Wednesday, March 10, 2004

Start ...Action....Camera

For picture format of this tamil post click here --> Part 1 Part 2 (Split in to two files).

ஸ்டார்ட் ஆக்க்ஷன் கேமரா

"திவ்ய பாரதி முதன் முதலில் நடித்த காட்சி எங்க ஊரில் தான் படம் பிடித்தார்கள் தெரியுமா?" என்று மெட்ராஸ் நண்பனிடம் சொன்னேன்.

"அதான் மாடியிலேர்ந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்களா?"

அப்புறம் நான் கப்சிப்.

மணிரத்னமின் "ரோஜா"

"சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலி மாவட்டம்"

தியேடரில் எழுத்து போட்டவுடனேயே நரம்பெல்லாம் புடைக்க "உய்ங்ங்ங்ங்"ன்று விசிலடித்தேன்.

"சரியான காட்டானுங்க....படத்துல ஏற்கனவே ஒரு இழவும் கேக்க மாட்டேங்கு இதில விசில் வேற...போவேண்டிதானே அப்பிடியே...வந்துட்டானுங்க சினிமா பார்க்க..." முன் சீட்டில் இருந்த பெருசு சவுன்டு குடுத்தது. ஊர் மோகம் அவ்வளவாக இல்லை போல. அது தான் முதன் முதலில் சினிமாவில் ஜில்லா பேரை பார்த்த நியாபகம்.

அப்புறம் வெள்ளை பணியாரம் கேட்பாரே ஒரு சீனில், அப்போ ம்துபாலா ஒரு ஊரை பத்தி சொல்லுவார், அது அம்பாசமுத்திரம் பற்றி தான். திரும்பவும் விசில் அடித்தால் முன்சீட் பெருசு குடுத்த காசுக்கு படம் புரியாத கோவத்தில் என் மண்டையில் ஒரு போடு போட்டுவிடுவாரோன்று பயந்து வெறுமனே கையை தட்டினேன்.வேறு நிறைய பேர் விசில் அடித்தார்கள்.

அப்புறம் "புது நெல்லு புது நாத்து"பட ஷூட்டிங்கிற்காக ஒரு பெரிய படையே வந்து இறங்கியது. படம் முழுவதையும் எங்க ஊரில் எடுத்தார்கள். கூட்டம் தேவைப்பட்ட சீனுக்கு நிறைய பேரை கூட்டி போனார்கள்.உள்ளூர் பைய்யன் ஒருவன் நடித்தான். இரண்டு கிழடுகள் வேறு வசனம் பேசியது. வேறு சிலர் கேமரா முன் ஊமையாக நடித்து விட்டு ..."இதென்னயா பிரமாதம்..அந்த காலத்துல நாங்க நடிக்காத நடிப்பா.." என்று ஊருக்குள் வேறு வந்து நடித்தார்கள். வேறு எந்த ஊரில் இந்த படம் ஓடியதோ இல்லையோ எஙக ஊரில் நன்றாக ஓடியது.

அப்புறம் "ஆத்மா". இந்த படத்திற்காக பக்கத்திலுள்ள தென்பொதிகை மலையில் அற்புதமாக ஒரு கோயில் செட் போட்டார்கள். ஊரெல்லாம் அதே பேச்சாயிற்று. நண்டு சிண்டுகளிலுருந்து கிழடு கட்டைகள் வரை எல்லாரும் வேன் வைத்துக் கொண்டு போய் பார்த்தார்கள்.

ஒரு குடு குடு தாத்தா என்னை பிடித்துக்கொண்டார்,

"ஏண்டா அத்தையம்மான்னு ஒரு படம் எடுக்கறாளாமே, கோவில்லாம் கட்டிருக்காளாமே...நீ பாத்தியோ?"

"கிழிஞ்சுது போ ...தாத்தா அது அத்தையம்மாவும் இல்லை சொத்தையம்மாவும் இல்லை ஆத்மா தாத்தா ஆத்மா !"

"என்ன ...மா??"

"ம்ம்ம் பொன்னம்மா...கொஞ்சம் இருங்கோ இதோ வந்துடறேன்."

அப்புறம் குட்டி குட்டியாய் நிறைய படங்களுக்கு பிறகு ஷங்கரின் "ஜென்டில் மேன்" வந்தார். எங்களுரிலும் பக்கத்தூர் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடந்தது. வெளிஊரிலிருந்து
நேர்த்திக்கடன் செலுத்த மாமா ஒருவர் வந்திருந்தார். கோவிலுக்கு போகிற வழியில் கூட்டமான கூட்டத்துடன் மனோரமா இறந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள், பாடை பக்கத்தில் அர்ஜுன் அழுது வசனம் பேசும் காட்சி. கூடுதல் எபெக்ட்டுக்காக தீயணைக்கும் வண்டிகளை வைத்து மழை பெய்ய வைத்திருந்தார்கள்.

கோவிலுக்கு நிலை மாலை போடபோகிற வழியில் இதென்ன பாடையை பார்க்க வேண்டியிருக்கிறதே என்று மாமா முகம் சுழித்தார், மாமிக்கோ படப்பிடிப்பை நின்று பார்க்க ஆசை.

"சித்த நில்லுங்கோ, பெருமாள் எங்கயும் போயிடமாட்டார் ! ரெண்டு நிமிஷத்துல போயிடலாம்."

டேக் மேல டேக் வாங்க ரெண்டு நிமிஷம் இருபது நிமிஷமாயிற்று. மாமா பரபரத்து ஒரு வழியாக கோவிலுக்கு போனால் பட்டரை காணோம்.

அங்க ஷூட்டிங்குக்கு போய் பாருங்க சாமி, பாடைக்கு பின்னால் நின்னு நல்லா ஜோரா போஸ் குடுத்துக்கிட்டு நிப்பாரு - வாட்ச்சுமேனுக்கு அவர் ஷூட்டிங் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தம்.

அடப்பாவி மனுஷா என்று ஆரம்பித்த ஸ்லோகம் பட்டர் வரும் வரை மாமி வாயில் முனுமுனுத்தது.

"என்ன மாமி இங்க நிக்கறதுக்கு அங்க வந்து நின்னுருந்தா சினிமாவிலாவது வந்திருப்பேளே"- பட்டர் தம் பங்குக்கு நேரம் காலம் தெரியாமல் எண்ணெய்யை விட்டார். ஆனால் மாமா அதை ரசிக்கவில்லை. குடுக்க வைத்திருந்த தக்ஷினையை பாதியாக குறைத்துவிட்டார்.

படத்தில் நல்ல தெரியும் படி விழுந்தவர் "ஜென்டில் மேன்" மாமாவானார்.

இன்னொரு படத்துக்கு வந்து எல்லா மாமிகளையும் மடிசார் கட்டிக் கொண்டு குடையை பிடித்துக் கொண்டு நடக்க விட்டார்கள். ஆளுக்கு அம்பது ரூபாயும் கிடைத்தது.

அதுக்கப்புறம் "பாரதி" போன்ற நல்ல படங்கள் உட்பட ஏகப்பட்ட மெகா சீரியல்களும் வர ஆரம்பித்தன. இப்போதெல்லாம் சுத்துபட்டியில் ஷுட்டிங் நடக்காத நாட்கள் தான் கம்மி. "அட ஷூடிங் தானே..." என்று மக்களும் இப்போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

No comments:

Post a Comment

Related Posts