Friday, April 28, 2006

கிரிப்டிக் கதைகள் - காதல் கதை

முன்குறிப்பு - தமிழ் கூறும் நல்லுகம் இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த மாதிரி கதைகளில் ஒரு சின்ன க்ளூ கதையில் இருக்கும். அதைப் பிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்கப்புறம் கதையை நீங்களே சொல்லிவிடலாம். கதை என்று ஒன்று ரொம்ப இருக்காது ஆனால் சொல்லும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது. இதை ரொம்ப நாளாக ட்ரை செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதல் முயற்சி. கேவலமாக இருந்தால் வழக்கம் போல் பின்னூட்டத்தில் காறித் துப்பவும்.
*****************************************

எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. அவள் காதலைச் சொன்னதிலிருந்தே இப்படித் தான். மஹாதேவனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.அவள் ரொம்ப பெரிய இடம். அவ அப்பா மத்திய அமைச்சர். எனக்கு அதை நினைத்தாலே உதறும். மஹாதேவனிடம் சொன்னால் எனக்கு பித்துப் பிடித்திருக்கிறது, இந்த பயம் அனாவசியம் என்பான். ஆனால் எனகுத் தான் தெரியும் அண்ட்ராயர் தெரிய ஆறு தடியன்கள் அவள் வீட்டில் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள். கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து நான் காதலைப் படிப்பேன் என்று நினைக்கவே இல்லை. முதல் தரம் அவள் என்மீது தெரியாமல் மோதிய போதே அந்த தடியன்கள் முறைத்தார்கள். மஹாதேவனிடம் சொன்னதற்கு உலகமே இப்பிடித் தான் இதுக்கெல்லாம் பயந்தா எப்பிடிடா சினிமால்லாம் பார்த்ததில்லையான்னு கிண்டல் செய்தான். அப்புறம் ப்ராஜெக்ட் வொர்க் உன்கூட செய்யலாமா என்று அவள் கேட்ட போது என்னால் ஏனோ மறுக்கமுடியவில்லை.

அப்புறம் நீ ஏன் ப்ரெஞ்ச் குறுந்தாடி வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டாள். சத்யமில் இங்கிலீஷ் படம் பார்க்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி உன் குறுந்தாடி குறு குறுவென்கிறது எடுத்துடு என்றாள். நீ என்னை உண்மையிலேயெ காதலிக்கிறாயா என்று கேட்டால் முத்தம் தருவாள். மூன்றாவது தரமாய் வேறொரு நாள் கேட்ட போது முத்தத்துக்குப் பதிலாக கெட்டவார்த்தையில் திட்டினாள். உங்கப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று நான் முகத்தை தொங்கப்போட்டதற்கு திரும்பவும் முத்தம் கொடுத்தாள். துப்பட்டாவை முக்காடு போட்டுக்கொண்டு பைக்கில் பின்னாடி ஒட்டிக் கொண்டு ரோட்டுக் கடையில் பரோட்டா வாங்கித் தா என்பாள். இப்படி ஒரு நாள் பரோட்டா சாப்பிடும் போது தான் ஒரு அண்ட்ராயர் தடியன் எங்களைப் பார்த்துவிட்டான்.

அதுக்கப்புறம் அவ அப்பா அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்தார். கல்யாணமானாலும் இப்பவும் என்னைப் பார்ப்பதற்கு டெய்லி வீட்டுக்கே வந்து விடுவாள். தோளில் சாய்ந்து கொண்டு என்னிடம் பேசாமல் இருக்கமுடியாது அவளால். எனக்குத் தான் இன்னும் பயமாய் இருக்கும். எங்கள் விட்டில் எங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் அந்தத் தடியன்கள் பார்த்துவிட்டால்? மஹாதேவனிடம் சொன்னால் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் கவலைப் படாதே என்பான்.

வாசல் பெல் அடிக்கிறது. மஹாதேவன் தான். "அப்பா கதவைத் திறங்கோ மஹாதேவன் வந்தாச்சு"

என்ன...பையன் என்ன சொல்றான். எதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

மஹாதேவனே தான். என்னப் பார்த்து என் காதல் கதையைக் கேட்காமல் இருக்கவே முடியாது அவனால்

இல்லை டாக்டர் அப்பிடியேத் தான் இருக்கான். இன்னும் அந்தப் பொண்ணையே நினைச்சுண்டு இருக்கான். அந்த மினிஸ்டர் கட்டையில போக...எம் புள்ளைய ஆள வைச்சு அடிச்சு இப்பிடி பைத்தியமா அலையவிட்டுட்டானே..உருப்புடுவானா அவன்...

அப்பா எப்பவுமே இப்படித் தான் மஹாதேவனைப் பார்த்தா புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவர் கவலை அவருக்கு. ஓ.கே மஹாதேவன் கிட்ட இன்னிக்கு அவ என்ன சொன்னான்னு சொல்லனும். உங்களை அப்புறமா பார்க்கறேன். டேக் கேர்.

Wednesday, April 26, 2006

Lifecycle...

பெரியவனானதும் என்னவாடா ஆகப் போற?

.....

டாக்டரா ஆகப் போறியா இன்ஞ்சினியர் ஆகப்போறியா?

ட்ராக்டர் அதான் பெரிய வண்டி..ஃபாஸ்டா போகலாம்

டேய் இன்னிக்கு ஆத்துக்கு குளிக்கப் போகும் போது பார்த்தேன்....செம நீளமா ஒரு துப்பாக்கிய வைச்சுக்கிட்டு ஒரு போலீஸ் நின்னாரு பாரு...கத்தியெல்லாம் இருந்துடா அந்த துப்பாக்கில...அத வெச்சு சுட்டா ரொம்ப தூரம் போகும் தெரியுமா...யார வேணா சுடலாம்...

நான் போலிஸாத் தான் ஆகப் போறேன்...எங்க சித்தப்பா ஆபிஸ் அதுக்கு அடுத்தாப்புல தான் இருக்கு....அவருக்கு இந்த போலீஸெல்லாம் ரொம்ப ப்ரெண்டு தெரியுமா..அவர் சொன்னா போதும் உடனே துப்பாக்கிலாம் குடுத்து வேலை குடுப்பாங்க...வெளியே நிக்கிற போலிஸாத் தான் ஆகப் போறேன் அவங்களுக்குத் தான் பெரிய துப்பாக்கியெல்லாம் குடுப்பாங்க...உள்ள உள்ளவங்கல்லாம் சும்மா கணக்கு தான் எழுதுவாங்க தெரியுமா?

அம்மா இன்னிக்கு ஃபய்ர் சர்விஸ் வண்டியப் பார்த்தேன்மா...நான் அத ஓட்டறதுக்குப் படிக்கப் போறேன் அதுக்குத் தான் படிக்கப் போறேன்

ஃபயர் சரிவீஸ் வேண்டாம் எப்பவாவது தான் வண்டி ஓட்டமுடியும் நான் ட்ரெயின் ஓட்டப் படிக்கப் போறேன். வாண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு வண்டிலேயே தூங்கிக்கலாம். வண்டி தண்டவாளத்துல தானா போகும். ட்ரெயினுல தான் ரொம்ப சவுண்ட் வர்ற ஹாரன் இருக்கு தெரியுமா?

டாக்டர் வேண்டாம் இன்ஞ்சினியாராவே போறேன்....டாக்டர் சீட் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமாம்..

அப்பா, என்.டி.யேல சேரட்டுமா? பத்தாவது பரீட்சைக்கு அப்புறம் என்டரன்ஸ் எழுதினா ஆர்மில சேர்ந்தாலும் அங்கேயே இன்ஞ்சினியர் இல்லை மெடிக்கல் வேணாலும் படிக்கலாம்...அதுக்குன்னே கோட்டாலாம் இருக்காம். அப்புறம் சர்விஸ் முடிச்சுட்டு கவர்மெண்ட்ல வேற எந்த வேலைக்கும் அப்ளிகேஷன் போட்டாலும் எக்ஸ் சர்விஸ் மேன் கோட்டா வேற உண்டு.

அப்பா, மரைன் ரேடியோ கோர்ஸ்ல சேரட்டுமா? எடுத்தவுடனேயே இருபதாயிரம் சம்பளமாம். கடல்ல கப்பல்ல இருந்தாலும் ஆறு மாசம் லீவு உண்டாம்...ரொம்ப டிமாண்டா இருக்காம்

நான் ஏ.எம்.ஐ.ஈ சேரப்போகிறேன். ஏரோநாட்டிகல் இன்ஞ்சினியரிங்...பாஸ் பண்றது பயங்கர கஷ்டம் ஆனால் முடிச்சுட்டா பயங்கர வேல்யூ வெளிநாடெல்லாம் போகலாம்

பி.எஸ்.ஸி முடிச்சுட்டு எம்.ஐ.டில சேரனும். இப்போவே அப்ளிகேஷனெல்லாம் வாங்கியாச்சு...பார்ப்போம்...

எம்.எஸ்.ஸி படிச்சுண்டே ஐ.ஐ.எஸ்.ஸி பரீட்சைக்கும் ப்ரிப்பேர் பண்றேன். அங்கேயே கேட் பாஸ்பண்ணி ஆஸ்ட்ரோ ப்ஸிக்ஸ்ல பி.ஹெச்.டி முடிச்சா நேர இஸ்ரோவில போய் சேர்ந்துக்கலாமாம். ரொம்ப பக்கம் தானாம்.

எம்.எஸ்.ஸி வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ஃலைப்புல செட்டிலாகறதுக்குள்ள விடிஞ்சிரும். கேட் எழுதி எம்.ஃபில் படிச்சு பி.ஹெச்.டி முடிக்கிறதுக்குள்ள பேரன் பேத்தி பார்துடலாம்... சங்கரோடு தீஸிஸ் இன்னும் அக்செப்ட்டே பண்ண மாட்டேங்கிறாராம் அவன் கைடு..ஆகஸ்ட்டோட எட்டு வருஷமாகப் போறது

கம்ப்யூட்டருக்கு படிச்சா ரொம்ப வேல்யூவாம்...உடனே வேலை கிடைக்கிறதாம். பெங்களூர்ல ரோட்டுல கூவி கூவி கூப்பிடறாங்களாம்...லாரில வந்து ஏத்திண்டு போறாங்களாம்.

சி,சி++ லாம் நம்மூர்ல வேலை ரொம்ப இல்லையாம், மெயின் ஃபிரேம் படிச்சா மூனு மாசம் ட்ரெயினிங்காம் அப்புறம் ராவோடு ராவா அமெரிக்கால போய் இறக்கி விட்ருவானாம்

மெயின் ஃப்ரேம் மோகம் இப்போ சுத்தமா இல்லை...ராவோடு ராவா போலாம்ன்னு சொன்னது ஆந்திராக்காராளாம். அவாள்லாம் ராவ் பேமிலியாம். க்ளையன்ட் செர்வர் படிச்சாத் தான் இப்போல்லாம் மதிப்பு. தெரியலைன்னா கம்ப்யூட்டர் துடைக்கிற வேலை கூட குடுக்க மாட்டானாம்

என்னத்தடா...அடுத்த வாரம் ப்ராஜெக்ட் லைவ் போகுது ஏகப்பட்ட பக் இருக்கு பி.எம். சாவடிக்கிறான்...எங்கேர்ந்துடா பிடிச்சாங்க இவன

டேய் மச்சி சி.டி.எஸ்ன்னு புதுக் கம்பெனி நல்ல சம்பளம் தராங்களாம்...சி.வி ஃபார்வேர்ட் பண்ண உள்ள ஆள் யாரும் தெரியுமா? கொஞ்சம் கேட்டு சொல்லேன்

டேய் உங்க சி.டி.எஸ் ஆள தொந்தரவு பண்ணச்சொல்லாதடா...இங்கேயே யூ.எஸ் பிராசஸ் பண்றேங்கிறான். என்ன மயிரா அப்ளிகேஷன் டெவெலப் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கீங்கன்னு க்ளையண்ட் இவன் கிட்ட சாமியாடிருக்கான்...இவன் நான் ரெண்டு பேர உடனே அனுப்பறேன்னு நெஞ்ச நக்கியிருக்கான்...அவனும் மண்டைய ஆட்டிடானாம். இன்வாய்ஸ்ல இந்தப் பக்கம் ஏத்திடுவாங்கன்னு தெரியல அவனுக்கு. என்ன பொழப்புடா..இது...சீ..இதுக்கு பேசாம மவுண்ட் ரோட்ல மாமா வேலை பார்க்கலாம்..

மச்சி பி.எம். புத்தியக் காட்டிட்டான்டா...அந்த க்ளையன்ட் கபோதி பட்ஜெட் இல்லைன்னு திடீருன்னு வேட்டிய உதறிக் காட்டிட்டானாம் இந்தப் பரதேசி யூ.எஸ் போறதுக்கு ஆடி பொறக்கட்டும் ஆவணி பொறக்கட்டும்ன்னு நான் என்னம்மோ கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொன்ன மாதிரி கதை விடுறான். உங்க சி.டி.எஸ் ஆளோட இன்னும் டச்சுல இருக்கியாடா?

ரொம்ப சாரிடா ...நேத்திக்குத் தான் யூ.கே.க்கு முத்திரை குத்திட்டு வந்தேன். மக்கா ட்ரெயினேஜ்ல வேலை பார்க்கவேண்டியவனெல்லாம் எம்பஸ்ஸில தூக்கி போட்டிருக்காங்க...குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துட்டான். உன் சி.டி.எஸ் காண்டாக்ட் கிட்ட சொல்லிடு மச்சி

நம்மூர் எவ்வளவோ பரவாயில்லைடா இங்க ஒன்னும் தெரியாதவனெல்லாம் என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். என்ன விட நாலு மடங்கு சம்பளம் வேற. சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் டான்ன்னு குடிச்சுக் கூத்தடிக்க கிளம்பிருவான். எல்லாத்துக்கும் நான் தான் உயிர விட வேண்டியிருக்குடா.

இப்போ பரவால்லடா நானும் டகால்டி வேலை கத்துக்கிட்டேன். ரெண்டு நாள் வேலைக்கு நாலு நாள் ஆகும்ன்னு சொல்லிருவோம்ல இந்தியாக்காரனா கொக்கா...

இதக் கேட்டியா மாப்ளே இப்போ நம்மூர்ல சம்ப்ளமெல்லாம் எகிறிடுச்சாம்....நாம் வாங்குறதெல்லாம் ஒன்னுமே இல்லையாம். அத விட ஊர்லயே வாங்குறாங்களாம் என்ன பொழப்புடா ...ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு நாம இங்க வந்தா...நம்ம நேரம் இங்க புட்டிக்கிச்சு அங்க ஓகோன்னு ஆகிடிச்சாம்ல...

சரியான நாதாரிப் பொழப்பா போச்சுடா...கல்யாணமாகி குழந்தை குட்டின்னு ஆகி முன்ன மாதிரி வேலை கூட மாற முடியலடா...லொட்டு லொசுக்குன்னு ஆயிரத்தெட்டு யோசிக்க வேண்டி இருக்கு..இப்போல்லாம் என் குழந்தை தான்டா கொஞ்சம் ஆறுதல்...

இங்க வாடா செல்லம்..நீ பெரிசானதும் என்ன ஆகப் போற?...சொல்லுடா அப்பா கேக்குறேன்ல..!

Sunday, April 23, 2006

இனி ஒரு விதி செய்வோம்!

காரு போட்டு ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு
அக்காளுன்னு தங்கச்சின்னு அவசரமா உறவு சொல்லி
ஓட்டு கேட்டு வந்தாங்களே சின்னாத்தா - இன்னிக்கு
ஒருத்தனையும் காணலையே செல்லாத்தா..

மல்லுவேட்டுத் துண்டு போட்டு மைக்கு வைச்சு விளம்பரங்க
வாழ்வு மலருமுன்னான் வறுமை தொலையுமுன்னான்...
போடுங்கம்மா ஓட்டுன்னான் புடலங்காய பார்த்துன்னான்
ஓட்டு போட்ட கையோடு சின்னாத்தா - இன்னிக்கு
ஒருத்தனையும் காணலையே செல்லாத்தா

வேலை கிடைக்குமுன்னான் விலைவாசி குறையுமுன்னான்
சாலை தெருவிளக்கு சர்காரு போடுமுன்னான்
போட்ட விளக்கு கூட இப்போ சின்னாத்தா - சும்மா
பொசுக்குன்னு போயிடுச்சே செல்லாத்தா

என்னுடைய தமிழ் வாத்தியார் எழுதித் தந்து உணர்ச்சிபூர்வமாக ராகத்தோடு பல பேச்சுப்போட்டிகளில் பேசிப் பரிசு வென்றிருக்கிறேன். அரசியல் என்பது சாக்கடை என்ற சித்தாந்தம் அடிமனதில் ஊன்றியிருக்கிறது. "ஆயுத எழுத்து" பார்த்து மணிரத்தினத்தை நினைத்து புன்முறுவலுடன் உதட்டைப் பிதுக்கி இருக்கிறேன். பெட்டிகளும், சீட்டுகளும் தீர்மாணிக்கும் கொள்கைகளுக்கும், கடைசி நேர தேர்தல் நேர கூட்டணிகளுக்கும் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவைதை விட பால்கோவா சாப்பிட்டுவிட்டு பல்லைக் குத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தரம் கூட வோட்டுப் போடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ.ஒரு.மு.க ஆட்சிக்கு வரும் போது "கிழிச்சுருப் போறாங்க" என்பதை பெருசுகள் பேசட்டும் என்று புறந்தள்ளியிருக்கிறேன்."அப்துல் கலாம்" ஜனாதிபதியானாலும் அடுத்தது யார் என்ற நெருடல் இருந்திருக்கிறது.

வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது - நேற்று வரை. வோட்டர் ஐடென்டிட்டி கார்டு கூட வாங்கியதில்லை. இன்று வோட்டுப் போட முடியாதே என்று வருத்தப் படுகிறேன். இதெல்லாம் திருத்தவே முடியாத துறை என்ற எனது சித்தாந்ததிற்காக வருத்தப் படுகிறேன். நான் ஏங்கியது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. படித்தவர்கள் "லோக் பரித்ரன்" என்ற கட்சி ஆரம்பித்து களம் இறங்கி இருக்கிறார்கள். அப்பிடி போடு அருவாள என்று உடம்பு சிலிர்கிறது. எடுத்தவுடனேயே ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்ற தெளிவு இருக்கிறது என்பதை உணர்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்து இருப்பது சந்தோஷத்தை தருகிறது. ஆட்டோ கலாச்சாரம் அழியும் காலம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்துவிட்டோம். இவர்களுக்கு வாய்ப்பு குடுத்துப் பார்ப்போமே. உங்களில் ஓட்டுப் போடும் வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் - இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் ப்ளிஸ். அரசியிலில் அனுபவம் இல்லை என்ற வாதங்களை புறந் தள்ளுங்கள். இப்போது இருப்பவர்கள் எல்லாம் ஊழலில் தான் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் பிரச்சாரத்திற்கு சன்.டீவியோ ஜே.டிவியோ சிம்ரன்,ராதிகா என்று நட்சத்திரப் பட்டாளமோ இல்லை...இவர்களுக்கு ஆதரவு திரட்ட நாம் துணை புரிவோம். "எம்.ஜியாருக்குத் தான் வோட்டு" என்று மூளைச் சலவை செய்யப் பெற்ற கிராமத்தவருக்கு இவர்களின் மகத்துவம் புரிய நம்மால் முடிந்ததைச் செய்வோம். இதுவரை வந்தவர்கள் எல்லாம் சுரண்டியது போதும். இவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்போம்...இவர்களால் இவர்கள் வாக்கிலிருந்து ஒரு வேளை எதுவும் செய்யத் தவறினாலும் ஒன்றும் குடிமுழிகிவிடப் போவதில்லை...இது வரை வந்தவர்கள் எல்லோரும் வழிப்பதைத் தவிர ஒன்றும் உடனே கிழித்துவிடவில்லை

அராஜக அரசியிலில் இவர்கள் காணாமல் போவதற்கு நமது ஆதரவு தான் அடிகோலும். "போடுங்கம்மா வோட்டு லோக் பரித்தனைப் பார்த்து" என்று கோஷம் போடுவதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை..உங்களுக்கு?



ஜன கண மன - ஜனங்களை நினை
கனவுகள் அல்ல காரியம் துணை
ஒளியே வழியாக மலையே படியாக
பகையோ பொடியாக

இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்

Wednesday, April 19, 2006

நல்லா இருக்கீங்களா..

சொல்லாமல் கொள்ளாமல் கொஞ்சம் நாள் லீவு எடுத்துவிட்டேன். மன்னியுங்கள். ஆபிஸிலும் வீட்டிலும் கொஞ்சம் வேலை மென்னியைப் பிடித்துவிட்டது. அத்தோடு இயந்திரமயமான உலக வாழ்க்கையிலும் கொஞ்சம் வெறுப்பு வந்து தெலுங்கு டப்பிங் படங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். "வீரன்" பார்த்திருக்கிறேன். சீக்கிரம் விமர்சனம் எழுத வேண்டும். "அண்ணன் நடந்து வந்தா மாஸ்"க்கு எங்கள் வீட்டில் ஒரு அரை டிக்கெட்டும், ஒரு உழக்கும் சோபாவில் ஏறி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

சின்ன வயதிலேயே ரிட்டயர் ஆகிவிடவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. என்று நிறைவேறுமோ தெரியவில்லை. “டுபுக்கு World” சைட் கிடப்பில் இருக்கிறது. இதுபோக வீட்டில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆரம்பித்து, ப்ராஜெக்ட் ஆரம்பதற்கு முன்னாலேயே எங்கோ போய் நிற்கிறது. வீட்டை புல்டோசர் கொண்டு வந்து இடிக்கவில்லை அவ்வளவு தான்! மற்றபடி வீட்டை தலைகீழாய் மாற்றுவதற்குள் மண்டை காய்ந்துவிடும் என்று நினைக்கிறேன். மாற்றுவதற்கு கேட்டிருக்கும் தொகையைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இலவசக் கொத்தனார் எல்லாம் ப்ளாகில் தான் போலும்.



அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கும் பழக்கம் போகவில்லை. சரவண பவன் மிக்ஸட் வெஜிடபள் பரோட்டாவைப் போல் "ரங் தே பஸந்தி" ரொம்ப பிடித்தது. மச்சினி, அக்கா புருஷனுக்கு ரூட் விடும் கலாபக் காதலன் தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சி என்று யாராவது, "வாலி" படம் பார்க்காதவர்கள் காதில் காலி ப்ளவர் சுற்றலாம். மெர்குரிப் பூக்கள் ரொம்ப சுமார். மீரா ஜாஸ்மின் அறிமுகக் காட்சி அக்மார்க் “சண்டைக் கோழி” காப்பி. கொஞ்சம் நல்ல திரைக் கதையுடன் எடுத்திருக்கும் ஜூன் ஆர்-ல் சரிதா இளைத்த மாதிரி இருக்கிறது. இன்னும் திருந்தவே திருந்தாத பரமசிவன், நியாபகத்துக்கு வராத இன்னும் சில புதுப் படஙளையெல்லாம் பார்த்ததில் நாட்டை விட்டு எங்கேயாவது காட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றி, கடைசி நேரத்தில் ப்ளான் செய்து சக்ரா அண்ட் கோவுடன் ஒரு சபாரி பார்கிற்கு கிளம்பி குரங்கு, மான், யானை, சிங்கம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். "கார் ஓட்டுகிற இந்த சிங்கத்தைப் பார்க்காமல் காருக்கு வெளியே இருக்கும் போலி சிங்கத்தைப் போய் இப்படி பார்க்கிறீர்களே" என்று பரணி பாடியதில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்றால் என்னவென்று சிற்றறிவுக்கு புரிந்தது.

புலி , சிங்கத்தையெல்லாம் சுதந்திரமாக கார் பக்கத்திலிருந்து பார்க்கும் போது நன்றாகத் தான் இருந்தது. சுற்றி நிறைய கார்கள் இருந்ததால் பயமே இல்லாமல் இருந்தது.(அவர்களுக்கு). அரை டிக்கெட் விட்டால் சிங்கத்துக்கு சிடுக்கெடுத்துவிடுபவள் போல தைரியமாக வாயடித்துக் கொண்டு வந்துகொண்டிருந்தாள். ஆனால் பேக்டரியன் ஒட்டகம் தான் குளித்து கொஞ்சம் நாளாகியிருக்கும் போல...அழுக்கு சடை சடையாக உவ்வே....
வனவாசம் போனதில் தலைவர் சன்.டீவியில் "வேட்டையாடு விளையாடு" பற்றி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

தற்போது சித்தம் தெளிய தேவசேனாபதியின் மதனகாமராசன் கதை படித்து வருகிறேன். கதை ஒரு மாதிரியாக இருக்கிறது. கதையில் நாலு பக்கத்துக்கு மூன்று தரம் புருஷர்களும் ஸ்திரீகளும் சம்போகத்தில் ஈடுபடுகிறார்கள். (வார்த்தை புரியாவிட்டால் விட்டுவிங்கள்.. தயவு செய்து பின்னூட்டத்தில் சந்தேகம் கேட்காதீர்கள் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது :P) பாதி தான் படித்திருக்கிறேன். சை...என்ன கதை இது! என்றாகிவிட்டது எனக்கு. இரண்டாம் பாகம் எதாவது இருக்கா என்று லைப்ரரியில் தேடிப் பார்க்கவேண்டும்.

மற்றபடி கூடிய சீக்கிரம் சித்தம் தெளிந்து ப்ளாக் பித்தம் ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

(முதல் படத்தில் ஜூனியர் சக்ராவும், என்னுடைய மகள்களும்)

Monday, April 10, 2006

Memoirs of a Geisha



சில படங்கள் அழவைப்பதே நோக்கமாக எடுக்கப்பட்டிருக்கும். நாமும் துட்டைக் குடுத்துப் பார்த்து விட்டு பிழிய பிழிய அழுது, கண்ணீரில் ரெண்டு பெட்ஷீட்டும்,நாலு தலைகாணி உறையும் அலசிப் போட்டுவிடுவோம். இந்த மாதிரி படங்களில் எனக்குப் பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால் அழவிடாமல் சோகத்தை சொல்லமுடியும். அழமாட்டோம் ஆனால் தொண்டையை அடைக்கும். சில சமயம் அதிகமில்லை ஜென்டில்மேன் (மேன்..வுமன் கிடையாது) ஒரு துளிக் கண்ணீர் கண்களில் எட்டிப் பார்க்கும். படம் பார்த்து இரண்டுமணி நேரத்துக்கு கதாநாயகியை நினைக்காமல் கதையை நினைத்துக் கொண்டிருப்போம். அழகி, சலங்கை ஒலி ஆகிய படங்களில் எனக்கு இந்த அனுபவம் நேர்ந்து இருக்கிறது.(கதாநாயகி மேட்டர் சலங்கை ஒலிக்குப் பொருந்தாது) இதற்கடுத்த கொஞ்சம் குறைவான சோகம் என்பது ஒரு துளி கண்ணீரைத் தவிர்த்து மற்ற எல்லா பாதிப்பையும் ஏற்படுத்துவது. "Melancholy" என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது மாதிரி. மெல்லிய சோகம் பின்னனியில் இழையோடிக் கொண்டிருக்கும். இந்தப் படம் என்னைப் பொறுத்த வரையில் அந்த வகையில் சேர்ந்தது.

ஆபிஸில் மேனேஜர் ஒரு பத்து டி.வி.டி குடுத்த போது "மத்த குப்பைகளைப் பார்ப்பதற்கு முன்னால் இந்தப் படத்தைப் பார் என்று ஸ்பெஷலாகச் சொன்னார். ஒரு அதிசயமான சனிக்கிழமையில் காலை ஆறு மணிக்குத் தூக்கம் வராமல் (இல்லாவிட்டல் பத்தரை மணிக்கு குறைந்து விடியாது) தனியாக நான் மட்டும் பார்த்த படம். வீட்டில் செய்யும் உப்புமா மாதிரி சில சில இடங்களில் தொண்டையை அடைத்து ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

"கெய்ஷா" என்பது ஜப்பானில் நம்மூர் தேவதாசி முறை மாதிரி. "கெய்ஷா"வும் தேவதாசிகள் மாதிரி முதலில் கலை சம்பந்தப் பட்டதாகவே ஆரம்பித்து, பின் செக்ஸுடன் கலப்படமாயிற்றோ என்று இந்தப் படம் என்னை நம்ப வைக்கிறது. சரித்திரப் பிண்ணனியை ரொம்ப நோண்டாமல் எழுதுகிறேன் தவறாக இருக்கலாம். படம் ஒரு கெய்ஷாவாக வரும் பெண்ணின் வாழ்க்கையை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஆறு வயதுப் பெண்ணாக கெய்ஷாவாக விற்கப் பட்டு, அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தும், அங்கு கெய்ஷாவாக இருக்கும் ஒரு பெண்ணின் பகையினாலும் கெய்ஷாவாக ஆகமுடியாமல் அடிமையாக வாழுகிறாள். அன்பே கண்டறியாமல் வளரும் சிறுமியின் மனதில் ஒரு சேர்மனின் அன்பான வார்த்தைகள் அப்பிடியே பதிந்து விடுகின்றன. அவர் கொடுத்த கைக்குட்டையை அப்பிடியே அன்புடன் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கிறாள். பின்னாளில் கெய்ஷாவாக மாறி அதே சேர்மனை சந்திக்கும் போது அன்பு அவளுள் காதலாகப் பெருக்கெடுக்கிறது. அவளுடைய கற்பை வேறொருவர் ஏலத்தில் எடுக்கும் போதும் ஜெனரலின் மேலிருக்கும் அவளுடைய காதல் சிறிதும் குறையவில்லை. விதி வசத்தால் பின்னாளில் சேர்மனே அவளை வேறொருவருக்கு ஒரு காரியத்துக்காக அவளைக் கேட்க்கிறார். சேர்மனுக்காக ஒத்துக் கொண்டாலும் அவள் தன் காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படும் அவஸ்தைகள் நெகிழச் செய்கின்றன. கடைசியில் ஒரு வழியாக சேர்மனும் அவளின் காதலை புரிந்து கொண்டு ஒன்று சேருகிறார்கள்.

மிக அழுத்தமாக எடுத்திருக்கிறார்கள். தேவையில்லாத ஜேம்ஸ்பாண்டு ஆபாசத்தைக் கலக்காமல் கதைக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜப்பானிய பெண்ணுக்குப் பதிலாக சீனப் பெண் நடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் சீனப் பெண்ணும் அருமையாக நடித்திருக்கிறர். அதுவும் அந்த ஆறு வயது சிறுமியின் நடிப்பு மிகப்பிரமாதம். சியோ கெய்ஷா பாடங்களை கற்றுக்கொண்டு சயூரியாக மாறும் போது காமசூத்திராவின் சாயல்கள் இருப்பது மாதிரி எனக்குப் பட்டது.

ஒரு உணர்ச்சிப்பூர்வமான ப்ளாக் படித்த மாதிரி இருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள். அருமையான படம்.

Saturday, April 08, 2006

டுபுக்குWorld

விரைவில் உங்கள் அபிமான ப்ரவுசர்களில்...டுபுக்குWorld

Friday, April 07, 2006

நல்லதுக்கு ஒரு பதிவு...

ஒழுங்குமுறைப் படுத்துகிறோம் என்று மதுரையில் நலிந்தோருக்கான ஹாஸ்டலில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ரெண்டு க்ரோசின் மாத்திரை குடுங்கள்” என்று சத்தமாய் கேட்டு வாங்குமளவுக்கு, சகோதரிக்கோ, அம்மாவுக்கோ, மனைவிக்கோ மாதவிடாய் காலங்களில் கடைக்குச் சென்று சானிடரி நாப்கின் வாங்க ஆண்களே கூச்சப்படும் சமுதாயத்தில், படிக்கும் பெணகளின் மாதவிடாய் தேதிகளை பொது ரெஜிஸ்தரில் பதிய வைத்து, அதைக் கேலிக்கூத்தாய் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்.டி.டி.வி இதைப் பற்றி எழுதியுள்ளது.

"யார் கேட்பது இவர்களை எல்லாம் கலிகாலம்" என்றில்லாமல் வலைப் பதியும் நாம் கேட்கலாம் என்று பல்வேறு வலைப்பதிவர்களை சேர்த்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார் பிரேமலதா. முதற்கட்டமாக தமிழக முதல்வருக்கு லெட்டர்கள் பறந்து கொண்டிருக்கிறது. இதில் பிள்ளையார் சுழி போட்டு பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் நிதி திரட்டுவோம் என்கிறார். நல்ல விஷயம். வலைப்பதிவர்கள் தான் என்றில்லை. ஆர்வமிருப்பவர்கள் எல்லோரும் பிரேமலதாவை தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 04, 2006

மேற்படிப்பு

MRF-ல் ரீஜினல் மேனேஜர் 75000 ரூபாய் சம்பளம் இது தான் நான் கொஞ்சம் விவரம் தெரிந்த சின்னப் பையனாக இருந்த போது என்னுடைய ட்ரீம் ஜாப். பேப்பரில் அந்த விளம்பரம் அடிக்கடி வரும். நான் பெரியவனாவது வரைக்கும் அந்த வேகன்ஸி நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். நன்றாகவே படித்து வந்தாலும் ப்ளஸ் டூ படிக்கும் போது குடும்பத்தில் இருந்த சில குழப்பங்களால் என்டரன்ஸ் எழுதமுடியவில்லை. எடுத்த மார்க்குக்கு இஞ்சினியரிங் இடம் கிடைத்து இருக்கும் என்றாலும் (இப்படித் தான் சொல்லிக்கிறது) பி.எஸ்.ஸியில் தான் சேர்ந்தேன். அதற்கப்புறம் சென்னை எம்.ஐ.டியில் சீட் கோவிந்தா ஆனவுடன் எம்.எஸ்.ஸி சேர்ந்தேன். எம்.எஸ்.ஸிக்கு அப்புறம் கேட் எழுதி எம்.பில், பி.ஹெச்.டி எல்லாம் படித்தால் தான் ஏதாவது ஏமாந்த சோனகிரி வேலை குடுப்பான் என்று மண்டையில் பல்பு எரிந்து தோராயமாக கணக்குப் போட்டு பார்த்ததில் இடைப்பட்ட காலகட்டத்தில் நூற்றி இருபது புதுக் கதாநாயகிகளும், மூன்று கனவுக் கன்னிகளும் மாறிவிட வாய்ப்பு இருப்பதால் எம்.எஸ்.ஸி வேலைக்காவாது என்று புரிந்தது. அத்தோடு வீட்டில் கல்யாணப் பிரஷர் வேறு. இந்த சமயத்தில் தான் சென்னைக்கு விடுமுறைக்காகப் போனேன். போன இடத்தில் சும்மா இராமல் என்.ஐ.ஐ.டிக்குப் போனால் அழகான பெண் கவுன்சிலர்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஏ.ஸி போட்டு தனியாக ரூமில் கடலை போடுவார்கள் என்று எவனோ சொன்னதை நம்பி போனதில் ஒரு புடவை அணிந்த பொங்கலின் கரிசனம் கிட்டியது(தாவணி போட்டா தீபாவளின்னா புடவையணிந்தால் பொங்கல் தானே?:P). "யெக்கா...வீட்டுல கல்யாணத்துக்கு பார்த்துட்டாங்கக்கா...அடுத்த மாசம் திருப்பதில கல்யாணம் ஏதோ உங்களால் முடிஞ்ச உதவி செய்யுங்கக்கா"ங்கிற ரீதியில் புலம்ப, "எம்.எஸ்.சி படித்தால் எருமை மாடு தான் மேய்க்கமுடியும் கம்ப்யூட்டர் படித்தால் தான் இருபத்தைந்து வயதில் கல்யாணம் பண்ணிக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு லண்டனில் செட்டிலாகி ப்ளாகெல்லாம் எழுதலாம்" என்று பொங்கல் அருள்வாக்கு சொல்லி அறுபதினாயிரத்தை பொங்கலோ பொங்கலிட்டு விட்டது.

"போஸ்ட் கிராஜுவேஷன எந்த முட்டாப் பயலாவது டிஸ்கண்டினியூ பண்ணுவானா" என்ற மாமாவின் வாதத்திற்கு "இன்னும் ரெண்டு வருஷத்தில முக்கிப் போறதிலேர்ந்து முக்காடு போடற வரைக்கும் எல்லாத்துக்கும் கம்ப்யூட்டர் தயவு வேண்டும்,போஸ்ட் கிராஜுவேஷன் எல்லாம் மொத்தமாக அழிந்துவிடும்" என்று யாகவா முனிவர் மாதிரி சொல்லிவிட்டு நைஸாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு மெட்ராஸ் வந்துவிட்டேன். வந்த அப்புறம் என்.ஐ.ஐ.டியில் எந்த பெண்ணுடனும் கடலை போடாமல்(இதை நீங்கள் நம்பியே ஆகனும்) கண்ணும் கருத்துமாய் படித்ததில் ராம்கோ சிஸ்டம்ஸில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தாலும் மேற்படிப்பு படி என்று மாமா விடுவதாய் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று கோயம்புத்தூர் பாரதியாரில் எம்.சி.ஏ சேர்ந்து கோயம்புத்தூருக்கு பரீட்சை எழுதப் போய், அன்னபூர்னாவில் வெரைட்டி ரைஸ் சாப்பிட்டுவிட்டு, மீரா நாயரின் "ஃபயர்" பார்த்துவிட்டு வந்தேன். இடைப்பட்ட காலத்தில் கல்யாணம் ஆகிவிட மாமா மெட்ராஸுக்கு குடித்தனம் வைக்க வந்து விட்டார். கல்யாணம் ஆகி படிக்கவேண்டிய படிப்புகளில் எம்.சி.ஏவும் சேர்ந்து கொண்டது. ராம்கோவில் சி.வியைக் குடுக்கிறேன் என்று அட்டெண்டன்ஸ் மட்டும் கரெக்டாக விழுந்துகொண்டிருந்ததே தவிர புஸ்தகமெல்லாம் சரஸ்வதி பூஜைக்கு ஏடு அடுக்குவதற்குத் தான் உபயோகமாய் இருந்தது. இந்த லட்சணத்தில் பரீட்சை வைத்தால் மனுஷன் என்ன பண்ணுவான்? பந்தாவாக பரீட்சைக்காக ஆபிஸுக்கு அரை அரை நாள் லீவு வேறு போட்டு விட்டேன்.

பரீட்சைக்குப் போய் ஃபெயிலாக இஷ்டமேயில்லை. வீட்டுக்குப் போனால் மாமா ஒத்துக் கொள்ளமாட்டார். "சரஸ்வதி தேவியை நான் எப்பிடி அவமானப் படுத்தலாம் என்பதிலிருந்து படிப்பு மோர்குழம்பு வைத்து அப்பளம் பொரித்து எப்படி சாப்பாடு போடும் என்பது வரை வாதம் போகும். ஆபிஸிலும் சொல்ல இஷ்டமில்லை. காலேஜைவிட கலாசலான டீம் அங்கு எங்கள் டீம். பயங்கரமாக ஓட்டுவார்கள். பெண்கள் பின்னாடி எல்லாம் கதை பேசமாட்டார்கள். நமுட்டுச் சிரிபுடன் நம்மை வைத்துக் கொண்டே ஓட்டுவார்கள். இந்த வேளையில் தங்கமணிக்கு பிறந்தநாள் வர எக்ஸாமுக்குப் போகாமல் நேர பாண்டி பஜாருக்குப் போய் தங்கமணிக்கு ஒரு வாரமாக பார்த்துப் பார்த்து ட்ரெஸ் எடுக்கப் போய் விட்டேன். கல்யாணமாகி படிக்கிறேன், பரிட்சை எழுதிகிறேன் பேர்வழி என்று பாண்டிபஜாரில் சுத்தின ஒரே பேர்வழி நானாகத் தான் இருக்கும். கல்யாணமாகி முதல் பிறந்தநாள், நல்லதாக எடுக்க வேண்டாமா? முதல் நாள் என்ன எடுக்க என்று பெண்கள் கடையாய் ஏறி வந்து ஹாட்சிப்ஸில் பேல் பூரி சாப்பிட்டேன். அடுத்த நாள் என்ன எடுப்பதென்று முடிவு செய்து பாவ் பாஜி. ஆனால் எல்லாத் பெண்கள் துணிக்கடைகளிலும் பெண்களே விற்பனைக்கு இருந்தார்கள். நான் தொழிலுக்கு புச்சு என்பதால் தயக்கம் வேறு. என் தயக்கத்தைப் சில கடைகளில் வேறு மாதிரி புரிந்து கொண்டு "சாருக்கு குயின்ஸ் ப்ரா எடுதுக் காட்டுங்க..புது டிசைன்லாம் வந்திருக்கு கூச்சப்படாம பாருங்க சார்" என்று கைக்காடிய போது வெட்கத்தில் “இல்லீங்க நான் அதுக்கு வரலை”ன்னு அவசரமாக மறுத்திருக்கிறேன். சல்வார் செக்க்ஷனில் என்னவெல்லாமோ ஜார்கனெல்லாம் போட்டு சில பெண்கள் தாக்குவார்கள். பேசாமல் நதியா பாவாடை, சில்க் ஜிப்பாவென்று இருந்தால் நமக்கும் வாங்க சுலபமாய் இருக்குமே என்று யோசித்ததுண்டு. தங்கமணிக்கு இதெல்லாம் படிச்சுப் பாஸாகிற கேஸில்லை என்பது தெரியுமாதலால் பாண்டிப்ஜாரில் சுத்துகிறேன் என்று தெரியும். ஆனால் ட்ரெஸ் வேட்டையை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தேன். ஏதோ ஒரு டிசைனர் பேஷன்ஸ் கடையில் பாந்தினி சாந்தினி என்று ஒரே அமுக்காக அமுக்கப் பார்த்தார்கள். எடுத்து தனியாக வைங்க... கல்யாணம் பண்ணிக் கொண்டு சாய்ங்காலமாக வருகிறேன் என்று நழுவி இருக்கிறேன். கடைசியில் ஒரு கடையில் பர்ஸுக்குப் பிடிச்ச கலராய் ஒன்று எடுத்துக் கொண்டு, போனால் போகிறது "சி, சி++"ல்லாம் இடது கையாலேயே எழுதி அசால்ட்டாய் பாஸாவேன் என்று ஒரே ஒரு பரீட்சை எழுதி ஜஸ்ட் பாஸில் தேறினேன். அதற்கடுத்த வருடமெல்லாம் மாமா கூட இல்லாததால் பாண்டிப்ஜார் குயின்களின் தொல்லையில்லாமல் லீவு போட்டுவிட்டு ராஜ் டிஜிடெல் ப்ளஸ்ஸில் "கனவனே கண்கண்ட தெய்வம்" பார்த்துக் கொண்டிருந்தேன்.

செல்லம்மாக்காவிடம் முந்தின ஜென்மத்தில் வாங்கின கடனால் பாரதியாருக்கு மூனுவருஷமும் பணத்தை மட்டும் கரெக்ட்டாகக் கட்டி கடனை கழித்துவிட்டேன். ஆபிஸில் "உன் பெண் வளர்ந்து உன்னை மிரட்டினால் தான் நீ எம்.சி.ஏ படிச்சு பாஸ் பண்ணப் போற" என்று ஓட்ட ஆரம்பித்த போது நல்லவேளையாக லண்டன் வந்துவிட்டேன். லண்டனிலும் ஸ்டைலாக எம்.பி.ஏ சேர்ந்து டிஸ்கண்டின்யூ பண்ணலாமா என்று யோசித்தேன். எம்.பி.ஏ விலையைக் கேட்டு எம்பாமலே வந்துவிட்டேன். ஊரில் வீடு கட்டி நேம் போர்டு போட்டால் எம்.எஸ்.ஸி, எம்.சி.ஏ என்று போட்டு ஸ்டைலாக மேலே கோடு போட்டுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இன்னமும் மாமா "லண்டனில் எதாவது மேற்படிப்பு படிக்கிறயா?" என்று அடிக்கடி கேட்பார். "படிக்கிறேன் மாமா...இன்னும் படிப்பார்வம் குறையல ஆபிஸில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்" என்பேன், அவரும் அது பெரிய படிப்பு என்று "நிறைய படி, படிப்பு தான் சோறு போடும்" என்பார். ஹூம் அதெல்லாம் படிக்கிற புள்ளைங்களுக்கு...