Friday, April 30, 2004

You are invited

May I take pleasure in inviting you and your family for the Birthday party of my daughter Varsha who is turning four tomorrow. If you can make it to the venue in London pls do mail mail me for details.(I have not published it here for obvious reasons).

PS- I was busy with this and hence couldn't blog much. Will resume next week. Have a nice (long) weekend!

Monday, April 26, 2004

தாமிரபரணித் தென்றல் - 2

For picture version of this post Part 2a Part 2b

நாடக கான சபா

பத்தாவது வயதின் போது தான் மாமா வீட்டிற்கு வந்தேன். இத்தனைக்கும் அடுத்த தெருவில் தான் அதற்கு முன் இருந்தேன். பையன்களில் ஓரிரு முகங்கள் தெரியுமே தவிர யாரையும் பழக்கம் கிடையாது. பெரியவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் முன்பிருந்த சன்னதித் தெருவிற்கும், இந்த வடக்குத் தெருவிற்கும் அடிக்கடி போட்டி நடக்குமாகையால், பையன்கள் என்னை பாகிஸ்தான் டீமை சேர்ந்தவன் மாதிரி தான் பார்த்தார்கள். வடக்குத் தெருவில் பையன்களும் ஜாஸ்தி. அக்ரஹாரம் ஆகையால் எதாவது அப்பப்போ நடந்து கொண்டிருக்கும். மாதர் சங்கமெல்லாம் உண்டு. மாதர் சங்கமென்றால் பழைய சினிமாவில் காட்டுவது மாதிரி பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு கைப்பையை தூக்கிக் கொண்டு சினிமாவுக்கெல்லாம் போகமாட்டார்கள். புதன்கிழமை தோறும் கோவிலில் ஸ்லோகம் சொல்லுவார்கள். மத்தியான் வேளைகளில் ஒவ்வொரு வீட்டிலும் முறைவைத்துக் கொண்டு புதிது புதிதாக ஸ்லோகம் சொல்லிக்கொள்வார்கள். நவராத்திரிகளில் இதேமாதிரி முறைவைத்துக் கொண்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு வெத்தலபாக்கு குடுப்பார்கள். இதுபோக உறுப்பினர்களின் வீடுகளில் எதாவது விஷேமானால் அதற்கு ஒரு தூக்கோ வாளியோ கண்டிப்பாக பரிசாக கொடுப்பார்கள். நான் அந்த தெருவிற்கு போன காலத்தில் வருஷா வருஷம் மாதர் சங்க தினமும் கொண்டாடுவார்கள். மாதர் சங்க தினத்தில் பாட்டு, நடனம், நாடகம் அனைத்தும் உண்டு. சிறுவர் சிறுமியர் அனைவரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வார்கள்.

நான் வந்த புதிதில் மாமி என்னையும் சேர்த்துவிட்டாள்.

"என்னடா வேணும் கோந்தே...டான்ஸ் ஆடறியா பாட்டு பாடறியா, நாடகத்துல நடிக்கப் போறியா?"

ரிகர்ஸல் பார்க்கும் அந்த வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமாக இருந்ததால் நான் திரு திருவென முழித்தேன். ஒருவரையும் வேறு தெரியாது. மூன்று மூன்று பேராக நிறுத்தி வைத்திருந்த டான்ஸ் கூட்டதில் ஒரு ஆள் குறைவாக இருந்த்தால் நடனக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டார்கள்.

"ஆடுவான் மாதிரி தெரியறது. நீங்க விட்டுட்டு போங்கோ நாங்க பார்த்துக்கறோம்"

"அதெல்லாம் ஜோரா ஆடுவான், ஆத்துல கண்ணாடி முன்னாடி நிறைய ஆடுவான்" - ஐய்யோ பாவம் மாமி நான் கண்ணாடி முன்னாடி காகா வலிப்பு வந்தவன் மாதிரி கையையும் காலையும் வெட்டி வெட்டி இழுப்பதை நடனம் என்று நம்பினாள்.

உசரத்திற்கேற்ப நடுவில் ஒரு இடம் கிடைத்தது. இரண்டு பக்கமும் பெண்கள். வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு ஸ்டெப்பில் கையெல்லாம் வேறு கோர்த்துக்கொள்ள வேண்டிருந்தது. கையெல்லாம் வேர்த்திருந்தது. அந்தப் பெண் எதாவது சொல்லுவாளோ என்று பேருக்கு பிடித்துக்கொண்டேன். வளையமாக சுற்றும் போது லேசாக பிடித்திருந்தனால் கைஅடிக்கடி நழுவிற்று.

"கைய பிடிச்சுண்டா காதறுந்துரும்ன்னு பயப்படறியோ? கெட்டியா பிடிச்சுக்கோ அறுந்தா தைச்சுக்கலாம் " நடனம் சொல்லிக்குடுத்த அக்கா கேலி செய்ய எல்லாரும் சிரித்தார்கள். அப்புறம் இருக்கிப் பிடித்துக்கொண்டேன். நழுவக் கூடாதே என்று கவனம் செலுத்தியதில் விடவேண்டிய கட்டத்தில் நான் மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு இருந்தேன்.

"பரவால்லயே கெட்டியா பிடிச்சுக்கறயே...ஆனா இந்த இடத்துல விட்டுறு உனக்கு வேனும்னா அப்புறம் திரும்ப பிடிச்சிக்கலாம்...."

திரும்பவும் எல்லாரும் சிரித்தார்கள். உம்மென்று இருந்தேன். அந்த வருடம் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு 'தத்தக்கா புதக்கா'வென்று ஆடிவிட்டு வந்தேன்.

அடுத்த வருடத்திலிருந்து பையன்களும், களமும் பழக்கமாகிவிட்டதால் நாடகத்திலெல்லாம் நடிக்க ஆரம்பித்தேன். நாடகத்திற்கு தெருவில் இருக்கிற பையன்கள் எல்லாரும் செட் சேர்ந்தோம். நண்பனின் அம்மா தான் நாடக ஆசிரியர். மிக அழகாகச் சொல்லிக் குடுப்பார்கள். அதோடு நல்ல பழக்கம் என்பதால் தைரியமாக வசனமெல்லாம் பேசினேன். பண்ணையார் வேஷம் போட்டு நன்றாக பேசியதில் தெருவில் நிறைய பேர் பண்ணையாரென்று பட்ட பேர் வைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள். அதே நாடகத்தை நாலைந்து மேடைகளில் போட்டோம். வசனம் நிறைய இருகே என்று பெண் வேஷம் போட எல்லாரும் தயங்கிய போது வசனம் நிறைய இருக்கே என்று ரெடியாக ஒத்துக்கொண்டேன். ராஜா வேஷம், ரானி வேஷம், சாமி வேஷம் என்று எல்லா வேஷமும் போட்டேன்.
வசனத்தில் சொதெப்பல்லாமும் உண்டு.

"பக்தா உன் பக்தியை மெச்சினேன்" என்று உம்மாச்சி பக்தனுக்கு காட்சி குடுக்க வேண்டிய விறுவிறுப்பான காட்சியில் "பக்தா உன் பஜ்ஜியை மெச்சினேன்" என்று சொதப்பி எல்லாரையும் வயத்தைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்த கலாட்டாவும் உண்டு.

ஒரு உம்மாச்சி நாடகத்தில் அனுமாருக்கு முக்கிய வேஷம். நிறைய வசனம் பேச வேண்டும் என்று எனக்கு குடுத்தார்கள். வேஷமெல்லாம் வேண்டாம்டா அப்பிடியே போய் நில்லு தத்பரூமாக இருக்கும் என்று எல்லாரும் கலாய்த்தார்கள். வேஷத்திற்கு எல்லாம் ரெடி இந்த வால் மட்டும் நொழு நொழுவென்று இருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்து நண்பனின் அம்மா ஒரு கனமான கம்பியை வளைத்து துணியைச் சுற்றி வால் தயார் செய்தார்கள், கொஞ்சம் கனமாக இருந்தது. மேடையில் கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து கொண்டு நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சி முடிந்து ஒதுங்க வேண்டிய நண்பன் என் வாலில் தடுக்கிக் கொண்டு போக...கம்பி பிய்த்துக்கொண்டதுமல்லாமல் பின்புறத்தில் இடம் மாறி குத்த வேறு ஆரம்பித்துவிட்டது. எனக்கு மரண் அவஸ்தை. அடுத்த காட்சியில் அனுமார் வேஷத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் வேறு ஆட வேண்டும். அந்த காட்சி முடிவ்தற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது எனக்கு.(அனுமார் ஆப்படித்துவிட்டார் :) ) அப்புறம் அவசர அவசரமாக திரையைப் போட்டு ஒரு மாமியை பாட்டுப் பாடவிட்டு எனக்கு சரி செய்தார்கள்.
நாடகமெல்லாம் முடிந்து இரண்டாம் பரிசு கிடைத்த போது வலியெல்லாம் போயே போச்சு..பொயிந்தே...

-- தொடரும்

Friday, April 23, 2004

தாமிரபரணித் தென்றல் - 1

For picture version of this post click here

காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதென்று நினைக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த காலம் அது. கதைக்கான கரு கவிதை மாதிரி பீலிங்கா யோசித்தால் வராது. எப்போதாவது தீடிரென்று சென்னையில் மழைவருவது போல் பூச்சாண்டி காட்டிவிட்டு போய்விடும். அதை அப்பிடியே மானே தேனே பொன்மானே போட்டு டெவெலெப் செய்ய வேண்டும். எதை எழுதலாம் என்று யோசிக்கையில் நம்ம கதையே பெரிய கதையா இருக்கே இதையே ஏன் எழுதக்கூடாதென்று நீயுட்டன் மாதிரி கேட்டுக்கொண்டேன். இரண்டாயிரத்தில் உலகம் அழிந்து போய்விடுமென்று யாகவா முனிவர் சொல்லிவிட்டதால்...கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டு எழுதலாமென்று தள்ளி போட்டுவிட்டேன். ஆனால் மனதிலேயே மானே தேனே பொன்மானே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நூலகத்திலிருந்து "ஸ்ரிரங்கத்து தேவதைகள்"(ச்ஸ்ரி எப்பிடி போடுவது என்று தெரியவில்லை) புத்தகத்தை எடுத்துவந்தேன். படிக்க படிக்க ஒரே படபடப்பு, ஆத்திரம். என்னாடா இத மாதிரி தானே நாமளும் எழுதனும்னு நினைச்சிருந்தோம்(??!!$R$?). அதற்குள் இந்த ஆள் சுஜாதா எழுதிவிட்டாரே என்று வருத்தமாக இருந்தது. நல்ல வேளை இத மாதிரி நாமளும் எழுதி யார்கிட்டயாவது காட்டிருந்தா என்ன ஆயிருக்கும். திருவிளையாடல் தருமி மாதிரி - ஏற்கனவே நான் தான் எழுதினேன்ன்னு ஒரு பயலும் நம்ப மாட்டேங்கிறான், நல்லவேளை தப்பிச்சோம்ன்னு மனதை தேற்றிக்கொண்டேன். ஆனாலும் அந்த ஏக்கம் மனதைவிட்டு போகவேஇல்லை. அதில் ஒருபகுதி தான் "நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்". நீங்க வேற படிச்சுட்டு நல்லா இருக்குனு சொல்லிடீங்களா...(சொல்லலையேன்னு சொல்ல நினைச்சா கொஞ்சம் அடக்கி வாசீங்க ப்ளீஸ் :) ) எனக்கு மனதில் அமுக்கி வைத்திருந்த வேதாளம் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிட்டது.

என்னடா இவன் எப்போ பார்த்தாலும் ஒரு கதை சொல்லச் சொன்னா...தேவர்மகன் சிவாஜி மாதிரி "அம்ம பாட்டுத் தேன்ங்"ன்னு இவன் கதையையே சொல்ல ஆரம்பிச்சுற்றான்னு நினைக்காதீங்க. என்ன செய்யட்டும் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல் புரண்டு வளர்ந்த பூமியை மறக்கமுடியவில்லை. தாய்பால் மாதிரி தாமிரபரணித் தண்ணீரையும் மறக்க முடியவில்லை. அடித்த கூத்துக்களை மறக்கமுடியவில்லை. இந்த சுயபுராணம் போர் அடிக்கிறதென்றால் யாரும் அடக்கி வாசிக்க வேண்டாம். தாராளமாக உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.ஆனால் அதைக் கேட்டு இந்த பதிவை நிப்பாட்டிவிடுவேனா என்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.:P சரி அதென்ன தாமிரபரணித் தென்றல்? இன்றைக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதி என்று சொன்னால் தாமிரபரணிக்குத் தான் முதல் இடம் என்று நான் சொல்லுவேன். தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடியும் இந்த நதி உண்மையிலேயே வற்றாத ஜீவநதி. மற்ற ஊர் மாதிரி நதி என்று சொல்லிக் கொண்டு கிரிக்கெட் ஸ்டம்பு நட்டுக்கொண்டு விளையாடும் அவலமோ, இல்லை எலி மூச்சா போன மாதிரி இழையோடும் ஒழுகலோ, இல்லை ஊரில்லுள்ள சாக்கடைகளின் ஓட்டத்தோடு திசைக்கும் திரும்ப முடியாத வீச்சத்தொடு நிற்கும் அவலமோ தாமிரபரணிக்கு கிடையாது.(எலேய் வீச்சருவா ரெடி பண்ணுலேய்...எல்லா ஊர்காரனும் சண்டைக்கு வரப்போறாங்கடோய்).

தென்பொதிகை மலையிலிருந்து தென்றலாய் தவழ்ந்து வரும் தாமிரபரணி கோடையில் கூட அணையில் தடுத்துவிடுவதால் வழக்கத்தை விட கொஞ்சம் குறைவாக வருமே தவிர...காய்ந்துவிடாது நிறைய பேர் குளிக்கும் அளவுக்கு ஓட்டத்தோடு இருக்கும். ஹி ஹி இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த தலைப்பு எனக்கென்னமோ ரொம்ப பிடிச்சு போய் அழகா இருக்கே என்று தோன்றியதால் வைத்தேன். மேற்சொன்ன அத்தனையும் தலைப்பை வைத்துவிட்டு யோசித்து எழுதியவைதான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை ஆனால் தாமிரபரணியப் பற்றி நான் சொன்னதெல்லாம் உண்மை.

இந்த பதிவில் என்ன எழுதலாமென்று இருக்கேன்? வேறென்ன...நான் பார்த்த செய்த ரசித்த, குறும்புகளை, அட்டகாசகங்ளைத் தான். இனி படிப்பதும் படிக்காத்தும் உங்கள் இஷ்டம்.இது என் ஆத்ம திருப்திக்காகத் தான் என்றாலும் என் எழுத்தில் உள்ள குறை நிறைகளை சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


--தொடரும்

GMailllllllllllllllll

heyyy I have opened my new GMail account !!!! woooohoooo
For all those who are interested in opening the new 1GB Gmail account from google - If you have a blogger account then login into your account and you will be able to see a ad- banner for opening Gmail account after you have logged in in the initial screen above your blog link. I understand that this is only for active blogger users only. You can give a try.

I can't see any link in Google GMail page for opening account.

Thanks Blogger !!

Wednesday, April 21, 2004

கிச்சாவும் சாம்பு மாமாவும்

For picture version of this post click here

பென்ட் இட் லைக் பெக்காம்

"டேய் கிச்சா குழம்ப கொஞ்சம் கிளறிவிட்டுட்டு இப்பிடி சித்த வா தாண் நல்லா வேகட்டும்"

"மாமா குழம்பு கொதிக்கறது இருக்கட்டும் எனக்கு வயறு கொதிக்கறது"

"இப்பிடி மாவாட்டற மிஷின் மாதிரி கண்டதையும் வாயில் போட்டு சதா சர்வ காலமும் அரைச்சிண்டே இருந்தா கலக்கும் கொதிக்கும்...எல்லாம் பண்ணத்தான் செய்யும்"

"அதில்ல மாமா..நீங்க எனக்கு சம்பளத்துல நாலணா கூட்டறதுக்கு மூக்கால அழறேள்..அங்க ஒருத்தன் என்னடானா விளையாடறதுக்கு கோடி கோடியா கொட்டிக் குடுக்கறாளாம். நானும் பேசாம போயிடலாமானு பார்க்கறேன்"

"போவ போவ நன்னா வயத்தால தான் போவ...யாரு என்னனு சொல்லேன்டா"

"பேரு பெக்காமாம். கால்பந்து விளையாடறானாம்...நம்ம டெல்லி மாமா சொன்னார்"

"ஓ அவனா...தெரியும் தெரியும். ஏண்டா கட்டைல போறவனே அவனோடயா உன்ன சேத்துக்கற...அவனெங்கே நீ எஙக...அவன் வருஷத்துக்கு எம்புட்டு சம்பாதிக்கிறான் தெரியுமோ?"

"இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டுருக்கேளா? பலே ஆள் தான் நீங்க...எம்புட்டு?"

"வருஷத்துக்கு ஒன்னில்ல ரெண்டில்ல...நூத்தி நாப்பத்தி நாலு கோடி சம்பாதிக்கிறானாம்டா..."

"அடேயப்பா...அதாவது பரவால்ல மாமா...எனக்கேன் வயத்தெரியறதுன்னா...இப்போ லேட்டஸ்ட்டா...'அவனோட எனக்கு தொடர்பு இருக்கு'-ன்னு நீ நான்னு நிறைய பொண் குட்டிகள் வேற கிளம்பிருக்காளாமே"

"அட ராமா...அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் வேற இருகாளால்யோ"

"ஆமா ஆமா...யாரோ ரெபேக்கா லூஸாம் பி,ஏ வா இருந்தாளாம். அவனுக்கும் எனக்கும் எல்லாம் ஆயாச்சுன்னு விலாவாரியா டி.வில பேட்டியே குடுத்தாச்சாம்னா பாருங்கோளேன்."

"விலாவாரியாவா...என்ன கன்றாவிடா இது அதான் லூஸ்னு சொன்னியா"

"லூஸ்ங்கிறது அவ பேர் மாமா..இன்ன தேதிக்கு இன்ன பண்ணினான்...நான் இன்ன பண்ணினேன்னு கம்பேனில கணக்கெழுதி குடுக்கற மாதிரினா சொல்லிட்டா...இத மாதிரி இன்னும் ரெண்டு குட்டிகள் வேறு கிளம்பிருக்காளாம்."

"இதுக்கெல்லாம் எங்கேயோ மச்சம் வேணும்ன்னுனா சொல்லுவா.."

"அதையும் கேட்டாளே டி.வி பேட்டில...அதுக்கு இவ அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல மாட்டேன் கோர்ட்ல ஜட்ஜ்கிட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாளாம்"

"ராமா ராமசந்திரா....ஜட்ஜ்க்கு வேற ஜோலியே இல்லையா...பெக்காம்க்கு நெஞ்சுல மச்சம் இருக்கா குஞ்சுல மச்சம் இருக்கான்னு தான் கேட்டுண்டுருப்பாரா....கலிகாலம் வேறென்னத்த சொல்லறது மகா கன்றாவி போறும்டா இந்த பேச்சு...பைசாக்கு பிரயோஜனப்படாது..."

"பைசாக்கு பிரயோஜனப்படாதுன்னு அவசரப்படாதீங்கோ...பெக்காம்க்கு எங்கே என்ன மச்சம் இருக்கும்..என்ன பச்சை குத்திண்டுருக்கான்னு பந்தயம் வேற போட்டிருக்காளாம் இங்கிலாந்துல இருக்கற பெட்டிங் கம்பேனிகள். நீங்க தான் சாமுத்திரிகா லக்க்ஷணம் அது இதுனு சொல்லுவேளே...அத வைச்சு சொல்லுங்கோளேன்..கோடி கோடியா கிடைக்கும். கிடைக்கறதுல ஆளுக்கு பாதி வைச்சுக்கலாம்"

"நீ வெச்சுக்கோ இந்தக் கோடியெல்லாம்..தெருக் கோடி போறும் நேக்கு...முதல்ல குழம்ப வாளில எடுத்துட்டு அப்புறம் இந்த கணக்கெல்லாம் போடு!"

Monday, April 19, 2004

choti see break

Me off to a training program today and tomorrow. Will try if I can post anything in between, else see you all on Wednesday.

Have a great week ahead.

Thursday, April 15, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 5

For Previous Parts --> &nbsp &nbsp Part1 &nbsp &nbsp Part2&nbsp &nbsp Part3&nbsp &nbsp Part4


For Picture version of this post (split into two picture files) Part 5a -- Part 5b

முதல் வேஷ்டி அனுபவத்திற்குப் பிறகு அடிக்கடி கட்டிப் பழகியதால் அதற்கப்புறம் பிரச்சனையில்லாமல் இருந்தது. "எஜமான்" ரஜினி மாதிரி தழையத் தழைய கட்டுவதிலிருந்து, "தேவர்மகன்" கமல் மாதிரி தூக்கி கட்டுவது வரை எல்லா ஸ்டைலும் கை வந்த கலையாயிற்று.

அரும்பு மீசை வளர ஆரம்பித்த ஆரம்ப காலேஜ் நாட்களிலிருந்து வேஷ்டி தினமும் கட்ட ஆரம்பித்தேன்.(என்னமோ லுங்கி அவ்வளவு பிடிக்கவில்லை).

பஜனையிலும் சீனியர் அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. டெய்லி காலையில் முதல் ஆளாகவந்து கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பெல்லாம் வந்தது. ஒ.பி அடிக்க முடியாமல் பாட்டெல்லாம் வேறு பாடவேண்டியிருந்தது. ஆனாலும் குறும்புக்கு மட்டும் குறைச்சலே இல்லை.

ஒரு மாமா தினமும் கரெக்டாக அவர் வீடு பக்கம் பஜனை வந்தவுடன் "சித்த இதப் பிடிடா..வயத்தக் கலக்கறது ஒரு நடை போய்ட்டு வந்துடறேன்"ன்னு போய்விடுவார்.

"அதெப்பிடிடா அவருக்கு மட்டும் வீடு வந்தோடனே அலாரம் வைச்ச மாதிரி ஆய் வரது?"-பையன்களுக்கு சந்தேகம் மண்டையைக் குடைந்தது. ரகசிய புலன்விசாரணைக் கமிஷன் வைத்தார்கள்.

"ஆயாவது நாயாவது..அவாத்து பால்காரன் லேட்டா வரான். மனுஷனுக்கு காலம்பற காப்பி குடிக்கலன்னா நரம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சுறும். அதான் சாக்கு சொல்லிட்டு போறார்" அடுத்த நாளே சி.ஐ.டிகள் போட்டு உடைத்தார்கள்.

குறும்புகளுக்கும் குதூகலத்துக்கும் குறைவே இல்லாமல் எதாவது விஷேசங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ராதா/சீதா கல்யாணம் -காலையில் ஆரம்பித்து மதியம் 2/3 மணி வரை நடக்கும். சம்பிரதாய பஜனை முறைப்படி ஆரம்பித்து தீபபிரதக்க்ஷிணம், டோலோஸ்தவம் என்று விஸ்தீரணமாகச் செல்லும். சம்பிரதாய பஜனையில் குறிப்பிட்ட வரிசையில் நாமாவளிகளையும், ஜெயதேவர் அஷ்டபதிகளையும் வரிசைக் கிரமம் மாறாமல் பாடுவார்கள். இதன்பின் திவ்ய்நாமசங்கீர்தனம். இதில் தான் தீபபிரதக்க்ஷிணம். ஒரு தீபத்தில் இறைவனை ஆவாகனம் செய்து அதைச் சுற்றிப் பாடிக்கொண்டே ஆடுவார்கள்.

இதுவரைக்கும் விஷயம் தெரியாமல் "பெக்க பெக்க"வென்று முழித்துக் கொண்டிருப்போம். இதுவந்தவுடன் பையன்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.

தீபபிரதக்க்ஷிணம்பண்ணுகிறோம் பேர்வழியென்று உள்ளூர் மாரியாத்தா கோவில் சாமியாட்டத்திலிருந்து பேட்டை ராப் பிரபுதேவா ஆட்டம் வரை எல்லாவற்றையும் ஆடித்தீர்ப்பான்கள் பையன்கள். அதிலும் பார்ப்பதற்கு ரெண்டு குட்டிகள் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வைஜெயந்திமாலா பத்மினி மாதிரி போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் தூள் பறக்கும். பாட்டு முடியும் வரையிலுமோ அல்லது யாராவது வந்து அடக்குகிற வரையிலுமோ பையன்களின் இந்தக் கூத்து தொடரும்.

ராதா/சீதா கல்யாணம் முடிந்த பிறகு டோலோஸ்தவம். நலுங்கு, பூப்பந்து எறிந்து விளையாடுதல் அனைத்தும் நடக்கும். ராதா கல்யாணத்தை நடத்தும் பாகவதர் ஒரு பூப்பந்தை யாரிடமாவது எறிவார். அதை காட்ச் பிடித்து திருப்பி வேறுயாரிடமாவது எறியவேண்டும். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலே வசதியாக உட்கார்ந்து கொண்டு பையன்கள் எப்பிடியாவது குறுக்கே புகுந்து பிடித்துவிடுவார்கள். அப்புறம் எதாவது ஒரு மாமாவை நடுவில் வைத்துக் கொண்டு மன்ங்கி கேம் விளையாடுவார்கள். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும்.

இதற்கு அப்புறம் ராமரோ கிருஷ்ணரோ இரவு தூங்கி காலை எழுப்புவது மாதிரி ஒரு சம்பிரதாயம். அதற்கு கோழி மாதிரி கூவச் சொல்வார்கள். ஒரு முறை கோழியோடு நாய் குலைப்பது மாதிரி குலைத்து ஓரமாக நைஸாக தூங்கிக்கொண்டிருந்த ஒரு மாமாவை எழுப்பிவிட்டான் நண்பன். அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"ஏண்டா நாய்ப்பயலே..கோழி மாதிரி கூவறத விட்டுட்டு ஏன்டா நாய் மாதிரி குலைகற?"

"சும்மாத்தான் மாமா...ஒரு ரியல் எபெக்டுக்குத்தான்...காலங்கார்த்தால நாய் குலக்கறதே இல்லையா?"

"எல்லாம் எனக்குத் தெரியும். இந்த நையாண்டியெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்கோ. நான் பொல்லாதவனாக்கும் மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திறுவேன் ஜாக்கிரதை" - தூக்கத்தைக் கலைத்த கோபத்தில் பலமாகவே மிரட்டினார் மாமா.

மார்கழி முடிந்து பொங்கல் வரை பஜனை இருக்கும். அப்புறம் ஏப்ரல் மாதம் வாக்கில் ராம நவமி வரும் அதிலும் பத்து நாள் கொண்டாட்டங்களும் கச்சேரிகளும் இருக்கும். மிகவும் பசுமையான நாட்கள் அவை. விளையாட்டுத்தனத்தை மட்டுமே விவரித்திருந்தாலும் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். இன்றும் ஊரில் மார்கழி மாத பஜனை நடந்து வருகிறது. "என்ன இருந்தாலும் நீங்க இருந்த போது நடந்த மாதிரி சிறப்பா இல்லைடா" என்று ஒரு மாமி போனமுறை ஊருக்கு சென்ற போது சொன்னபோது உண்மையிலேயே மனதை என்னவோ செய்தது.பஜனை மடத்தை ஒட்டி நாங்கள் முன்னின்று கட்டிய பிள்ளையார் கோவில்.சின்னதாக இருந்தாலும் இன்னுமும் கம்பீரமாக இருக்கிறது. அங்கே நாங்கள் நட்ட ஆலம் கன்று இப்போது வளந்து மிகப் பெரிய மரமாகிவிட்டது.

மார்கழி மாத பஜனை, பிள்ளையார் கோவில், ஆலமரம் எல்லாவற்றையும் பற்றி இன்னுமும் எனக்கு எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார் ரகு அண்ணா - மடலில்

- முற்றும்

Wednesday, April 14, 2004

கிச்சாவும் சாம்பு மாமாவும்

For picture version of this post click here

அறிமுகம் - சாம்பு மாமா சமையல்காரர்.65 வயது. கிச்சா அவரது சமையல் குழுவில் உதவியாளர். 30 வயது. இருவருமே பிரம்மச்சாரிகள். சமையல் போக உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் சமூக பிரக்ஜையோடு பேசுவது இவர்களது பொழுது போக்கு.

"என்னமோடா கிச்சா அவியல்லேர்ந்து ஆல் இந்தியா கூட்டு வரைக்கும் பார்த்தாச்சு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்கறது."

"ம்ம்ம்ம் மாமாக்கு அரட்டையடிக்கிற மூடு வந்தாச்சு....சொல்லுங்கோ...உங்க டவுட்ட கிளியர் பண்றதுக்கு தானே எட்டாங் கிளாஸ் படிச்சுட்டு உங்க கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்திருக்கேன்.."

"ஆமா என்னமோ ஐ.ஏ.யெஸ் படிச்ச மாதிரி பீத்திக்கோ...என் நேரம் தூண்கிட்ட புலம்பாம உங்கிட்ட புலம்பறேன்"

"சரி சரி கோச்சுக்காதீங்கோ சொல்லுங்கோ"

"அந்த காலத்துல பொண்கள் ருதுவானா (வயசுக்கு வந்தால்) பந்தல் போட்டு, ஊரெல்லாம் சாப்பாடு போட்டு அம்ர்க்களம் பண்ணுவா...சமையலுக்கு சான்ஸாவது கிடைச்சுன்டுருந்தது அப்புறம் கொஞ்ச நாள்ல் பொம்மனாட்டிகள் முன்னேற்ற சங்கம் அது இதுனு வந்து இதெல்லாம் கொண்டாடப் பிடாது...பொண்கள இழிவு படுத்தற மாதிரி இருக்கு...அது இதுனு சொல்லி நம்ம சமையல் காண்டிராக்டுலேயும் மண்ணைப் போட்டா..."

"ஆமா அப்போவாவது முஹூர்த்த மாசமா இல்லாட்டாலும் இத மாதிரியாவது சான்ஸ் கிடைக்கும்"

"சேரி முன்னேத்தம் மன்னேத்தம்ங்க்றாளே ...முன்னேறினா சரின்னு மனச தேத்திண்டேன்... இப்போ என்னடான்னா..."

"என்ன ஆச்சு திரும்பவும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாளா?"

"ஆரம்பிச்சா தான் தேவலையே...இப்போ என்னடான்னா...குட்டைப் பாவடையும் கட்டை மேலாக்குமா அம்புட்டையும் தரிசனம் காட்டிண்டு ..மே மாசம் இந்த தேதி இன்ன டைமுக்கு ருதுவானேன்னு ஊருக்கேனா பாட்டு பாடறா? இப்போ எங்க போனா அந்த முன்னேத்த சங்கக்காரால்லாம்?"

"ஓ நீங்க அந்த சினிமா பாட்ட சொல்லறேளா...ரொம்ப சரி மாமா...ஆனாலும் அந்தக் குட்டி பலே குட்டி மாமா. குட்டைப் பாவாடையும் கட்ட மேலாக்குமா ஷோக்காத் தான் ஆடறா...பேரு கூட ஏதோ சென்னோ மாருதியோ"

"அடி செருப்பால...ஆட்டுக்கு ஆடு மாட்டுக்கு மாடு கிழத்துக்கு கிழம் தான் சரிபடும்...உன்ன மாதிரி தறுதலைகிட்ட போய்ச் சொன்னேனே...என்னச் சொல்லனும்..சரி சரி...முகத்துல வழிசலை தொடச்சுண்டு இலைய போடற வழியப் பாரு. நேரமாச்சு"

Tuesday, April 13, 2004

Happy Tamil New Year

Wishing you all a very happy Tamil new year !!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

((வாழ்த்து அட்டையில் பார்த்ததெல்லாம் மறந்து போச்சு அதனால சிம்பிளாக முடித்துக்கொள்கிறேன் :P)

Thursday, April 08, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 4

For Picture version of this post (split into three picture files) Part 4a -- Part 4b -- Part 4c

பெண்களுக்கு முதன் முதலாகப் புடவை/ தாவணி அணிவது எப்படி ஒரு ஸ்பெஷல் அனுபவமோ அதே மாதிரி தான் ஆண்களுக்கு வேஷ்டி/பேண்ட் அணிவது.

"இந்தா புதுசா இப்போத் தான் வண்ணான்கிட்டேர்ந்து வெளுத்து வந்திருக்கு இதக் கட்டிக்கோ"

"வேண்டாம் அதுல் கட்சிக்காரன் மாதிரி கறை போட்டிருக்கு"

"சரி அப்போ இந்த சரிகை போட்ட மயிற்கண் வேஷ்டி கட்டிக்கோ"

"இத கட்டிண்டா நாதஸ்வரக்காரன்னு நாதஸ்வரத்த வாசிக்க சொல்லிடுவா"

"சரி அப்போ பட்டு வேஷ்டி கட்டிக்கோ"

"ஏற்கனவே எம்பொண்ணக் கட்டிக்கோ உம்பொண்ணக் கட்டிக்கோன்னு தெருவில மாமிகளெல்லாம் போட்டி போடறா இத கட்டிண்டா நான் சிக்னல் குடுத்த மாதிரி இன்னிக்கே கல்யாணம் பண்ணி வெச்சுருவா" - ஹீ ஹீ இதைச் சொல்லலவில்லை சும்மா மனசுல இப்படி எல்லாம் இருக்கக்கூடாதா என்று நினைத்துக் கொண்டேன்...முத நாளே இது வேண்டாம் நான் யாரையாவது பிராக்கெட் போடணும்னா அன்னிக்கு இத வைச்சுக்கலாம்.

"இல்ல அது ரொம்பப் பகட்டா இருக்கும் வேண்டாம்"

"அப்போ என்னதான்டா வேணும் நோக்கு?"

"அந்த பாலிஸ்டர் வேஷ்டி தாங்கோ அது தான் எடுப்பா இருக்கும்"

"டேய் பாலிஸ்டர் வேஷ்டி வேண்டாம்டா, ரொம்ப வழுகும்னு மாமாவே ரொம்ப கட்டிக்கமாட்டார், உனக்கு பழக்கம் வேற இல்லை..."

"ஆமா கட்டிண்டுருக்கவா எல்லாரும் இதுக்குனு படிச்சு பட்டமா வாங்கிருக்கா...பெல்டல்லாம் போட்டு இருக்கிடுவேன் அவிழாது"

"சரி அப்போ உன்பாடு"

அரைமணி நேரம் ஆயிற்று கட்டி முடிக்க. அலுங்காமல் குலுங்காமல் தெருவில் நடந்தேன். எல்லோரும் தெருவில் என்னையே பார்க்கிற மாதிரி இருந்தது. யாரவது சிரித்தால் என்னப் பார்த்து தான் சிரிக்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்தேன். பொண்ணுங்களெல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களோ என்று சந்தேகமாகவே இருந்தது.

"என்னடா வேஷ்டியெல்லாம் கட்டிண்டு ...மனசுல என்ன மம்மூட்டினு நெனப்போ"

"உங்க அப்பா தரமாட்டேன்னுட்டார்னு ரொம்ப பேசாதடா..."

நேரம் பார்த்து மாமிபாட்டி வந்தாள்.(போன தடவை சொன்னேனே அவாளே தான்).

"என்னடா மலச்சிக்கல்காரன் மாதிரி ஒரு மாதிரி நடந்து வர?"

"சும்மாத்தான் மாமி"

"ஓ வேஷ்டிலாம் கட்டிண்டு பிராமதப் படறதோ?"

கீழ கிடந்த கல்லை எடுத்து மாமிபாட்டி மேல் எறியாமல் பக்கத்தில் 'ஹீ ஹீன்னு சிரித்துக் கொண்டிருந்த வயத்தெரிச்சல் பிடித்தவன் மேல் எறிந்தேன்.

"நன்னாத் தான் இருக்கு நோக்கு தினமும் கட்டிக்கோ" - ரகு அண்ணா

"ரொம்ப தேங்க்ஸ்"

"போதும்டா ரொம்பத்தான் மொதக்காத ...நேர பார்த்து நடந்து போ கீழ விழுந்து பல்ல உடைச்சுக்கப் போற" - கல்லடி பட்டும் புத்தி வரவில்லை வயத்தெரிச்சல் பிடித்த நண்பனுக்கு.

"சீக்கிரம் வா ரமேஷூ உஞ்சவிர்திக்கு மிருதங்கம் வாசிக்க ஆளில்லை ...நீ தான் வாசிக்கனும் இன்னிக்கு"

"என்னது...இங்க நடக்கவே உம்பாடு எம்பாடா இருக்கு இதுல மிருதங்கம் வேறயா? சான்ஸே இல்ல"

"அதெல்லாம் கவலையே படாத..அதான் பெல்ட் போட்டுண்டுருகியோல்லயோ ஒன்னும் அவிழாது. மிருதங்கத்த கயிறுல கட்டி தோள்ல தொங்கவிட்டுக்கலாம்"

"இல்லண்ணா இன்னிக்கு வாசிக்க முடியாதுண்ணா"

"வாசிச்சா பிள்ளையார் நல்ல அனுக்கிரஹம் பண்ணுவார்"

"அனுக்கிரஹம் பண்ணுவார்...வேட்டி அவிழ்ந்தா கட்டி விடுவாரா? கொஞ்சம் பழக்கமாகட்டும் அப்புறம் வாசிக்கறேன்"

ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்தேன். உஞ்சவிர்தி கிளம்பி முக்கால்வாசி தூரம் வந்து எங்க தெருவிற்கு வந்தது.

"டேய் மம்மூட்டி இங்க வா ...இந்த அரிசி சாக்க பிடி நான் போய் இந்த மூட்டைய பஜனை மடத்துல போட்டுட்டு வந்துடறேன்"

"இல்லடா என்னால முடியாதுடா"

"சரி அப்போ நீ சைக்கிள்ல போய் போட்டுட்டு வா.." - கல்லடி வாங்கின கோபம் போல அவனுக்கு.

"தொலஞ்சு போ...சாக்க நான் புடிச்சுக்கிறேன் சீக்கிரம் வந்து சேரு"

இங்கே "முன்னாபாய்" பற்றி சொல்லவேண்டும். எங்க தெரு ஹிந்தி பைத்தியம். ஹிந்தியில் தான் பேசுவாள். நான் "கலம் கஹாங் ஹை? கலம் மேஜ் பர் ஹை" - என்று ஹிந்தி படித்த புதிதில் அவளிடம் போய் கேட்பேன். அவள் கெட்ட கெட்ட ஹிந்தி வார்த்தையால் திட்டுவாள்.
"என்னளவுக்கு அவளுக்கு ஹிந்தி தெரியலைடா..." என்று ஹிந்தி தெரியாத நண்பர்களிடம் சரடு விடுவேன்.

பஜனைக்குப் பக்கத்தில் பன்றி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதுபாட்டுக்கு போய் கொண்டிருந்ததை விரட்டுகிறேன் பேர்வழி என்று வானரப் படையில் ஒன்று கல்லெடுத்து வீசியது. கல் பன்றிமேல் பட்டு அது பயந்து திண்ணையில் "தேமே"ன்னு படுத்துக் கொண்டிருந்த முன்னாபாய் மேல் ஏறி தாவி ஓடி விட்டது.

தூக்க கலக்கத்தில் முன்னாபாய்க்கு என்ன நடந்து என்று புரியவில்லை. பக்கத்தில் கல் கிடப்பதையும், ஒரு பையன் இன்னொரு கல்லோடு நிற்பதையும் பார்த்துவிட்டு அவளைத்தான் கல்லால் அடிக்கிறான் என்று அனர்த்தம் செய்துகொண்டுவிட்டாள்.

கோபத்தோடு பதிலுக்கு பக்கத்திலிருந்த கல்லை எடுத்து முன்னாபாய் குறிபார்க்க அவ்வளவு தான் இங்கு பஜனையில் பாம்பு புகுந்த மாதிரி எல்லாரும் ஒட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருமாமா பயத்தில் என் வேஷ்டியை மிதிக்க நான் எதிர்புறமாக ஒட எத்தனிக்க...பெல்ட் கில்டெல்லாம் பிய்த்துக் கொண்டு பாலிஸ்ட்டர் வேஷ்டி புத்தியைக் காட்டத் துவங்கியது. கையில் வேறு குட்டி பருப்புச் சாக்கு.

மானத்துக்கு முன்னால் புளியாவது பருப்பாவது என்று பருப்புச் சாக்கை சிதற விட்டு மிதித்துக் கொண்டிருந்த மாமாவை ஒரு தள்ளு தள்ளி வேஷ்டியை வெற்றிகரமாக பிடித்துவிட்டேன்.

இதற்குள் முன்னாபாய் பெரிய மனசு பண்ணி கல்லைக் கீழே போட்டிருந்தாள்.

"என்னடா பருப்பையெல்லாம் கொட்டிட்டே? மெதுவா பொறுக்கி எடுத்துண்டு வா" - ஒரு மாமா கன்னிப் பையனின் மானத்தைப் பெரிதாக நினைக்காமல் பெரிய பருப்பு மாதிரி சொல்லிவிட்டுப் போனார்.

பிள்ளையாரைப் பழித்ததால் சோதனை செய்தாலும், அன்று பிள்ளையார் ஒரு வழியாக என் கற்பு பறி போகாமல் காப்பாற்றிவிட்டார்.

- தொடரும். (மெகா சீரியல் மாதிரி இழுக்கறேனோ?)

Tuesday, April 06, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 3

For Picture version of this post (split into two parts) Part 3a -- Part 3b

நித்ய பஜனை போக சில விசேஷ தினங்களில் அதிகப்படி பஜனை வேறு நடக்கும். அஷ்டபதி நாள், உஞ்சவிர்த்தி, சீதா கல்யாணம் - இந்த தினங்களில் காலை பஜனை முடிந்தவுடன் சின்ன இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும். வார நாட்களில் வைத்தால் ஒரு பயலும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்று சனி/ஞாயிறு அன்று தான் வைப்பார்கள்.

அஷ்டபதி நாள் அன்று ஜெயதேவரின் இருபத்தி நான்கு அஷ்டபதி பாடல்களையும் நிறுத்தி நிதானமாக "தியாகராஜ ஆராதனை" மாதிரி அழகாக விஷயம் தெரிந்த பாகவதர்களும்,மாமாக்களும்,மாமிகளும் பாடுவார்கள்.

அஷ்டபதி வடமொழியில் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு தரம் டெய்லி பஜனையில் "சத்குரு ஸ்வாமிக்கு ஜே!" என்பதற்கு பதிலாக "சத்ரு மாமிக்கு ஜே" என்று சத்தமாக உளறிவிட்டேன். அதற்கே லோக்கலில் விஷயம் தெரிந்த மாதிரி நடிக்கும் ஒரு மாமா "அற்பப் பதரே போடா அந்தாண்ட ..."ங்கற மாதிரி முறைத்துப் பார்த்தார். அதனால் அஷ்டபதியில் ரொம்ப மெனெக்கட மாட்டேன். சத்தம் போடாம சும்மா 'வழவழ கொழகொழ'னு நைஸா ஒப்பேத்திவிடுவேன்.

வீட்டில் இருந்தால் படிக்கவேண்டும், அங்கே போனால் அப்போ அப்போ பானகம், பழம், ஜூஸ்னு எதாவது தருவார்கள். அதனால் தெருவில் உள்ள வானரங்கள் எல்லோரும் கண்டிப்பாக குழுமிவிடுவோம். பிரசாதம் வினியோகம் பண்ணுகிறோம் பேர்வழி என்று பாதியை அமுக்கி விடுவான்கள் பையன்கள். பஜனை மடத்துக்கு உள்ளேயே சைடில் மறைவான தட்டி போட்ட இடத்தில் தனியாக ஸ்வாகா செய்யப்படும். ஒருமுறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் தொண்டை கட்டியிருந்ததால் சுக்கு மிளகு நிறைய போட்ட ஆறின வெந்நீரை சொம்பில் வைத்திருந்தார். இது தெரியாமல் வானரப் படையில் ஒரு வானரம் அதை பானகம் என்று நினைத்து அபேஸ் செய்துவிட்டது. ஸ்வாகா பார்ட்டியில் பாகவதர் பார்த்துவிடப் போகிறாரென்று நாலு பேர் அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டார்கள்.
அவ்வளவு தான் குடித்த நாலு பேரும் கண்ணில் ஜலம் வர இரும, அவர்கள் அவஸ்தையை பார்த்து மற்றவர்கள் எல்லாரும் கண்ணில் ஜலம் வர சிரிக்க- குட்டு வெளிப்பட்டு விட்டது.

"ஏன்டா ஓசில கிடைச்சா பினாயில கூட ஒன்றரை லிட்டர் குடிச்சுருவேளோ?" - மாமிகளுக்கெல்லாம் ஏகக் கொண்டாட்டம்.

"ஏன் நீங்களெல்லாம் ஓசில வடை கிடைச்சா நேக்கொன்னு நாத்னாருக்கு ஒன்னுன்னு வாங்கிக்கலையா அத மாதிரி தான்" - சூடாகத் திருப்பி குடுத்தான்கள் பையன்கள்.

"சீதா மாமி பிள்ளை தானே...ரொம்ப தான் வாயாயிடுத்து நோக்கு, சீதா மாமி வரட்டும் கேக்கறேன்"

மாமியும் இல்லாமல் பாட்டியும் இல்லாமல் இருந்த அந்த மாமிபாட்டிக்கும் எங்களுக்கும் அப்புறம் ஒத்துக்கவே இல்லை. பிளாக்லிஸ்ட் செய்துவிட்டோம்.

பாகவதர்களெல்லாம் அப்புறம் உஷாராக கோவணத்தைக் கூட பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

கிரிகெட் நடக்கும் நாட்களில் பஜனை மடத்துக்கு அருகில் இருக்கும் பையன் வீட்டில் கிரிக்கெட் பார்ப்போம். ஜூஸாவது பொங்கலாவது கொடுக்கும் போது விஷயத்தைச் சொல்ல ஒரு பொடியனை ஏற்பாடு செய்து இருப்போம். உடனே கொஞச நேரம் போய் உட்கார்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு கிடைத்ததை அமுக்கிக் கொண்டு நைஸாக ஒருவர் ஒருவராக கழண்டு திரும்பவும் இங்கு வந்துவிடுவோம். ரகு அண்ணாக்கு விஷயம் தெரிந்தாலும் வானரங்களை ஒன்றும் செய்யமுடியாதென்று தெரியும், அதனால் தலையில் அடித்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வார்.

ஒரு முறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் இது பொறுக்காமல் ரொம்பவே சிலிர்துக்கொண்டார்.

"எங்கடா போற?"

எனக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் சட்டென்று மூச்சாங்கற மாதிரி சைகை காட்டிவிட்டு ஓடிவிட்டேன். அதிலிருந்து பையன்களும் அதையே சொல்ல ஆரம்பித்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெலாம் என்ன நீரழிவா என்ன? மூனு பாட்டு பாடறதுக்குள்ள முன்னூறு தரம் மூச்சா போகப் போறேளே? அதுவும் எல்லாருக்கும் அலாரம் வெச்ச மாதிரி ஒன்னு போலத் தான் வருமோ?"

எங்கேயோ மழை பெய்யறது எங்கேயோ இடி இடிக்கறதுன்னு நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்.

நான் மிருதங்கம் வாசிக்க உட்கார்ந்து விட்டால் மாட்டிக் கொள்வேன். எங்கேயும் நகர முடியாது.அதற்காகவே என்னை மிருதங்கம் வாசிக்க சொல்லி விடுவார் ரகு அண்ணா.

அஷ்டபதியை விட உஞ்சவிருத்தியும் சீதா கல்யாணமும் விறுவிறுப்பாக இருக்கும்.உஞ்சவிருத்தியன்று "நாம சூத்ரம்" உபதேசம் வாங்கிய பாகவதர் தலைப்பாகு, தம்பூரா, சிப்லாக்கட்டை, அக்க்ஷய பாத்திரம் சகிதமாக ஊர்வலம் வருவார். அவர் கூட எல்லாரும் கூட்டமாக பஜனை பாடல்களையெல்லாம் பாடிக் கொண்டு வருவார்கள். எல்லார் வீட்டிலும் உஞ்சவிருத்தி பாகவதரின் காலை குளிர்ந்த த்ண்ணீர் கொண்டு அலம்பி குங்கும சந்தனம் வைத்து தீப ஆரத்தி எடுத்து, அரிசியும் பருப்பும் அக்க்ஷ்ய பாத்திரத்தில் போட்டு வலம் வந்து வணங்குவார்கள்.

இதில் வரும் அரிசியையும் பருப்பையும் கொண்டு சீதா கல்யாணத்தில் ஊருக்கெல்லாம் புளியோதரையும் சர்கரைப் பொங்கலும் பிரசாதமாக குடுப்பார்கள்.

நாங்கள் தான் அரிசி மூட்டையை தூக்குவதிலிருந்து அனைத்து எடுபிடி வேலையும் பார்ப்போம். அப்பேற்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் விபரீதம் புரியாமல் நான் முதல் முதலாக வேஷ்டி கட்டினேன்.

--வேறு வழியில்லாமல் இன்னும் வளரும்.

Friday, April 02, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 2

For Picture version of this post (split into two parts) Part 2a -- Part 2b

விசேஷமான நாட்களுக்கு மட்டும் மிருதங்கத்தை பஜனை மடத்தில் வைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ரகு அண்ணா தான் எங்களை மாதிரி பஜனை சேனையை எல்லாம் தலைமை தாங்கி மேய்ப்பார். நல்ல சுறுசுறுப்பு. அனுபவஸ்தர். 35 - 40 வயது இருக்கும். மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)

எனக்கு ரொம்ப ஆச்சரியம்.

"என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.

"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல...என்னடா ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - என்னால் பாதிக்கப்பட்டவன் போல, சமயம் பார்த்து மானத்த வாங்கினான்.

குரங்காட்டி மாதிரி நிலமை ஆகிவிட்டதே என்று இருந்தாலும்..மானமாவது வெட்கமாவது என்று விடாமல் திறமை காட்டினேன்.

பஜனை முடிந்ததற்கு அப்புறம் ஓர் ஓரமாக "அண்ணா தளபதி- காட்டுக் குயிலு பாட்டுல வர்ற மாதிரி வாசிங்கண்ணா " என்று நேயர் விருப்பமெல்லாம் ஜோரா நடக்கும்.

"எத்தனை நாளைக்குடா காட்டுக் குயிலு கூட்டுக் குயிலுனு காலத்த தள்ளுவீங்க...மைக்கேல் ஜாக்ஸன் என்னமா பீட் போட்டுருக்கார் தெரியுமா இப்ப வாசிக்கிறேன் பாரு இதக் கேட்டு ரசனையை வளர்த்துக்கோங்கோடா.."

"யாருண்ணா மைக்கேல் ஜாக்ஸன்? சிலுவை பாதிரியாரா?"

"அடப்பாவி டேய் பஜனை மடத்துல வெச்சு என்ன வம்புல மாட்டிவுட்ராதடா...அவர் பாப் கலைஞர்டா.."

"ஓ அரசியல்வாதியா..."

பசங்க ஞானம் இந்த ரேஞ்சு தான்னு தெரிஞ்சப்புறமென்ன அதுவரை மனசுல அடக்கி வைத்திருந்தது எல்லாம் புதுசு புதுசாகப் பிரவாகமாகி மைக்கேல் ஜாக்ஸன் பெயரில் அரங்கேறும்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்.

அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும்.

அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்.

ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.

நண்பன் வேண்டிய பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டான்.

"ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா...முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...எலிக்குப் பிறந்தது எருமைமாடாகுமாங்கிற ஆராய்சிகளில் மட்டுமே அதுவரை ஈடுபட்டிருந்த பாட்டி அன்றைக்கு மைக்கேல் மதன காமராஜன் பாட்டியாக மாறி ஏகக் களேபரம்.

"சட்டசபை மாதிரி ஒரே வயலென்ஸ் டா அங்க..." அப்புறம் திசைக்கும் தலை வைத்து படுக்கவில்லை நண்பன்.

ஆனால் நான் பனங்காட்டு நரியாக தொடர்ந்து கொண்டிருந்தேன்.

"இவங்க ஏன் பெரிய பாத்திரம் கொண்டு வராங்க தெரியுமா?..அப்போ தான் நாம குடுக்கற பொங்கல் ரொம்ப கொஞ்சமாக தெரியும் அதனால் நிறைய போடுவோம்னு" - இருந்த சீனியரிடம் நான் முன்பு கற்ற பால பாடத்தை சொன்னேன்.

"அது தெரியும். அதனால தான் நான் சுண்டல் போடற கரண்டிய சின்னதா வெச்சிருக்கேன். ரெண்டு மூனு தரம் போட்டாலும் நிறைய விழாது அதே சமயம் நிறைய போட்ட மாதிரியும் இருக்கும், பசங்களும் நிறைய போட்டாச்சுன்னு நகர்ந்து போய்டுவாங்க.." - வாயை பொளந்து கொண்டு மேனேஜ்மெண்ட் பாடம் கற்றேன்.

--மேலும் வளரும்