங்கப்பாவுக்கு தேரடி சுடலைமாடசாமி உடம்பிலேறிவிட்டது. வீட்டு வாசலை நான் எட்டுவதற்குள் எங்கிருந்தோ வந்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டு, இந்த அறிவு ஜீவியை எப்படி சமாளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் கவலையோடு பார்க்க மீண்டும் சாம தான பேத தண்ட முறைகள் பரீட்சிக்கப்பட்டன.

அந்த தரம் 'தண்ட' முறை மட்டும் கொஞ்சம் பலமாக பிரயோகிக்கப் பட்டதில் உண்மையாகவே அந்த தேவ ரகசியம் பற்றி அப்புறம் ஆர்வக் கோளாறு கொஞ்ச நாள் அடங்கியிருந்தது. இருந்தாலும் like minded peer group knowledge dissemination செசன்ஷில் இது பற்றி விவாதித்தும் எங்கள் அறிவுஜீவித்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த மேட்டர் இருந்தது. அப்புறம் டீ.வி வந்த காலத்தில் கேர்ஃப்ரீகாரர்கள் புண்யத்தில் கேர்ஃபிரீக்கும் தேவரகசியத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். இருந்தாலும் அந்த விளம்பரத்தில் வரும் அம்மாக்களெல்லாம் ப்ரில் இங்க் ஏன் யூஸ் பண்ணுகிறார்கள்? எங்க வீட்டிலாவது ப்ரில் இங்க் வாங்குவார்கள், கண்ணுக்குட்டி கணேசன் வீட்டில் இங்கே வாங்கமாட்டார்களே..இவங்களுக்கெல்லாம் பாத்ரூமில் ப்ரில் இங்க் எப்படி கிடைக்கிறது என்று பலவிதமான சந்தேகங்கள். அப்புறம் இந்த மாதிரி விளம்பரங்களில் பரதநாட்டியம், டேன்ஸ், ஊஞ்சலில் ஆடுவது, ரோட்டில் ஆடுவது என்று குழப்பி எடுத்துவிட்டார்கள். இந்த 'விஸ்பர்'காரர்கள் மட்டும் ஒரு பாப் வெட்டிக் கொண்ட பீட்டர் ஆண்டியைப் போடுவார்கள். அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும். இருந்தாலும் ரகசியம் புலப்படவில்லை. அதிலும் பெண்களின் சுதந்திரத்தை வேறு லிங்க் செய்ய ஆரம்பித்தவுடன் கொஞ்ச நஞ்ச புரிதலும் போயே போச்சு.

அப்புறம் பின்னாளில் இந்த ரகசியம் எப்படியோ தெரிந்தது(எப்படி தெரிந்து கொண்டேன் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன் நியாபகத்துக்கு வரமாட்டேங்கிறது). இந்த லட்சணத்தில் தான் சினிமாக்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி கீழே கவுத்தி கையைக் கோர்த்துக் கொண்டு கசக்கினால் குழந்தை பிறந்துவிடுமென்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த டவுட்டையெல்லாம் யாரிடமும் கேட்கவில்லை.

Tuesday, June 05, 2007

படிச்சவன் பதிவக் கெடுத்தான்

Desigirl நான் பதியவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு டாப்பிக்கில் போஸ்ட் போட சொல்லி டேக் செய்திருக்கிறார். எனக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர்கள்/ புத்தகங்கள்

1. நம்ம தலை சாண்டில்யன். திரைப்படம் பற்றி பேசும் போது எனக்குத் தெரிந்த அனைவரையும் பீட்டர் ஜாக்ஸன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றி பேசி நிறைய போரடித்திருக்கிறேன். அதே போல் எழுத்தாளர்களில் நான் வியந்து ஸ்லாகிக்கும் எழுத்தாளர் சாண்டில்யன். இவரின் எழுத்து வசீகரமானது. இவரின் எல்லா நாவலகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். கடல் புறா, யவன ராணி இரண்டும் எனது மிகவும் பிடித்தமானவை. அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் சாண்டில்யன் நாவல் கதாநாயகனாய் தான் பிறக்க வேண்டும் என்று பிள்ளையாருக்கு நேர்ந்து கொண்டிருக்கிறேன் (அதுவும் யவன ராணி கதாநாயகனாய்). சாண்டில்யன் ஹிஸ்டரி ஜ்யாக்ரஃபியில் ரொம்ப ஸ்ட்ராங்க். நிறைய ஆராய்ச்சி தகவல்களை பின்புலமாக கொண்டு கதை பின்னியிருப்பார். இவரின் கதாநாயகிகள் ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( வெறும் காத்து தான் வருது). தலைவர் எழுதிய ராஜ முத்திரையில் முதல் பாகம் எங்க ஊரில் தான் நடக்கிறது. படிக்கும் போது அட நம்மூரப் பத்தியெல்லாம் தலைவர் எழுதியிருக்கிறாரே என்று அப்படியே சிலிர்த்துவிட்டது. இவர் மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்தால் எப்படியாவது போய் கண்டிப்பாய் நேரில் பார்த்திருப்பேன். இவரின் பல நாவல்களை இன்னும் படிக்கவில்லை என்பதை நினைக்கும் போதே எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும். (அப்போதானே படித்துக் கொண்டே இருக்கமுடியும்). இவரின் புத்தகங்கள் இங்கே எங்க ஊர் லைப்ரரியில் கிடைக்கிறது.ஒவ்வொரு தடவையும் இவரின் புத்தகம் ஏதாவது இருக்கும் எனது லிஸ்டில். மற்றபடி இவரின் நாவல்களை யாராவது தமிழில் படமாக எடுக்க மாட்டார்களா என்று இன்றளவும் ஏக்கமாய் இருக்கிறது.

2.தேவன் - இவரின் எழுத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இவரின் நகைச்சுவை இருக்கும். இவரின் எழுத்தையும் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கால நடையில் இருக்கும் இவரின் நகைச்சுவை நிறைய நேரங்களில் குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும்.

3. சுஜாதா - தலையப் பத்தி நான் சொல்லவேண்டியதில்லை. இவருடைய பாணி, நடை எல்லாமே அருமையாக இருக்கும். என்னைப் பொருத்த வரையில் இவருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் ஒரு ஒற்றுமை. இருவருமே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார்கள். பல புதிய முயற்சிகள் செய்திருக்கிறார்கள். சின்ன வயதில் ஊரில் நூலகத்தில் ஒரு புத்தகம் தான் எடுக்க முடியும். அதனால் தெருவில் நாலைந்து வானரங்கள் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு புத்தகங்கள் எடுப்போம். இவருடைய புத்தகங்களை ஒன்றுக்கு மேல் பார்த்துவிட்டால் ஒளித்து வைத்துவிடுவோம். அந்த இடம் எங்களுக்கு மட்டும் தான் தெரியுமாகையால் நாங்கள் படிக்கும் வரை வெளியே யாரும் எடுக்க முடியாமல் செய்துவிடுவோம். கடைசியில் ஒரு நாள் லைப்ரரியன் கண்டுபிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டு அதிலிருந்து நாங்கள் வந்தாலே அட்டெண்டர் பறக்கும் படை மாதிரி கூடவே வந்து நோட்டம் விடுவார். அதெல்லாம் ஒரு த்ரில்.நிறைய பேர்கள் மாதிரி இவருடைய ஸ்ரிரங்கத்து தேவதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

4.கல்கி/ பொன்னியின் செல்வன் - இவருடைய இந்த நாவலின் பிரம்மாண்டம் இன்னும் மனதிலிருக்கிறது. சரித்திர கால நாவல்கள் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டிருந்த என்னை (சரித்திர கால திரைப்படங்கள் விஷயமே வேறு இன்னமும் விரும்பிப் பார்ப்பேன் :) ) பொன்னியின் செல்வன் தலைகீழாக மாற்றி விட்டது. பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒரே தடவையில் நூலகத்திலிருந்து எடுத்துவந்து கொடுத்த இருப்பத்தி ஓரு நாள் கெடுவில் ஐந்தாம் பாகம் முடிப்பதற்குள் கெடு முடிந்துவிட்டது. ரினியூ செய்வதற்க்கு தடையாக யாரோ ரிசர்வ் செய்திருந்தார்கள். புத்தகத்தை திரும்பக் குடுக்காமல் ஃபைன் கட்டிக் கொண்டே படித்து முடித்து தான் திரும்பக் கொடுத்தேன். பைன் கட்டி படித்த ஒரே புத்தகம் இது ஒன்று தான் இதுவரைக்கும். சிவகாமியின் சபதமும் நன்றாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்குப் பிடிக்கவில்லை.

5.ஆர்.கே.நாராயணன் - நான் இங்கிலிபிஸ் புத்தகங்கள் எல்லாம் படிப்பதே இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் ட்ரெயினில் ஒரு இங்கிலீஸ் ஃபிகர் ரெகுலராய் வருகிறதே ஃபிலிம் காட்ட தோதாய் இருக்கும்மே என்று ஊருக்கு போயிருந்த போது ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்" வாங்கி வந்தேன். மிக அருமையான புஸ்தகம். என்னை மாதிரி ரெபிடெக்ஸ் விட்டேத்திகளுக்கும் புரியும் படி எளிய ஆங்கிலத்தில் அருமையாக எழுதியிருப்பார். படிக்க ஆரம்த்தவுடனே மிகவும் பிடித்து விட்டது. ஆர்.கே.நாராயணனின் எழுத்து மந்திரத்தில் ஃப்லிம் காட்ட வேண்டிய கடமையை மறந்து உண்மையாக ஊன்றிப் படித்து அந்த ஃபிகரையும் கோட்டைவிட்டேன். பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும் ட்ரெயினில் தமிழ் புத்தகங்களுக்கே மாறிவிட்டேன்.

6. சாவி - வாஷிங்டன்னில் திருமணம் - இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். சின்ன வயதில் புத்தகங்களில் வருவதைப் பார்த்து தெருவில் மாமிகள் பூரித்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் படித்ததில்லை. இங்கு எங்கள் லைப்ரரியில் கிடைக்கவில்லை. யாரவது கடன் தந்து உதவினால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் (யவனராணி தவிர்த்த) சாண்டில்யன் நாவல் கதாநாயகனாகவோ/நாயகியாகவோ பிறப்பீர்கள்.

7.பாலகுமாரன் - இவர் புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இவரின் நடையில் சில உத்திகள் எனக்குப் ரொம்ப பிடிக்கும். ஆன்மிகமும் அறிவுரையும் மிகைப்பட்டு இருக்கும் இவரின் சில புத்தங்களினால் இப்பொழுது இவர் புத்தகங்களை ரொம்ப படிப்பதில்லை. ஆனால் இதற்கு முற்பட்ட இவரின் சில நாவல்கள் மனதை பிசைந்திருக்கின்றன.

இது தவிர சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், பாலகுமாரன் என்று எல்லாரையும் படிப்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விண்ணப்பம் சிவாஜி நடித்த "ராஜ ராஜ சோழன்" படம் எங்காவது டவுண்லோட் செய்யக் கிடைக்குமா? நானும் இந்த டி.வி.டிக்கு நாயா பேயா அலையறேன் கிடைக்க மாட்டேங்குது.

மற்றபடி உங்கள் ஆர்வங்களையும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் அறிய ஆவலாய் உள்ளேன். உங்கள் பதிவிலோ/ பின்னூட்டத்திலோ தெரிவியுங்களேன். உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான புத்தங்களையும் தெரிவியுங்களேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்க வசதியாக இருக்கும்! நன்றி.