Friday, December 29, 2006

ரெடி ஸ்டார்ட் கேமரா

நான் முடிவெட்டிக்கொண்டால் எதாவது விசேஷமாக நடக்கும். அதுவும் முடித்திருத்துபவர் ரொம்ப மெனெக்கெட்டு திறமையெல்லாம் காட்டி கரிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு கரம்பியிருந்தால் அதிவிசேஷமாக சம்பவங்கள் நடக்கும். ரெகுலராக பஸ்ஸில் வரும் லொட லொட பாட்டிக்குப் பதிலாக அழகான வெள்ளைக்கார குட்டி வந்து ஆட்டையாம்பட்டிக்கு வழி கேட்பாள். "இம்புட்டு நாளா எங்கம்மா போயிருந்த...மண்டைய கரம்பிட்டு வந்தவுடனே கரெக்டா வந்துடறீங்களேம்மா.." என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே வழியைச் சொல்லுவேன்.

இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.

இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.

"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****

"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."

"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.

"ஐய்யோ.பாவம் கனிகா.."

"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."

"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."

ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.

"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."

"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.

அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.

ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.


பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...

Sunday, December 03, 2006

என் இனிய...

சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டேன். இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் மன்னிக்கவும். அக்டோபர் மாதத்திலிருந்து ஆபிஸ், வீடு, வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்று எனக்கு திரும்பிய பககமெல்லாம் ஆப்பு தான். இன்னும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் குறைந்த பாடில்லை. இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன். அதுவரை இங்கு வழக்கம் போல் வந்து போக முடியாது, அட்டென்டன்ஸ் குறைவாகத் தான் இருக்கும் ஒன்றும் குறைந்துவிடாது! மெயிலிலும் இங்கே பின்னூட்டத்திலும் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அட்லாஸ் வாலிபர் மாதம் செம ஊத்தல். இதற்கு மேலும் சொதப்ப முடியாத படி சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதில் ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் கதை வேறு உள்ளடக்கம். மைக்கும், கேட்பதற்கு நாலு பேரும் கிடைத்துவிட்டால் தியாகராஜ பாகவதர் எங்க தாத்தா தான்னு குஷி பிறப்பது போல இன்னும் என்னவெல்லாமோ எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த்தேன். நேரம் ஓடிவிட்டது, கொஞ்சம் லேட்டாக போய் வாய்பளித்தமைக்கு நன்றி சொல்லப் போனால் "ரொம்ப ஊத்தாத, கிளம்பு காத்து வரட்டும்" என்று லாகினைப் பறித்து விட்டார்கள் :) வாய்ப்புக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றியும், சொதப்பியதற்க்கு மன்னிப்பும்.(அதாவது மன்னிப்பு நான் கேட்டுக்கிறேன்)

நடுவில் என்னடா இயந்திரமயமான வாழ்க்கை என்று வெறுத்துவிட்டது. என்னத்தையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆபிஸ், வீடு, வாசல், பணம்,மீரா ஜாஸ்மின் ,பிட்ஸா, பொங்கல், பினாயில் - அடப் போங்கடா எல்லாம் மாயை போதும் என்றாகிவிட்டது. ஏதோ சயன்ஸ் சானலில் இன்னும் டிரில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் இன்னொரு பால்வெளி (மில்கி வே) இருக்கிறது என்று காட்டினார்கள். இந்த அண்ட வெளியில் நாமெல்லாம் தூசு. வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நூறு ஆண்டுகளில் எத்தனை தேறப் போகிறதோ...இதற்கு இந்த நாய் படாத பாடு...பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு. அப்புறம் சரவணா பவனில் மிக்ஸட் வெஜிடபள் பராட்டா சாப்பிட்டுவிட்டு, ஸ்வீட் பீடா போட்டுக் கொண்டே பல்லைக் குத்திக் கொண்டிருந்த போது "ஹகூனா மடாடா" (Hakuna Matata) தத்துவம் சித்தித்தது.

இடைப்பட்ட காலத்தில் சில நல்ல படங்களையும் வழக்கம் போல் ஏகப்பட்ட குப்பைகளையும் பார்த்து வைத்தேன். பாலாஜி எஸ் ராஜன் தயவில் "ப்ளாக்" (Black) ஹிந்தி படம் பார்த்தேன். ஹாலிவுடில் சிலபேர்கள் எடுப்பது மாதிரி நம்மாட்கள் நுண்ணிய உணர்வுகளை மையப் படுத்தி எடுக்கவே மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் சிறிது போக்கியிருக்கிறது. "ப்ளாக்" பிழியப் பிழிய அழ வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.அட்லீஸ்ட் தொண்டையையாவது அடைக்கும் நான் கியாரண்டி. ராணி முகர்ஜி நடிப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அமிதாப் பச்சன் நடிப்பை இப்போது தான் பார்க்கிறேன் (அவர் படமெல்லாம் ரொம்ப பார்த்ததில்லை). இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் குடும்பம் தான் கொஞ்சம் செயற்கைத் தனமாக இருக்கிறது ஆனால் இந்த இருவரின் நடிப்புக்காக அதையெல்லாம் மன்னித்துவிடலாம்.


வீட்டில் வேறு கட்டுமான வேலை ஆரம்பித்தாகிவிட்டது. டீ.வி கம்ப்யூட்டர் எல்லாவற்றையும் குப்பயோடு குப்பையாக கட்டி வைத்திருக்கிறோம். கன்னிகா வந்ததிலிருந்து இப்போதான் தங்கவேட்டை பார்க்க ஆரம்பித்தேன்...தக தகவென்று இருக்கிறார்..ஹூம் வீட்டு வேலை முடியும் வரையில் அவர் தொடர்ந்து தங்கவேட்டையில் இருக்கவேண்டும் என்று முருகனுக்கு இரண்டு ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்.

வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செஞ்சு பார்ன்னு பழமொழியெல்லாம் பிரெஞ்சு காண்டிராக்டரிடம் சொல்லிப் பார்த்தேன், பத்து பைசா கூட குறைக்கமாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டார். இந்த பழமொழியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டும் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டன்னு நக்கல் வேறு. செங்கல் லோடு இறக்குகிற அன்னிக்கு அவனை தங்கமணி கிட்ட போட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வீட்டை இடிக்க ஆரம்பித்தைலிருந்து வீடு முழுக்க ஒரே தூசி. எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது.

எல்லா சாமான்களையும் ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டிவிட்டு இன்னொரு பெட்ரூமில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நடுவில் டுபுக்கு ஊரை விட்டு ஓடிப் போய் உத்த்மனாய் வாழ ஆரம்பித்துவிட்டார் என்று யாரும் கதை கட்டிவிட்டுவிடக் கூடாதே என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.

கொஞ்ச நாள் வெளிஉலக தொடர்பே இல்லாமல் ப்ளாக் உலகை திரும்ப வந்து பார்த்தால் தமிழ் வலையுலகில் நிறைய மாற்றங்கள். போண்டாவும், பூரிக் கிழங்குமாய் களை கட்டிக்கொண்டிருந்த வலைபதிவர் சந்திப்புகளை போண்டா வேண்டா சங்கம்...கருத்தரங்கம் எல்லாம் நடத்தி கட்சி,சங்கமெல்லாம் உருவாகிவிடுவார்கள் போல இருக்கிறது. அடப்பாவிகளா...அப்போ ஓசி போண்டாவெல்லாம் அவ்வளவு தானா? இது வரைக்கும் ஒரு ஓசி போண்டா கூட தேத்தலையே..கருத்தரங்க தலைப்புகளையெல்லாம் வேறு பார்த்தால் பயமாய் இருக்கிறது.மக்கள் திருந்திருவாங்க போல இருக்கே...

எல்லாம் சரி..நடுவில் நான் ஒரு படத்தில்(சினிமா அல்ல) வேறு நடித்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுத்த பதிவில்...விபரமாய் எழுதுகிறேன்.