Monday, September 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...6

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5

திருமண வைபவங்கள் மிகவும் குதூகலமானவை. அதுவும் நெருங்கிய சொந்த வட்டங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி குஷி. சிறுவர் சிறுமியர்க்கு ஸ்கூலுக்கு லீவு, அப்பா அம்மா கண்டுகொள்ள மாட்டார்கள் விளையாடிக் கொண்டே இருக்கலாம். அப்பாக்களுக்கு அரட்டை அடிக்கலாம், அம்மாக்களுக்கு பிக்கல் பிடுங்கல் கிடையாது. சமைக்க வேண்டாம், வேளா வேளைக்கு வித விதமாக நகையும் உடையும் அணிந்து கொண்டு ஆற அமர அரட்டை அடிக்கலாம். டீனேஜ் பயன்களுக்கும் கல்யாணமாகத பிரம்மச்சாரிகளுக்கும் மட்டும் கொஞ்சம் ரெண்டுங்கெட்டானாய் இருக்கும். சரியான செட் அமையாவிட்டால் போர் அடிக்கும். செட் அமையாவிட்டாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பெண் வீட்டு சொந்தமோ, பையன் வீட்டு சொந்தமோ இருந்துவிட்டால் போதும். மனதில் ஒரு கிளுகிளுப்பு வந்து விடும். அவள் பார்ப்பாளே என்று கூட கொஞ்சம் ஷோக்காய் ஆடை அணிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.

இப்படி ஈடுபாடு இல்லாமல் ஓரளவு நெருங்கின சொந்தத்தில் ஒரு கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னதாகவே போக வேண்டியிருந்தது. பாட்டிகளும் மாமாக்களும் மாமிகளும் சேர்ந்து நடத்தும் மாநாடு மாதிரி இருந்தது.

"ஏண்டியம்மா இந்தப் பச்சைக்கல் நெக்லெஸுக்கு தோதா ஒரு மூக்குத்தி வாங்கித் தரச் சொல்லப்பிடாதோ உன் ஆம்படையான?" - கவலையே படாமல் பாட்டிகள் ஆம்படையான்களுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆம்படையான்கள் இது பற்றி கொஞ்சமும் தெரியாமல் "ஏண்டா அடுத்தாப்புல என்ன படிக்க போற? இந்தக் காலத்துல எவ்வளவு படிச்சாலும் காணாது பார்த்துக்கோ.." என்று எனக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்.

பூச்சாண்டிகளை விட பாட்டிமார் கூட்டமே எவ்வளவோ தேவலை என்று அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்ட போது தான் அவள் வந்தாள். எங்கள் ஊர் பக்கம் பெண்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். அதுவும் கல்லிடைக்குறிச்சியில் தெருவுக்குத் தெரு பஞ்சமே இருக்காது. என்ன கொஞ்சம் துடுக்குத்தனம் ஜாஸ்தியா இருக்கும் (ஹி ஹி...அம்மாடி நீ அப்பிடி கிடையாது நேக்குத் தெரியும்). இவளைப் பார்த்த போது கல்லிடைக்குறிச்சிக் களை தெரியவில்லை. அதையும் தாண்டி அழகாக இருந்தாள். இந்த ஷாம்பூ விளம்பரங்களில் ரெண்டு நிமிஷம் வந்து மனதைக் கொள்ளை கொள்வாளே அந்த மாதிரி பளிச்சென்று இருந்தாள். மார்டனாகவும் இருந்தாள். அன்றைக்கு எனக்கு கன்னி ராசி தூக்கலாக இருந்திருக்கவேண்டும். நேர நான் வம்பளந்துகொண்டிருந்த பாட்டியிடம் வந்து கட்டிக்கொண்டாள் (பாட்டியைத் தான்...) குடுத்து வைத்த பாட்டி. பாட்டி ஷேம லாபங்களை விசாரித்தலிருந்து பார்டிக்கு பம்பாய் என்று தெரிந்தது. (ஆல் இன்டியா லெவெலில் ஜொள்ளாட்டா ஜென்மம் சாபல்யம் அடையுமோ). பம்பாயும் பெங்களூர் லிஸ்டில் அன்று சேர்ந்துகொண்டது. கொஞ்ச நேரம் பாட்டியிடம் பேசி விட்டு பம்பாய் வேறு பாட்டியைக் கட்டிக்கொள்ள கிளம்பிவிட்டது. (ஹூம் பேசாம பாட்டியா பிறந்திருக்கலாம்).

பம்பாய் கலகலவென்று எல்லாரிடமும் பேசிக் கொண்டே தென்றலாய்த் தவழ்ந்தாள். இப்பிடி நான் பாட்டுக்குத் தேமேன்னு பம்பாயைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அந்த வில்லன் வந்தான். சிரித்துக் கொண்டே அறிமுகப் படுத்திக்கொண்டான். புள்ளையாண்டன் மெட்ராஸிலிருந்து வந்திருந்தான். "என்ன அந்தப் பெண்ணை ரொம்ப லுக்கு விடறே? பிடிச்சிருக்கோ? " முகத்துக்கு நேர கெட்டவுடன் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன். "அப்பிடியெல்லாம் இல்லை....அவ முகத்தை எங்கியோ பார்ர்தமாதிரி இருந்துது அதான் யோசிச்சிண்டிருக்கேன்...ஏன்?" சரளமாக வாயில் வந்தது.

"நல்லா இருக்கா இல்ல...ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்" மெட்ராஸில் சிக்கந்தர் ஒப்பந்தம் பிரபலம் இல்லை போல. நேர பட்டா பண்ணி எடுத்துக் கொண்டான்.

"புரியறது. ம்...நீ நடத்து ராசா".

ஜொள்ளு விடுவது திங்கள்கிழமை காலைத் தூக்கம் மாதிரி. எழுந்திருக்க மனசே வராது. இனிய இம்சை. ஆனால் ஜொள்ளுவிடுவதைப் பக்கத்திலிருந்து பார்பது என்பது ஒன் டே கிரிக்கெட் மாட்சைப் பார்பது மாதிரி. விறுவிறுப்பாக இருக்கும். இப்பிடி விளையாடு அப்பிடி விளையாடு என்று சகட்டு மேனிக்கு வாரி வழங்கலாம். சொதப்பிட்டியேன்னு அங்கலாய்க்கலாம். ஜெயிச்சாலும் தோத்தாலும் காரணங்களை அலசிப் பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். மொத்ததில் நேகாமல் நொங்கெடுத்த திருப்தி கிடைக்கும்.

மெட்ராஸ் Vs பம்பாய் மேட்ச்சும் இப்பிடித் தான் விறுவிறுப்பாக இருந்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this --> Comments(#)

No comments:

Post a Comment

Related Posts