Monday, April 03, 2017

Hidden Figures

சைஸு வாரியா நிக்கிறாங்களே ஒரு வேளை ஒபிசிட்டி பற்றிய படமாய் இருக்கோமோ என்று பச்ச மண்ணாய் சந்தேகப் பட்டேன். இந்த மாதிரி அல்ப சிந்தனைகளால் தான், என்ன தான் அன்லிமிட்டட் சினிமா பாஸ் வைத்திருந்தாலும், சில நல்ல விஷயங்கள் லேட்டாய் தான் வாய்க்கப்பட சபிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது.

அட்டகாசமான படம். உங்களுக்கு The Man who knew Infinity பிடித்தது என்றால் இந்தப் படம் அதை விட பிடிக்கும். 1960-ன் ஆரம்ப கால கட்ட வருடங்களில் நடக்கும் கதை. கருப்பர்களை மிகுந்த பாகுபாட்டுடன் நடத்திய ஒரு நிறவெறி காலக்கட்டம். அதற்கு அந்தக் காலக் கட்டத்தில் மூன்று மூளைக்கார கருப்பின பெண்மணிகள் நாசாவில் எப்படி கால்பதித்து சிகரம் தொட்டார்கள் என்பது பற்றிய படம். கருப்பின பாகுபாடு தவிர பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு படி கம்மி என்ற சித்தாந்தம் நிலவிய காலகட்டமும் கூட. கேட்கவே வேண்டாம். ஐய்யையோ கமலா காமேஷும் அஞ்சலி தேவியும் பார்னர்ஷிப் போட்டு அழுற மாதிரி இருக்கேன்னு பயப்படாதீங்க - படம் அவ்வளவு ஹெவியாக எல்லாம் இல்லை. படம் நெடுக பட்டாசு - அவ்வளவு சுவாரசியம்.

கருப்பினத்தவர்களிடம் எனக்கு சில ஈர்ப்புகள் உண்டு. எல்லாருமே பயங்கர ஸ்டைலிஷாய் டேன்ஸ் ஆடுவார்கள் - அதுவும் பெண்கள்.  கிளப்புகளில் இவர்களின் ஒவ்வொரு அசைவும் அவ்வளவு நேர்த்தியாய் இருக்கும். (கேள்வி ஞானம் சார்)  பார்பதற்கு ஆஜானு பாகுவாய் கொஞ்சம் பயமாய் இருந்தாலும் எந்த இடத்திலும் ஈசியாய் நட்புடன் பழகும் வல்லமை படைத்தவர்கள். இசையில் பயிற்சி பெற்றவராயிருந்தால்  - வித்தைகாரர்களாய் இருப்பார்கள். இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பிடித்தது இவர்கள் பேச்சில் இருக்கும் நையாண்டி.  நல்ல பழகியவர்கள் என்றால் வரிக்கு வரி ஹாஸ்யமாய் நையாண்டி இருக்கும் - கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

படத்திற்கு வருவோம். அறுபதுகளில் அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில், விண்வெளிக்கு யார் முதலில் மனிதனையும் ராக்கெட்டையும் அனுப்புவது என்று போட்டி போட்டுக் கொண்டு பனிப்போர் நடத்திய காலகட்டம். கம்ப்யூட்டர்கள் புழக்கத்தில் வராத காரணத்தினால் பல்வேறு கணக்குகளை செய்வதற்கு மெத்த படித்த மனித கம்ப்யூட்டிங் ஆட்களை கொண்ட காலகட்டம்.  இதில் மூன்று பெண்களே படத்தின் கதா நாயகிகள். ஒருவர் கணித விற்பன்னர், ஒருவர் இன்ஜினியரிங் மேதாவி, மற்றொருவர் நாசாவிற்கு முதன் முறையாக ஐ.பி.எம் கம்ப்யூட்டர் வந்த பிறகு போட்ரானிலும் தன்னை நிலைநாட்டியவர். (அவ்வ்வ் நானும் காலேஜில் போட்ரான் படித்தேன் - ஹலோ வேர்ல்ட்டுக்கே கம்பைலர் அரைப் பக்கத்திற்கு காறித் துப்பியது)  இவர்கள் நாசாவில் பிற்காலத்தில் தங்கள் பெயர்களை நிலைநாட்டினாலும் அதற்கு அவர்கள் கடந்து வந்த பாதையும், சந்தித்த கஷ்டங்களும், போராட்டமுமே படத்தின் கதை.

முதல் காட்சியியே அட்டகாசமாய் ஆரம்பிக்கிறது. கருபினத்தவர்களை எவ்வளவு கேவலமாய் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது செவிட்டில் அறைந்த மாதிரி காட்டுகிறார்கள். அத்தோடு ஆணாதிக்க போக்கையும் தொட்டிருக்கிறார்கள். படத்தில் நிறைய காட்சிகள் - பார்த்துப் பார்த்து செதுக்கிய மாதிரி அவ்வளவு நிறைவு. முதன் முறையாக கேத்தரின் (ஹென்சன்) நாசாவின் விண்வெளி டீமிற்கு  தனது சாமான் செட்டுகளை ஒரு அட்டை டப்பாவில் எடுத்துக் கொண்டு வருவார். அவரை துப்புறவு பணியாளர் என்று நினைத்துக் கொண்டு டீமில் இருப்பவர் ஒரு Bin-ஐ திணித்து இதை ஏன் இன்னும் காலி செய்யவில்லை என்று கேட்பது மாதிரி காட்சி - அவ்வளவு நச். ட்ரைலரிலும் இருக்கிறது பாருங்கள். கருப்பர்களுக்கான பாத்ரூமிற்கு அரை மைல் தூரம் ஓடி செல்வது, வெள்ளையர் மட்டுமே படிக்க இயலும் என்ற காலேஜில் இன்ஜினியரிங் படிப்பதற்கே கோர்ட் படியேறவேண்டிய கட்டாயம், என்ன உழைத்தாலும் சூப்பர்வஸர் ஆவதற்கே அல்லாட வேண்டிய நிர்பந்தம் என்று இவர்கள் பட்ட பாடையெல்லாம் பார்க்கும் போது, “வேர் இஸ் தி காஃபி, ஏன்யா லேட்டு” என்று கச்சேரிக்குப் போவது மாதிரி போய்விட்டு வரும் இன்றைய வேலையெல்லாம் - அங்கப் பிரதட்சணம் செய்யலாம். அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் நாமெல்லாம்.

வசனங்களில் நையாண்டியும் நக்கலும் சுவாரசியம் சேர்க்கிறது. படம் போவதே தெரியாமல்  சுவாரசியமாய் பின்னப் பட்ட திரைக்கதை.
பார்க்கவில்லையென்றால் = கண்டிப்பாய் பாருங்கள்- அவ்வளவு நல்ல ஃபீல் குட் படம். பார்த்துவிட்டு நன்றி மட்டுமே கூறுவீர்கள். Very Highly recommended.

The Great Wall

படம் ஆரம்பித்த நொடியிலிருந்தே ஆக்‌ஷன் ஆரம்பமாகிவிடுகிறது. ஜுராசிக் பார்கிலிருந்த டைனோசர் தப்பித்துப் போய் காட்ஸில்லாவுடன் ஜல்சா பண்ணி பிறந்த மாதிரி டோ டாய் என்ற ஒரு ஜந்து. ஒன்றல்ல பன்னிக் குட்டிகள் மாதிரி வத வதவென்று ஆயிரக்கணக்கில். மாட் டேமன் கேட்கவே வேண்டாம். கல்யாண சமையல் சாதம் ரங்காராவ் மாதிரி அத்தனை காட்னோசர்களையும் பதம் பார்க்கிறார். ஒனறும் இல்லாமலேயே ஆயிரம் கதை கட்டும் உலகில், சீனப் பெருஞ்சுவரின் ஐதீகங்களுக்கும் கட்டுக் கதைகளுக்குமா பஞ்சம். பல்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டு இணைக்கப் பட்டதாக கூறப்படும் சீனப் பெருஞ்சுவரின் நதிமூலம் ரிஷிமூலத்திற்கு “ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ...” என்று நம்மூரில் இருக்கும் கதைகள் மாதிரி ஆயிரம் கதைகள் உண்டு. அதில் ஒரு கட்டுக் கதையை வைத்துக் கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்கள். சீனர்கள் கண்டுபிடித்தாகக் கூறப்படும் கன்பவுடரைத் தேடி மேட் டேமனும் அவர் தோழரும் சீனாவிற்கு வருகிறார்கள். அப்படி வரும் போது சீன பழங்குடியினரிடமிருந்து தப்பிக்க ஓடும் போது ஒரு சீனப் பெருஞ்சுவரில் அமைந்த கோட்டையில் மாட்டிக் கொள்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறதென்பதே கதை. கதை என்னய்யா கதை, ஆக்‌ஷன் படம் அவ்வளவே ஆனால் சுவாரசியமாய் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்
ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. படம் ஆரம்பத்திலிருந்து நல்ல டெம்போ. கோட்டையையும், தளவாடங்களையும், சீன ஆயுதங்களையும் ரசித்து செய்திருக்கிறார்கள். அதே போல் மூன்று நடிகர்களைத் தவிர மற்ற எல்லோருமே சீன நடிகர்கள் தான். கதாநாயகி ஜிங் ட்யான் செதுக்கி வைத்த சிற்பம் மாதிரி அவ்வளவு அழகு. அதுவும் மயில்கழுத்து நீலத்தில் சீருடை அவருக்கு, அடேங்கப்பா...ஏமி ஜாக்சனையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இவரை கோலிவுட்டிற்கு கொண்டு வர நம்மூர் டைரக்டர்கள் ஆவண செய்யவேண்டும். கதையிலிருந்து இம்மி கூட விலகாமல், ஹீரோக்கு சான்ஸே கொடுக்காமல் கதாநாயகி கட்டுப்பாடாய் இருக்கிறார். கடைசியில் கூட ஒரு முத்தம் - ம்ஹூம்...ரொம்ப மோசம், மேட் டேமனை கை குலுக்கி ஊருக்குப் போய் லெட்டர் போடு என்று அனுப்பி விடுகிறார்.
சீனப் பெருஞ்சுவராகட்டும், அந்தக் கோட்டையாகட்டும் ரசித்து சீ.ஜி செய்தவர்கள் அந்த ஜந்துவை வத வதவென்று பெருக்கவிடாமல் கொஞ்சம் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கலாம். அது மட்டும் தான் உறுத்துகிறது. மற்றபடி யுத்த காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு க்ளீன் ஆக்‌ஷன் விருந்து. படம் ஆரம்பித்தலிருந்து முடிவு வரை போவதே தெரியவில்லை.

Monday, November 28, 2016

Setup to Fail

சமய சந்தர்ப்பத்தை முன்னிட்டு முதலிலேயே சொல்லிவிடுகிறேன் செட்டப்ன்னா அந்த செட்டப் இல்ல ;)

ஆபிஸில் பாலிடிக்ஸ் என்பது சர்வ சாதாரணம். அதுவும் மிடில் மேனேஜ்மெண்ட்டில் இது தான் ஐநூறு ஆயிர ரூபாய் மாதிரி - ஜீவாதாரமே. ஒரு பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவர் இந்த பாலிடிக்ஸ் காரணமாக கைமாற்றும் சூழல் வந்தால் செத்தான் சிவனாண்டி. என்ன தான் எழவு ஹாண்ட் ஓவர் ப்ரொசீஜர்சை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு சரி பார்த்து வாங்கியிருந்தாலும் குடுக்கறவன் ஒள்ளிச்சு வைச்சிருப்பான் பாருங்க ஒரு கன்னிவெடி. திரில்லிங்கான ஒரு கேம். நிற்க நீங்கள் எப்பேற்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும் இதையெல்லாம் ஜுஜுபி என்றாக்கிவிடும் விளையாட்டு ஒன்று இருக்கிறது. பொண்டாட்டியை மூனு நாள் ஊருக்கு அனுப்பிவிட்டு வீட்டை சமாளித்துப் பாருங்கள்...இதுக்கு ஒரு எம்.பி.ஏ எவனாவது ஆரம்பிக்கக் கூடாதா.

தங்கமணி மூன்று நாட்கள் அவருடைய நண்பிகளுடன் ஹாலிடே.

“நீ ரெண்டடி தள்ளி நின்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மட்டும் சொல்லு நான் செய்யறேன்” என்று ஏகப்பட்ட பந்தோபஸ்து பண்ணி சென்னா மசாலா செய்யக் கற்றுக் கொண்டாலும் இந்தப் பக்கம் ஷன நேரம் திரும்பும் போது அந்தப் பக்கம் ஏதாவது ஒரு பொடியை எடுத்துப் போடும் துக்கிரித்தனம். secret ingredient....என்ன இருந்தாலும் நான் சமைச்ச மாதிரி...

ஒரு வாரமாய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படி (ஹாண்ட் ஓவர்) ஒரே நச்சரிப்பு. (பொலிடிக்கல் கரெக்ட்னஸ்). அது வாங்கி ஸ்டாக் பண்ணவா இது வாங்கி ஸ்டாக் பண்ணவா... சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு போகவா ... நோ நோ நோ எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். வீ ஆர் க்ரோன் அப்ஸ் அண்ட் வீ நோ டு ஹாண்டில் சிச்சுவேஷன்ஸ்

குக்கர் இங்க இருக்கு, அது அங்க இருக்கு... இது எங்க இருக்குன்னு தெளிவா ஹாண்ட் ஓவர் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அரிசி வைக்கப் போனால் குக்கர் வெயிட்டைக் காணோம். புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து தான். ஜேம்ஸ் வாட் இப்படித் தான் ஸ்டீம் இஞ்சினைக் கண்டுபிடிட்தாரா தெரியவில்லை. "தெரியும் உங்க லட்சணம்...” என்ற கெக்கலிப்பில் ஆரம்பித்து அங்க பாரு இங்க பாருன்னு கடைசியில் ஒரு ட்ராவில் இருந்தது. என்ன ஒரு வில்லத்தனம். பரமசிவன் என்னிக்காவது பாம்பை கழட்டி வைச்சிருக்காரா...குக்கர் வெயிட் பாத்திரம் தேய்த்து (உணர்த்திய கையோடு) மூடியிலேயே இருக்க வேணாமா.... Kaizenகாரன் வந்தால் வழிச்சிண்டு சிரிக்க மாட்டானா?

பாத்திரம் தேய்ப்பதெல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல அசால்ட்டா செய்வேன் என்றாலும் கரெட்டாய் ஒரு ஷிப்ட் பாத்திரத்துக்கு அப்புறம் டிஸ்பென்சரில் லிக்விட் சோப் காலி. ரீபில் மெகா பாட்டிலை காணோம். சை ... ”இதுக்குத் தான் என்ன வேணும் என்ன வேணும்ன்னு ஒரு வாரமா கேட்டேன்” - ஈஸ்வரா இந்த indispensable factor

டீ போடறதுக்கு என்னிடம் கண்ணன் தேவனே வந்து டியூஷன் எடுத்துக்கணும். அதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்ற சவுடாலெல்லாம் கரெக்ட்டா தான் போச்சு. ஏலக்காய் இஞ்சியை இடிக்க குட்டி மசாலா இடிக்கும் உரலைத் தேடினால் உரல் இருக்கு இடிக்கும் கம்பியைக் காணோம். வாரம்...க்ரீன் டீ வாரம்...

ச்சை... போதும் நிறுத்திக்கிறலாம் என்று தற்சமயம் சரவணபவன் அண்ணாச்சியும், பிட்ஸா ஹட் பாயும் சேர்ந்து நம்ம வீட்டு சிச்சுவேஷன்ஸை ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

Thursday, September 08, 2016

நாயகன்

இரவு ஒன்றரை மணி. ஆன்லைனில் ஓசோனைப் பற்றி ஓஷோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று நோண்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று இங்கே இங்கிலாந்தில் இருக்கும் தோழியிடமிருந்து வாட்ஸப்பில் ”ஆர் யூ தேர்” என்று பிங் வந்தது.  இரவு பத்து மணிக்குத் தான் அவரிம் மாட்லாடியிருந்தேன்.  ராத்திரி ஒரு மணிக்கு ஆன்லைனில் யோக்கியனுக்கு என்ன வேலை என்று நம்பளைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாய் நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். (நல்லவனுக்கு நாளெல்லாம் சோதனை). இப்பத் தான் தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன், டைம் என்னன்னு மொபைலை பார்க்கலாம்னு ஆன் பண்ணினா ஹய்யைய்யோ நீங்க என்று அளவளாவ ஆரம்பித்தேன்.

நாளைக்கு எங்கயும் கமிட் ஆகாமல் ரெடியாய் இருங்கள் ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி என்று சுருக்கமாய் முடித்துக்கொண்டார். அந்த காலக் கட்டத்தில் வேலை மாறும் படலத்தில் இருந்ததால் காலையில் மகள்களுக்கு ரொட்டியில் வெண்ணெய்யையும்,  மிச்ச நேரங்களில் வீட்டில் பெஞ்ச்சையும் தேய்த்துக் கொண்டிருந்தேன். எதாவது க்ளு கொடுக்கலாமே க்ரோர்பதிலேயே மூனு ஆப்ஷன் தர்றாங்க என்றது  “உங்காளுங்க” என்று  ஏகத்துக்கு க்ளூ கொடுத்தார்.  இருக்கறவனுக்கு ஒரு ஆள் நமக்கு ஊரெல்லாம் என்று நினைப்பு  (நோட் த பாயிண்ட் நினைப்பு நினைப்பு) . வேதிகாவா இருக்குமோ, இல்லை நயந்தாரா அடிக்கடி லண்டனுக்கு வருகிறாரே  இல்லை சமந்தாவா என்று ஏகத்துக்கு குழப்பம்.  எதாய் இருந்தாலும் காலையில் தான் கன்ஃப்ர்ம் ஆகும் என்று கறாராய் சொல்லிவிட்டார்.  அவ்ளோ தான் ஓஷோவையும் ஓசோனையும் ஓரங்கட்டிவிட்டு யாரெல்லாம் லண்டனுக்கு வந்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஏழு மணிக்கு திரும்ப கால் வந்தது. சொக்கா சொக்கா சொக்கா என்று பதற ஆரம்பித்துவிட்டேன். ஏங்க அவரு என் ஆளாங்க..... தலைங்க என்னோட தலை என்று தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதுவும் நாங்க செல்லவேண்டிய வேலையும் அவ்வளவு சோக்கானது. சிங்கத்தையே..படம் பிடிக்க வேண்டிய பொன்னான வாய்ப்பு. (அவரை டைரக்ட் செய்ய என்பதெல்லம் ரொம்ப ரொம்ப ஓவரான வார்த்தை). எங்கே என்ன எதற்கென்ற விபரங்கள் இங்கே தர முடியாத நிலையில் இருக்கிறேன் - தோழிக்கு வாக்கு கொடுத்திருக்றேன் எனபதால் அந்த விபரங்கள் பதிய முடியவில்லை. ப்ளீஸ் மன்னித்து விடுங்கள் ஆனால் அது சினிமாவல்ல...ஒரு வாழ்த்து அவ்வளவு தான் அந்த காணொளி எல்லாம் ஊடங்களில் எப்பவோ வெளிவந்துவிட்டது அவ்ளோ தான். (இது நடந்து கொஞ்ச காலங்கள் ஆயிற்று)

பதினோரு மணிக்கு அங்கே இருக்கிற மாதிரி வந்துவிடுங்கள் என்று இடத்தைச் சொல்ல பத்து மணிக்கே ஏரியாவிற்கு போய்விட்டென். பெரிய ஹோட்டல் என்பதால் லாபியில் மீட் பண்ணுவதாய் ப்ளான். முன்னாடியே  போய் லாபியில் உட்காருவதற்கு பதில் சும்மா பக்கத்தில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். பத்தரை மணிக்கு தோழியிடமிருந்து செய்தி. எங்கிருக்கிறீர்கள் சார் அல்ரெடி வந்தாச்சு இங்கே தனியாய் இருக்கிறார் என்று. பின்னங்கால் தலையைத் தாண்டி மேல் வயிற்றில் வந்து படுமளவிற்கு ஓட்டம். மூச்சிறைக்க லாபிக்கு வந்தால் அமைதியாய் உட்கார்ந்திருக்கிறார் தலைவர். பக்கத்தில் போக எழுந்து கொண்டார். குணா கமல் கோயில் சீன் மாதிரி அவரையே  பரவசமாய் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி ரொம்ப மரியாதையாய் ‘சார் இவர் உங்களோடு பெரிய டை ஹார்ட் ஃபேன்...அது இது’ என்று என்னை கமலுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவரும் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  “எப்படி இருக்கிறீர்கள்” என்று பாந்தமாய் கேட்கிறார். பதில் சொல்லத் தோன்றவில்லை. பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை...மூச்சிறைப்பும் தான். “கேன் ஐ ஹக் யூ” என்று கேட்கிறேன். பதிலுக்கெல்லாம் காதிருக்கவில்லை. அவர் கை லேசாக திறந்ததும் அவரை அணைத்துக் கொள்கிறேன். முப்பது விநாடிகள் நீண்ட அணைப்பு. முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.  வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று எதிர் சோஃபாவை காண்பிக்கிறார். எதிர் சோபா தள்ளியிருந்தது. அங்க வேண்டாம் ரொம்ப தள்ளியிருக்கு நான் இப்படியே இங்க உங்க சோபா கைப்பிடியில் இன்பார்மலாய் உட்கார்ந்து கொள்கிறேனே என்கிறேன். சிரித்துக் கொள்கிறார். கைப்பிடி வசதியாய் இல்லை ஒரு காலை மடித்து காலேஜில் அரட்டை அடிப்பது போல் அப்படியே முட்டியை சோபா பக்கத்தில் வைத்து தரையில் ரெண்டுங்கெட்டானாய் முட்டி போட்டு உட்கார்ந்து கொள்கிறேன். சாரி ஏதோ கேட்டீங்க காதுல விழலை என்று திரும்ப கேட்டு பதில் சொல்கிறேன். உங்களைப் பார்த்தா சார்ன்னுலாம் சொல்லக்கூடாது நீங்க எனக்கு கமல் அதுனால கமல்ன்னு கூப்பிடம்ன்னு இருதேன் ...இப்போ முடியலை என்கிறேன். நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். தோழி மேலும் என்னுடைய கமல் பைத்தியத்தைப் பற்றி சொல்கிறார்.  தோழியைப் பார்த்து உங்களுக்கு கோயில் ஒன்னு கட்டி அடுத்த ஆடியில் கும்பாபிஷேகம் என்பது போல் நன்றியோடு பார்க்கிறேன்.  கேமிரா கொண்டுவரும் நண்பர் வழியில் ட்ராபிக்கால் தாமதமாகிறது என்ற செய்தி வருகிறது. ட்ராபிக்குக்கும் பக்கத்திலேயே ஒரு கோயில் கட்டவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஹய்யோ கமலைக் காக்க வைக்க முடியாதே என்று தோழி பதறுகிறார்.  சார் எங்களுக்கு இப்போ ஒரு மணி நேரம் முன்னால் தான் விஷயமே தெரியும் தவறாக நினையாதீர்கள் நண்பர் தள்ளியிருந்து வருகிறார் என்கிறேன்.  அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லீங்க எனக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கு அதுக்குள்ள முடிச்சிட்டா போதும், டோண்ட் வொர்ரி  ரிலாக்ஸ்என்கிறார். நண்பருக்கு ஃபோன் போட்டு ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாய்யா (நான் பேசிக்கொண்டிருக்கிறேன்) என்று சொல்லலாமா என்று குறுக்கு புத்தி போகிறது. தோழி டக்கென்று இவருடைய நாற்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டமே உஙக் தீம் தான் என்று கரெக்ட்டாய் எடுத்துக் கொடுக்கிறார். ஆஹா தெய்வமே குல தெய்வமே என்று அவரைப் பார்க்கிறேன். அட அப்படியா என்கிறார் கமல். கொஞ்சம் புரியவில்லை அவருக்கு. அந்த பார்ட்டிக்கு கமல் எனபது தான் தீம். நண்பர்கள் கமலின் வெவ்வேறு பட கெட்டப்பில் தனியாகவோ ஜோடியாகவோ வந்திருந்தார்கள். ஆளவந்தான் கமல்,  சண்டியர் கமல், அவ்வை சண்முகி கமல் என்று பல பேர் மெனெக்கட்டு தீவிர கெட்டப்பில் வந்து கலக்கியிருந்தார்கள். பேஸ்புக்கில் ஆல்பம் இருந்தது. இங்க பாருங்க என்று டக்கென்று பேஸ்புக் ஆல்பத்தை எடுத்து காட்டுகிறார் தோழி. கமல் புன்னகையுடன் பார்க்கிறார். அட இவ்வளவு மெனக்கெட்டு தீவிரமா வந்திருக்காங்க என்று ஆச்சரியப் படுகிறார். எனது ப்ரொபைல் பிக்ச்சர் வேறு சலங்கை ஒலி இன்விடேஷன் சீன் கெட்டப்பில் நானும் தங்கமணியும் எடுத்த ஒரு படம். அதையும் க்ளிக் செய்து பார்க்கிறார். கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் இது எது மாதிரி என்று தெரிகிறதா என்று கேட்கிறேன். கொஞ்சம் பலமாய் புன்னகைத்து தலையாட்டுகிறார். நினைத்துக் கூட பார்க்கவில்லை அந்த பார்ட்டி படங்களை எல்லாம் கமல் பார்ப்பார் நான் அவருக்கு பக்கத்திலிருந்து காண்பிப்பேன் என்று. தோழியும் என் மற்ற நண்பரும் (அவர் கணவர்)  மற்ற் வேலைகளை பார்க்க் நகருகிறார்கள். கமலுக்கும் எனக்குமான ஒன் டு ஒன் அரட்டை ஆரம்பிக்கிறது. சொக்கா சொக்கா....அத்தனையும் எனக்கேவா...

முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடியதே தெரியவில்லை. அரசியல், சினிமா, சக மனிதம் என்று பேச்சு பலவற்றைத் தொட்டது. மனிதத்தில் நிறைய உண்ர்ச்சி வசப்பட்டார்.  உங்க பாதிப்புல நமக்கு நாமே திட்டத்துல் என்னை ’உன்னால் முடியும் தம்பி கமல்’ என்று தான் சொல்லிக்கொள்வேன் என்று நைசா சொருகிவிட்டேன். உணர்ச்சி வசப் படுவதை நிப்பாடி விட்டார். ஆன்லைன் உலகத்தைப் பற்றி சொன்னேன். ப்ளாக் உலகம் பற்றியும் தற்போது ஆன்லைன் உலகில் நடக்கும் பல நல்ல விஷயங்கள் பற்றியும் சொன்னேன்.  சினிமா மட்டுமே குறைவாகப் பேசப்பட்டது.  எங்கேயும் அவரின் கம்ஃபோர்ட் சோன் தாண்டிப் பேசக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். ஆனால் அவர் வெளிப்படையாகப் பேசினார். ஆன்லைன் உலகில் சாதி அரசியலை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்றார். பதில் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டேன். தாமதமான நண்பர் வந்து சேர்ந்தார். இவ்ளோ அவசரமா சித்த மெதுவா வரப்பிடாதா சித்தப்பு என்று அவரைப் பார்க்கிறேன். கேமிரா செட் செய்து லைட்டிங் பார்த்து சவுண்ட் செக் செய்து அடா அடா அடா...எங்களின் இந்த ஆர்வம் பற்றியும் எங்கள் சோத்துக் கடமை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். சார் லண்டன் ஃபிலிம் அக்காடமியில்..என்று செல்ஃப் டப்பாவையும் சேர்த்துக் கொண்டேன். அந்தப் பல்கலைக் கழகம் அமைதியாகக் கேட்டுக் கொண்டது. கேமிராவில் சில டிப்ஸ் கொடுத்தார். தள்ளி சென்று ஒரு நிமிடம் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். வசனத்தை ப்ரிப்பேர் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். திரும்ப வந்து இங்க நின்னா சரியாக இருக்குமா  என்று கேட்டுக்கொண்டது நிறை குடம்,  அந்த அந்த அந்த ஒரு நிமிடம் வந்தது. வாழ்வின் பொன்னான நேரம் ஆக்‌ஷன் என்று குரல் கொடுக்க  - பேச்சுக்கு சொல்லவில்லை ...சிங்கம்ன்னா சிங்கம் அப்படியே வேறொரு காட்சி. குரல் அவ்வளவு தெளிவு. பே என்று பேஸ்தடித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கேமிராவில் ஹெட் ரூம் கொஞ்சம் பெட்டராய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வசனத்தின் நடுவில் சிறிது முன்னால் வந்து விட்டார். முடிந்து தான் தெரிந்தது. அவரே ஹெட்ஃபோன் வாங்கிப் போட்டுப் பார்த்து ’ஆமாம் கொஞ்சம் டைட்டாக இருக்கு இன்னொரு டேக் போலாமா’ என்றார். அட்ரா சக்க இன்னொரு டேக்கா எங்களுக்கு டபுள் ஓக்கே. இந்த முறை இடத்தை சரியாக பிக்ஸ் செய்துகொண்டார்.  திரும்பவும் ஆக்‌ஷன். திரும்பவும் சிங்க கர்ஜனை. வார்த்தை மாறாமல் பிசகாமல் கலக்கலாய் அதே டயலாக் டெலிவர். நிஜமாய் இதய்ப் பூர்வமாய் சொல்கிறேன் - வாய் வொய் கமல் இஸ் க்ரேட்.

எல்லாம் முடிந்து விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்த போது நம்பவே முடியவில்லை. முப்பத்தைந்து நிமிட ஒன் டு ஒன்.... வாவ் சான்ஸே இல்லை - பிரமிப்பு அடங்க நிரம்ப நேரம் பிடித்தது. அவருக்கு எங்காவது நம்மைத் திரும்ப பார்த்தால் நியாபகம் இருக்குமா என்று இன்று வரை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. முக்கால் வாசி என்னை மறந்து இந்த விஷயமே நியாபகம் இல்லாமல் போகலாம்  - அவருக்கு இது போல் ஆயிரம், லட்சம் ரசிகர்கள். ஆனால் எனக்கு அவர் ஒரே ஒரு கமல்.